அந்திம காலம்/அந்திம காலம் - 8

விக்கிமூலம் இலிருந்து

மாலை 6 மணியளவில் போன் அடித்தது. சுந்தரம் சென்று எடுத்து "ஹலோ" என்றார்.

"வேர் இஸ் தெட் பிச்?" என்றது சிவமணியின் முரட்டுக் குரல்.

அருவருப்போடு கேட்டார்: "யார் சிவமணியா? உன் மனைவியக் கேக்கிறியா?"

"கூப்புடுங்க அவள" என்றான்.

"அவ இப்ப இங்க இல்ல" என்றார்.

"ஓ, போனுக்கு வரமாட்டாளா! நேர்ல வந்து பேசிக்கிறன்னு சொல்லுங்க... மாமா, இப்பத்தான் கோலாலம்பூர்ல இருந்து புறப்பட்றேன். பத்து மணி போல வந்துடுவேன். அவள அங்கயே வெயிட் பண்ணச் சொல்லுங்க!" போனைத் துண்டித்தான்.

மெதுவாகப் போனைக் கீழே வைத்தார். அவன் தனது கைத் தொலைபேசியில் இருந்து பேசுகிறான் என்பதை ஊகித்துக் கொண்டார். அவன் குரலில் மூர்க்கமும் முரட்டுத் தனமும்தான் இருந்தன. தன் மனைவியுடன் சமாதானம் பேச அவன் வரவில்லை. சண்டை போடுவதற்காகவே வருகிறான். வந்தவுடன் தன் மனைவி இங்கு இல்லை எனத் தெரிந்ததும் என்ன மாதிரி ஆர்ப்பாட்டங்கள் பண்ணப் போகிறானோ என அஞ்சினார்.

ஒரு நிமிடம் நண்பர் ராமாவைக் கூப்பிட்டு துணைக்கு இருக்கச் சொல்லலாமா என நினைத்தார். ஆனால் அடுத்த நிமிடம் மனதை மாற்றிக் கொண்டார். ராமாவுக்கு இன்று காலை கொடுத்த தொல்லைகள் போதும். இனியும் அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என முடிவு செய்தார். மேலும் இது என் குடும்ப விவகாரம். என் சண்டை. நானாகத் தனித்துத்தான் இதை நடத்த வேண்டும். அடுத்தவர் துணையை நாடுவது பெருமையல்ல.

சோர்ந்து டெலிவிஷன் முன் வந்து உட்கார்ந்தார். மத்தியானம் கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. மாத்திரைகளின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். உடல் முழுக்க வலிகள் குறைந்திருந்தன. சோர்வாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தது.

உட்கார்ந்திருந்த நாற்காலியில் முதுகுக்கு ஒரு தலையணையை முட்டுக் கொடுத்துக் கொண்டார். முதுகுக்கு அந்தச் சுகம் தேவைப் பட்டது. தான் விரைவாகக் கிழமாகிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.

டெலிவிஷனில் ஏதோ சீன சண்டைப் படம் ஓடிக் கொண்டிருந்தது. பரமா அங்கு உட்கார்ந்து அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் தன்னை மறந்திருந்தான். "பரமா" என்று கூப்பிட்டார். அவன் டெலிவிஷனில் வைத்த கண் மாறாமல் பின்னோக்கி நடந்து அவரிடம் வந்தான். அவனைத் தூக்கி மடியில் உட்கார வைத்தார். காற்று போல லேசாக இருந்தான்.

அவன் கண்கள் படத்திலேயே இருந்தன. "என்ன பாக்கிற பரமா?" என்று கேட்டார்.

"குங் ஃபூ" என்றான். டெலிவிஷனில் ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டிப் பறக்கும், இடுப்பில் கருப்புத் துண்டு கட்டியிருந்த சீன வீரனின் உதையில் எதிரிகள் சிதறி விழுந்து கொண்டிருந்தார்கள்.

"இந்தப் படம் உனக்கு விளங்குதா கண்ணு?" என்று கேட்டார்.

