உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

சாயங்கால மேகங்கள்

அவன் கூராயிருக்கிறான் என்பதையும் அவள் விரும்பினாள். ஒரு சிறிதும் பயப்படாமல் அபாயங்களில் சிக்கிக் கொள்ளத் துணியும் நெஞ்சுரம் அவனுக்கு இருக்கிறது. என்பதும் அவளுக்கும் பிடித்திருந்தது. அபாயங்களிலிருந்து ஒதுங்கி. விலகிச் செல்லும் ஆண்மையை விட அபாயங்களை எதிர்கொண்டு அவற்றை விலக்கிவிட்டு மேலே துணிந்து நடக்கும் ஆண்மையை அதிகம் ரசிக்க முடிந்தது

சித்ரா தனக்குள் சிந்தித்தாள். திருட்டுத் தொழிலில் இன்னொருவருக்குக் கைவாணமாகப் பயன்பட்டு வந்த ஓர் இளைஞனை அதற்காகத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பி விடாமல் திருத்தி வேலை கொடுத்த பூமியின் பெருந்தன்மை யையும் இன்று அதே பையன் சந்தேகப்படத்தக்க ஒரு சூழ்நிலையில் காணாமல் போய்விட்டபோது நமக்கென்ன வந்தது என்று வீட்டு விடாமல் பூமி அவனைத் தேடி அலைவதும் அவளைச் சிந்திக்கச் செய்தன.

உலகையே தன் சொந்தக் குடும்பமாக நினைத்து அதன் சிரமஜீவிகளுக்காகவும், கஷ்ட நஷ்டங்களுக்காகவும் அலையும் அவன் மனவிலாசம் அவளுக்குள் பிரியத்தை வளர்த்தது. தன்னையே விரும்பிச் சுற்றுகிற ஆண் மகனைத்தான் சில பெண்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் சித்ராவோ பிறருடைய சிரமங்களைத் தீர்ப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருக்கிற அவனை விரும்பினாள்.

பூமி பயமே இல்லாதவனாயிருந்தான். அவனுக்காக அவள் பயப்பட்டாள். அவன் கவலைப்படத் தெரியாதவனாக இருந்தான். அவனுக்காக அவள் கவலைப்பட்டாள். அவன் சுயநலமே இல்லாதவனாக இருந்தான். அவனுக்காக அவள் சுயநலத்தோடு சிந்தித்தாள். இந்த அக்கறை தன்னையறியாமலே தன்னுள் எப்படி ஏற்பட்டு வளர்ந்ததென்று அவளுக்கே புரியவில்லை.

வெளியில் எதுவுமே நடக்காதது போல் ஸ்கூட்டரைக் கொண்டு வந்து லெண்டிங் லைப்ரரி பரமசிவத்தின் தம்பியிடம் கொடுத்துவிட்டு மெஸ்ஸுக்குள் சென்றான் பூமி.