"ஹீ இஸ் கில்லிங் ஆல் த பேட் பீப்பல்" என்றான் பரமா. ஆமாம். விளங்கிக் கொள்ள அது போதும். இந்த டெலிவிஷன் திரை உலகில் எல்லாப் பாத்திரங்களும் சுலபமாக நல்லவன் கெட்டவன் எனத் தெரிகிறார்கள். கருப்பும் வெள்ளையுமாய் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறார்கள். வெள்ளை ஹீரோ கருப்பு வில்லன்களை அடித்து வீழ்த்துவார். இங்கு பண்போ பச்சாதாபமோ தேவையில்லை. வில்லன்கள் எந்த வகையிலும் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல. உருவத்தால் கூட அவர்கள் அழகாக இருக்க மாட்டார்கள். ஆனால் ஹீரோ எப்போதுமே அழகாக இருப்பான். இந்த டெலிவிஷன் மொழியைப் புரிந்து கொண்டால் பேச்சு மொழி பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தாம் சின்ன வயதில் ஆங்கில மொழி கொஞ்சமும் தெரியாத நிலையில் "டார்ஸன்" படங்களும் "கேப்டன் அமெரிக்கா" படங்களும் பார்த்து அனுபவித்ததை நினைத்துக் கொண்டார். அங்கு மொழி புரியாமலேயே கதைகள் தௌிவாக இருக்கும். சண்டைகள் பலமாக இருக்கும். நல்லவனான ஹீரோ எப்போதும் வென்று அப்பாவி மக்களை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவான். ஜேன் தொல்லையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் எங்கிருந்தும் வந்து காப்பாற்றி விடுவான். ஜேன் அவனைக் காதல் ஒழுகும் கண்களால் பார்த்து பார்ப்பவர்கள் உள்ளத்தில் பரவசத்தை ஏற்படுத்துவாள்.

வாழ்க்கை இந்தப் படங்களைப் போல் இருந்தால் எத்தனை எளிதாக இருக்கும்! ஜேன் எந்த நாளிலும் வில்லன்களைக் காதலிக்க மாட்டாள். மிருகங்கள் கூட ஹீரோ பக்கத்தில்தான் இருக்கும். ஹீரோவாக இருக்கும் யாரும் வில்லன்களாக மாறமாட்டார்கள்.

ஆனால் வாழ்க்கையில் சிவமணி போன்றவர்கள் ஹீரோவாகக் காட்சி தந்து வில்லன்களாக மாறிவிடுகிறார்கள். ஜேன்களுக்கு முதல் பார்வையில் இவர்கள் ஹீரோக்களா வில்லன்களா என்று சொல்ல முடிவதில்லை.

ஆனால் அந்த வில்லன்களோடு போரிட்டு ராதா போன்ற ஜேன்களைக் காப்பாற்ற நிஜ வாழ்க்கையில் டார்ஸன் போன்ற ஹீரோக்கள் இல்லை. அநேகமாக நிஜ உலகில் ஹீரோக்கள் எங்குமே இல்லை. அப்படி இல்லாததால்தான் டார்ஸன், பேட்மேன், சூப்பர்மேன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி போன்றோர் போடும் பல்வேறு வேடங்கள் போன்ற கற்பனைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு மனித குலம் சுகம் கண்டு கொண்டிருக்கிறது. நிஜ உலகில் ஹீரோக்கள் போலீஸ்காரன், வக்கீல், நீதிபதி போன்று சம்பளத்துக்கு வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பாதிப் பேர் ஹீரோ வேடத்தில் உள்ள வில்லன்களாகத்தான் இருக்கிறார்கள்.

டெலிவிஷனில் சண்டைகள் ஓய்ந்து சீன ஹீரோவின் காதலி அவனருகில் அணைந்து நின்று அவனைச் சிருங்காரப் பார்வை பார்த்தாள். அவர்கள் இதழ்கள் நெருங்கி வரும் நேரம் தணிக்கையாளரின் கத்தரிப்பில் காட்சி மாறியது.

சண்டை முடிந்து சிருங்காரம் ஆரம்பித்ததும் பரமாவுக்கு படம் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போய் விட்டது. "தாத்தா, ஐ வான்ட் சொக்கலேட்" என்றான்.

"சொக்கலேட் வேணுன்னா பாட்டியப் போய்க் கேளேன்!" என்றார்.

"ஷீ வில் ஸ்கோல்ட்" என்றான்.

"சரி. பரமா! நான் எடுத்துத் தாரேன். ஆனா அதையே தமிழ்ல கேளு பாப்போம்" என்றார்.

"ஹௌ?"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வேணும்!"

"தாத்தா! எனக்கு சொக்லேட் வான்ட்"

"இல்ல, சொக்லேட் வேணும்!"

"சொக்லேட் வேணும்" என்றான் மழலையில்.

தட்டிக் கொடுத்தார். எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்று பிரிட்ஜைத் திறந்து சொக்லட் தேடினார்.

"என்ன தேட்றிங்க?" என்று கேட்டாள் ஜானகி.

"பரமாவுக்கு சொக்லட் வேணுமாம், ஜானகி!" என்றார்.

"ஐயோ குடுக்காதீங்க! சாப்பிட்டு சாப்பிட்டு இருமுறான். வாந்தி கூட எடுக்கிறான்!" என்றாள் ஜானகி.

"ஒரு சின்னத் துண்டு ஜானகி. ஆசையா கேக்கிறான் பாரு!"

ஒரு சிறிய துண்டு உடைத்துக் கொடுத்தாள். "இப்படியே சீனியா குடுத்துப் பழக்கி வச்சிருக்காங்க. பிள்ளைக்கு உடம்பு ரொம்ப கெட்டிருக்குங்க!" என்றாள்.

"அதுக்காக உடனே நிறுத்திட முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா நிறுத்துவோம்!" என்றார்.

சொக்கலேட்டுடன் பரமாவை நோக்கித் திரும்பிய போது தலை கிர்ரென்று ஒருமுறை சுற்றி நின்றது.


      • *** ***

பத்தரை மணிக்குள் தன் கைத் தொலை பேசியிலிருந்து மூன்று முறை அழைத்து விட்டான். தஞ்சோங் மாலிமில் இருக்கிறேன், தாப்பாவில் இருக்கிறேன், புக்கிட் மேராவில் இருக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் ராதாவோடு பேச வேண்டும் என்று அடம் பிடித்தான். "நேராக வா பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லிச் சமாளித்தார். ஒரு முறை பரமாவை அழைத்துப் பேசினான். பேசிப் போனை வைத்த பரமா "மை பாதர் சேய்ஸ் ஹீ இஸ் கமிங்" என்று மட்டும் சொன்னான். அப்பனைக் காணுகின்ற ஆனந்தம் ஒன்றும் அவன் முகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

பதினொரு மணிக்குத்தான் அவனுடைய பாஜேரோ ஜீப் அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. ஒரு குட்டி யானை போல இருந்த அந்த ஜீப்பின் இரண்டு விளக்குகளும் தீப்பந்தங்கள் போல் இருந்தன. அந்த விளக்கின் பிரகாசத்தில் சுந்தரத்தின் கண்கள் குறுகிப் போயிருக்க ஒரு ராட்சச நிழல் போல ஜீன்சுடன் கீழே இறங்கினான் சிவமணி. கட்டி வைக்கப் பட்டிருந்த ஜிம்மி அவனைப் பார்த்துக் குரல் வெடிக்கக் குலைத்தது.

ஜீப்பின் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே வந்தான். பெண்கள் அனைவரும் உள்ளே போய்விட்டார்கள். பரமா தூங்கி விட்டிருந்தான்.

"வா சிவமணி" என முகமனுக்காக வரவேற்றார் சுந்தரம்.

"எங்க மாமா என் டியர் வைஃப்? வரச் சொல்லுங்க!" என்றான்.

"உட்காரப்பா! சாப்பிட்டியா, ஏதாகிலும் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லட்டுமா?" என்று கேட்டார். அவனைப் போல மொட்டையாக விவகாரத்தை ஆரம்பிக்கத் தயங்கினார்.

"ஒண்ணும் வேண்டாம். வர்ர வழியில சாப்பிட்டுட்டேன்!" என்றான். "எங்க போயிட்டா ராதா? ஒளிஞ்சிக்கிட்டிருக்காளா? பிரேம் எங்கே?" என்று கேட்டான்.

"பிரேம் தூங்கிட்டான். எழுப்பட்டுமா?" என்றார்.

"வேணாம். அப்புறம். ராதாவ வரச்சொல்லுங்க" என்றான்.

நாற்காலியில் அழுந்த உட்கார்ந்து கொண்டார். "ராதா இங்க இல்லப்பா!" என்றார்.

"எங்க போயிட்டா?" ஆத்திரத்துடன் கேட்டான்.

"எனக்கு விவரமெல்லாம் தெரியாது. கடிதம் எழுதி வச்சிட்டுப் போயிருக்கா. அதுதான் தெரியும்!" கடிதத்தை அவனிடம் நீட்டினார். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தான் தயங்கித் தயங்கிச் சொல்வதை விடக் கடிதம் தௌிவாகச் சொல்லும். அவள் வார்த்தைகளிலேயே அவனுக்கு உறைக்குமாறு செய்தி போய்ச் சேரட்டும் என்றிருந்தார்.

படித்து முடித்துக் கடித்ததைக் கசக்கி எறிந்தான். "பிளடி பிச், பிளடி பிச்..." என்று கத்தினான். எழுந்து அங்குமிக்கும் நடந்தான். உட்கார்ந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்திருந்தான். அப்புறம் தலையைத் தூக்கி அவரை முறைத்தான். இதற்கிடையே ஜானகியும் அன்னமும் ஒன்றாக வந்து ஹாலில் உட்கார்ந்தார்கள்.

"பாத்திங்களா உங்க மக செஞ்ச வேலய! பாத்திங்களா என்ன தேவடியாத் தனம் பண்ணியிருக்கன்னு! பாத்திங்களா அத்தை! உங்களுக்கெல்லாம் நல்லா இருக்கா இது?" என்று கத்தினான்.

ஜானகி பேசினாள். "எங்கள ஏம்ப்பா சத்தம் போட்ற? எங்களுக்கு இது பத்தி ஒண்ணுமே தெரியாது. உங்க புருஷன் பெஞ்சாதிக்குள்ள உறவக் காப்பாத்திக்க உங்களால முடியில. இதுக்கு வௌியார் நாங்க என்ன பண்ண முடியும்? எங்களுக்கும் கடிதத்தப் பாத்து அதிர்ச்சியாத்தான் இருக்குது!" என்றாள்.

"பொம்பளயா அவ, பொம்பிளயா? பேய். வேசி!" என்றான்.

சுந்தரம் சொன்னார்: "பொறுமையா பேசு சிவா. அக்கம் பக்கத்தில உள்ளவங்க கேட்டா நல்லா இருக்காது. குடும்பத்துக்குத்தான் அவமானம்!" என்றார்.

"எங்க இருக்கு குடும்பம்? அதத்தான் தொலைச்சிட்டுப் போயிட்டாளே!" என்று மீண்டும் கத்தினான்.

"குடும்பம் தொலைஞ்சதுக்கு அவ மட்டுமா காரணம்? நீ நல்லபடி இருந்திருந்தா விஷயம் இவ்வளவு தூரம் போயிருக்குமா?" என்றாள் ஜானகி.

"நான் என்ன பண்ணிட்டேன் இவள? புதிசா ஒரு கம்பெனிய ஆரம்பிச்சி அதில போட இவளக் கொஞ்ச பணம் கடனா கேட்டேன். குடுக்க மாட்டேன்னுட்டா! அதனால கொஞ்சம் சத்தம் போட்டேன். அவ்வளவுதான!" என்றான்.

"இதுக்கு முன்னால ஆரம்பிச்ச கம்பெனி எல்லாம் என்னப்பா ஆச்சி? இதுக்கு முன்னால அவகிட்ட இருந்து வாங்கின கடன் எல்லாம் என்ன ஆச்சி?" என்று ஜானகி கேட்டாள்.

"அத்த, வியாபாரத்தில நட்டம் லாபம்கிறது எல்லாருக்குமே உள்ளதுதான! முதல் கம்பெனி நொடிச்சிப் போச்சின்னுதான் இரண்டாவது கம்பெனி ஆரம்பிச்சேன்!" என்றான்.

பொறுமையாக இருந்த சுந்தரம் கேட்டார்: "அவ காசு குடுக்காதத்துக்காக நீ அவள அடிச்சதா சொல்லியிருக்காளே! அது உண்மையா?"

அவரை முறைத்துப் பார்தான். "ஆத்திரத்தில அப்படி இப்படி தட்டியிருப்பேன். அது ஒரு பெரிசா?"

"சிகரெட்டால சூடு வச்சியா?" என்று கேட்டார்.

"நோ, தவறிப் பட்டிருக்கலாம்!" என்றான்.

"சிவமணி, இந்த மாதிரி ஒரு மனைவிய நடத்திறது நாகரிகமாப்பா?" என்று கேட்டார்.

அவனுக்குக் கோபம் வெடித்துக் கொண்டு வந்தது.

"அவ மட்டும் ரொம்ப ஒழுங்கா! பாருங்க ஒரு வெள்ளக்காரனோட ஓடிப் போயிருக்கா! இதுதானா நீங்க புள்ளய வளத்த லட்சணம்?" என்று கூவினான். தன் குறைகள் வௌிப்பட ஆரம்பித்தவுடன் கூச்சலால் அதை முழுகடிக்க முயன்றான்.

"நாங்க வளர்த்த லட்சணத்தப் பாத்துத்தானப்பா நீ விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட! நீ அவள வச்சிருந்த லட்சணந்தான் அவள இந்த நெலமைக்குத் தள்ளியிருக்கு. நீ அவள அன்பா வச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?" என்றார் சுந்தரம். ராதாவின் சிகரெட் சுட்ட தளும்புகள் நினைவுக்கு வந்தன. அதைச் செய்த இந்த மிருகமா வளர்த்த லட்சணம் பற்றிப் பேசுகிறது?

மனத்தைப் பற்றி நின்ற வெறித் தனமான கோபத்தில் உடம்பின் உபாதைகள் மறந்திருந்தன. ஒழுக்கத்தையும் நெறிகளையும் வாழ்நாள் முழுதும் போற்றி நின்ற என்னை ஒரு மிருகமா கேள்வி கேட்பது? என்ற மூர்க்கமே மனதில் நின்றது.

"மாமா, நான் இவளச் சும்மா விட மாட்டேன். எங்க இருந்தாலும் தேடிப் பிடிப்பேன் பாருங்க. பிடிச்சி இவ தலை முடிய பிடிச்சி இழுத்து உதைக்கறனா இல்லியா பாருங்க!" என்றான்.

எழுந்து நின்றார். குரலை உயர்த்தினார்: "போடா. பிடிச்சி இழு! உதை! ஒன்னப்போல பண்பில்லாத மிருகங்களுக்கு வேற என்ன தெரியும்? ஆனா இந்த நாட்டில சட்டம்னு ஒண்ணு இருக்கு. நீ அப்படியெல்லாம் செய்ய அது விட்டுடாது. உன்னக் கம்பி எண்ண வைக்காம விடாது!" என்றார்.

அறை வாசலில் நிழல் தெரிந்தது. பரமா கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றான். ஜானகி போய் அவனை அணைத்துக் கொண்டாள்.

"கம் ஹியர் மை போய்!" என்று சிவா அதட்டிக் கூப்பிட இயந்திரம் போல் அவன் அருகே போய் நின்றான். முகத்தில் பயமும் கலவரமும் இருந்தன.

"உங்க அம்மா என்ன செஞ்சிருக்கா பாத்தியா பிரேம்?" என்று அவனைக் கேட்டான் சிவா.

"சிவா. குழந்தைக்கு நாங்க ஒண்ணும் சொல்லல. அவன பயமுறுத்தாதே!" என்றார் சுந்தரம்.

"வேர் இஸ் மை மம்மி?" என்று கேட்டு அழுதான் பரமா.

"ஷீ இஸ் நோட் யுவர் மம்மி! ஷீ இஸ் எ பிச்!" என்றான் சிவா.

சுந்தரம் பரமாவை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டார். பரமா அவர் மடியோடு ஒட்டிக் கொண்டு பலமாக இருமினான். பயந்து போய் இருந்தான் எனத் தெரிந்தது. என்ன ஜென்மம் இவன்? பிள்ளையிடமா இப்படிப் பேசுவது? இத்தனை பண்புக் கேடனாகவா மாறிவிட்டான்? ராதா இவனை விட்டு ஓடிப் போனது முற்றிலும் சரி எனப்பட்டது அவருக்கு!

"சிவா. இதெல்லாம் என்ன பேச்சு? அதுவும் பச்சைக் குழந்தை முன்னால. உனக்கும் உன் மனைவிக்கும் உள்ள சண்டைய உங்களுக்குள்ள போட்டுக்குங்க. குழந்தய அதில இழுக்க வேணாம்!" என்றார்.

அவன் குழந்தையை மறந்து விட்டான். "மாமா! இவள நான் கோர்ட்டுக்கு இழுக்காம விடமாட்டேன். இது அடல்டரி. இவ மேல கேஸ் போட்டு லட்ச லட்சமா நஷ்ட ஈடு கேக்கப் போறேன். இவ கத ஊர் முழுக்க சிரிக்கட்டும்!" என்றான்.

இது வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்னம் இப்போது கேட்டாள்: "ஏம்பா சிவமணி! இந்தக் கதையெல்லாம் கோர்ட்டுக்குப் போனா ஊர் அவள மட்டும்தான் பாத்துச் சிரிக்குமா? நீ அவளப் பண்ணின கதையெல்லாம் கேட்டு உன்னப் பாத்து சிரிக்காதா?"

அன்னத்தையும் முறைத்துப் பார்த்தான். "ஓஹோ எல்லாரும் ஒரு கேங்கா என் மேலேயே குத்தம் சொல்றிங்களா? அவ உங்க ஊட்டுப் பொண்ணுக்கிறதினால தலயில தூக்கி வச்சிட்டு ஆட்றிங்களா?" என்றான்.

"நாங்க தலையில தூக்கி வச்சிக்கிலன்னாலும், ஒன்னப் போல அவளத் தரையில போட்டு மிதிக்கத் தயாரா இல்ல. அவள் ஒன்னோட கொடுமை தாங்காமத்தானே இப்படி பண்ணியிருக்கான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தியா?" என்று கேட்டாள் அன்னம்.

அவன் எழுந்து நின்றான். "நான் போறேன். உங்களோட பேசி என்ன பிரயோஜனம்? நான் யாருங்கிறத உங்களுக்கெல்லாம் காட்றேன்" என்றான். திடீரென பரமாவைப் பார்த்தான். "கமான் போய். போலாம் வா!" என்றான்.

சுந்தரம் திடுக்கிட்டார். பரமா அவர் மடியில் இன்னும் ஆழமாகப் பதிந்தான்.

"அவன ஏன் கூப்பிட்ற சிவா?"

"அவன் என் மகன்! அந்த வேசையோட அவனுக்கு ஒரு சம்பந்தமும் வேண்டாம்! அவன இங்கிருந்து வௌியேத்த வேணும்!" என்றான்.

"வௌியேத்தி எங்க கொண்டி வச்சிக்குவ? வீட்டில அவன யார் பாத்துக்குவா?"

"அதப்பத்தி உங்களுக்கென்ன? என் மகன நான் எப்படியாவது வளத்துக்குவேன்!" என்றான்.

"தாத்தா, ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று அழுதான் பரமா. அவன் தொண்டை விக்கியது. இருமலும் சளியுமாக வந்தது.

"நீ இப்ப என்னோட வாரியா, இல்ல இழுத்து ரெண்டு போடட்டுமா?" என மிரட்டினான் சிவா.

அவனை இறுக அணைத்துக் கொண்டு பேசினார். "சிவா, உன் கோவத்தில உன் பிள்ள வாழ்க்கைய பாழாக்காத! எப்படி பயந்து போயிருக்கான் பாரு! நீ ஒருத்தனா அவன வளர்க்க முடியாது. அவன் எங்களோட இருக்கட்டும். உங்க விவகாரமெல்லாம் முடிஞ்சவுடன அழச்சிக்கிட்டுப் போ!" என்றார்.

கடைசி வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் பயந்தான் பரமா. "நோ, ஐ டோன்ட் வான்ட் டு கோ!" என்று கால்களை உதைத்துக் கொண்டு அலறினான்.

விருட்டென்று எழுந்து வௌியே போனான் சிவா. வாசலிலிருந்து கத்தினான். "ஓக்கே! கொஞ்ச நாள்தான் மாமா! எனக்கு இன்னொரு பொம்பளயத் தேடிக்கிட்டு பிரேமை என்னோட அழச்சிக்குவேன். அது வரைக்கும் இங்க விட்டு வைக்கிறேன். ஆனா உங்க மகளயும் உங்க குடும்பத்தயும் சும்மா விட்ற மாட்டேன். கோர்ட்டில ஏத்தி சந்தி சிரிக்க வைக்காம விட மாட்டேன்! பாத்துக்கிங்க!"

பாஜேரோவில் பாய்ந்து ஏறினான். என்ஜின் சீறியது. இரண்டு விளக்குகளும் நெருப்பைக் கக்கின. வீட்டின் உள்ளே வௌிச்சம் உஷ்ணமாகப் பாய்ந்தது. ரிவர்சில் எடுத்தான். ரோட்டில் டயர்கள் தேய வேகமாக ஓட்டினான். ஜிம்மி சங்கிலியில் திமிறிக் கொண்டு விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது.

ஜானகி வந்து பரமாவைத் தூக்கிக் கொண்டாள். அவன் விம்மியவாறே இருந்தான். மூக்கில் சளியும் வாயில் எச்சிலும் ஒழுகிக் கொண்டிருந்தன. ஜானகி துடைத்துத் தலையைக் கோதி விட்டாள். அவனைக் கொண்டு படுக்கையில் போட்டு ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள்.

அன்னமும் சுந்தரமும் மட்டும் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். சுந்தரத்தின் கைலி பரமாவின் கண்ணீரிலும் சளியிலும் நனைந்திருந்தது. மாற்ற வேண்டும் என நினைத்தார். ஆனால் எழுந்திருக்கச் சக்தியும் மனமும் இல்லை.

அந்த வீட்டுக்குள் ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. புயல் ஓய்ந்த நிம்மதி இருந்தாலும் அது விளைத்த சேதங்களை அனைவரின் மனங்களும் அசை போட்டுக் கொண்டிருந்தன. மீண்டும் புயல் வருமோ, போன சிவா தன் ராட்சச பாஜேரோவில் திரும்பி வந்து விடுவோனோ என்பதைப் போல சுந்தரம் கொஞ்ச நேரம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மெதுவாக எழுந்து வௌியே சென்று கேட்டை அடைத்துப் பூட்டினார். ஜிம்மியை அவிழ்த்துவிட வந்த போது அது அவர் கையையும் முகத்தையும் பாய்ந்து பாய்ந்து நக்கியது. அவிழ்த்து விட்ட பின் குதித்துக் குதித்து அவரைச் சுற்றி வந்தது. அதனிடமிருந்து மீண்டு சுந்தரம் உள்ளே வந்து கதவையும் சாத்தினார்.

அன்னம் இருந்த இடத்திலிருந்து கேட்டாள்: "எப்படித் தம்பி இப்படி ஒரு முரடன் நம்ப குடும்பத்தில வந்து சேந்தான்?"

சுந்தரம் சிரித்தார். "என்ன பண்ணுறது அக்கா! நான் செஞ்ச பாவமா, அல்லது ராதா செஞ்ச பாவமோ தெரியில! யாரையோ தண்டிக்கத்தான் இவன தெய்வம் நம்ப குடும்பத்துக்கு அனுப்பியிருக்கு!" என்றார். அன்னம் பேசவில்லை.

தண்டிக்கப் படுவது தானாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த நோய், இந்த முரட்டு மருமகன் எல்லாம் அந்தத் தண்டனையின் பகுதிகள்தான் எனத் தோன்றியது. உடலின் களைப்பு ஆளைத் தள்ளிற்று.

"அக்கா, நான் போய் படுக்கிறேன்!" என்றார்.

"ஒடம்பு ஏதாவது செய்யிதா?" என்று கவலையுடன் கேட்டாள் அன்னம்.

"எப்போதும் செய்றதுதான். புதிசா என்ன செய்ய இருக்கு? ஆனா உடம்பு நோய விடக் களைப்புத்தான் அதிகமா இருக்கு!" என்றார்.

"சரி போய் தூங்கு தம்பி!" என்று அன்னம் எழுந்து உள்ளே போனாள். போய் படுப்பது எளிது. ஆனால் தூக்கம் வருமா எனத் தெரியவில்லை. தெய்வம் எல்லாம் தண்டித்து முடிந்திருந்தால் தூக்கம் கொடுக்கும். ஆனால் தண்டனைகள் மிச்சம் இருந்தால் பஞ்சணை கொடுத்தாலும் தூக்கம் கொடுக்காது. உயிர் கொடுத்தாலும் சுகம் கொடுக்காது. மனம் கொடுத்தாலும் நிம்மதி கொடுக்காது.


சுந்தரம் மெதுவாகப் படுக்கை நோக்கி நடந்தார்.


      • *** ***

தூக்கம் வரவில்லை. கண்கள் சொருகிச் சொருகிப் போனாலும் மூடும் சமயத்தில் எங்காவது வலி வந்தது. ஒரு நேரம் முன் தலையில், ஒரு நேரம் பிடறியில், முதுகில், வயிற்றில் இப்படியே மாறி மாறி. புரண்டு புரண்டு படுத்தார். வலியைத் திசைமாற்ற முயன்று தோற்றார்.

சிவாவிடம் சண்டை போடும் மோது மட்டும் வலி போன இடம் தெரியவில்லை. அப்போது அவனிடம் சண்டையிட எல்லா உயிர்ச் சக்திகளையும் உடல் திரட்டி சேமிப்பில் வைத்திருந்தது. அவனை முறியடிக்க வேண்டும் என்ற வெறியில் மற்ற எல்லா வலிகளையும் தள்ளி வைத்திருந்தது. இப்போது அந்தப் போர்க் களத்தில் வௌி எதிரி மறைய உள் எதிரிகள் உக்கிரமாகத் தலை தூக்கி விட்டார்கள்.

ஒரு முறை வயிறு குமட்ட குளியலறையில் சென்று வாந்தியெடுக்க முயன்றார். ஆனால் ஒன்றும் வரவில்லை. அந்த முயற்சியில் தொண்டை வறண்டு கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது. முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தார்.

அன்னமும் ஜானகியும் சமயலறையில் உட்கார்ந்து மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அன்றைய நிகழ்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லி ஜானகி அழுகிறாளோ? இந்த இரண்டு நாட்களில் ஜானகிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சிகள்தான். முதலில் ராதாவின் சோகம், அப்புறம் தனது நோய், காலையில் ராதா வீட்டைவிட்டு ஓடிய செய்தி, பரமா திடீரென்று அவள் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டது, இப்போது இந்த சிவமணி எழுப்பிய புயல்... ஒரே நாளில் இத்தனை அடுக்கடுக்கான அதிர்ச்சிகளா? அவராலேயே நம்ப முடியவில்லை. அன்னம் அவள் கவலைகளுக்கு ஒரு வடிகாலாக வந்திருக்கிறாள். பேசட்டும். பேசித் தணியட்டும் என நினைத்துக் கொண்டார்.

இந்த கரிய இரவுகள் எப்போது விடியும்? தனக்கு விடியல் உண்டா? அல்லது இது எல்லையில்லாத இருளாகித் தன்னை முற்றாக விழுங்கிக் கொள்ளுமா? அப்படித்தான் இருக்க வேண்டும். இது சாயங்காலம், தான் சாயுங் காலமாகத்தான் இருக்க வேண்டும்.

தலையில் எரிமலைகள் வெடிக்க ஆரம்பித்திருந்தன. படுத்தவாறே தலையை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்தார். மதர் மேகியின் நினைவு வந்தது. "ஓ அன்னையே, ஏன் என் சிகிச்சையைத் தள்ளிப் போட்டாய்?" என மனதுக்குள் கேட்டார். அந்த வெளுத்த கருணை உள்ள முகத்தை நினைத்தார்.

"ஓ என் அன்பு மகனே, உன்னைப் போல் ஓராயிரம் பேருக்குப் புற்று நோய் இருக்கிறது. அத்தனையும் கர்த்தரின் மந்தைகள். அவற்றைப் பார்த்துக் கொள்ள என் தந்தை எனக்கு ஆணையிட்டுச் சென்றிருக்கிறார். நீ ஆயிரம் ஆடுகளில் ஒரு ஆடு. உனக்காக மற்ற எல்லா ஆடுகளையும் நிராகரிக்க முடியுமா? உன் முறை வரும் மகனே, பொறுத்திரு, பொறுத்திரு" என்று மதர் மேகி சொல்வதாகக் கற்பனை செய்து கொண்டார்.

வலி முதுகில் இறங்கியது. வயிற்றுக்குள் நுழைந்தது. குடலைப் பிடித்துத் திருகியது. கல்லீரலைப் பிடித்துப் பிசைந்தது. வலியின் உச்சத்தில் "அம்மா, அம்மா" என முனகினார். ஜானகி பக்கத்தில் இருந்தால் ஆறுதலாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அவளை வாய்விட்டுக் கூப்பிட மனம் வரவில்லை. அது பயங்கொள்ளித் தனம் எனத் தோன்றியது. என் நோய் என்னுடன்... ஜானகியைக் கூப்பிட்டு ஏன் வருத்த வேண்டும் என்று எண்ணினார்.

இருந்தாலும் இந்த வேதனைக்கு அவள் மார்பு ஒத்தடமாக இருக்கும். அவள் உடம்புச் சூட்டில் இந்த வலி பாதியாகத் தணியும். அவள் புடவைத் தலைப்பில் இந்த வலி வழித்து விடப்படும். அவள் துணைக்காக ஏங்கினார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு "அம்மா, அம்மா" என முனகினார்.

பட்டுப் போன்ற கரங்கள் அவர் முதுகைத் தடவின. அப்புறம் பட்டுப் பட்டென்று தட்டின. ஜானகியா தட்டுகிறாள்?

"தாத்தா, வை ஆர் யூ கிரையிங்?" என்று கேட்டான் பரமா.

எப்படி வந்தான்? தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து விட்டானா?

"பரமா! என்ன செய்ற இங்க?" என்று கேட்டார்.

"ஐ கெனோட் ஸ்லீப்!" இருமியவாறே சொன்னான். அழுதிருக்கிறான் என்று தெரிந்தது.

"ஏன் கண்ணு?"

"ஐ எம் ஃபிரைட்டன்ட்!" என்றான்.

அவனை அணைத்துக் கொண்டார். ஒரு சிறிய புறாக் குஞ்சு போல அடங்கிக் கொண்டான். இன்று நடந்த சம்பவங்களில் இந்தப் பிஞ்சு மனம் எப்படி வெம்பிப் போயிருக்கும் என நினைத்துப் பார்த்தார். வௌியில் சொல்ல முடியாமல் எத்தனை பயங்கரமான கரிய சிந்தனைகள் அந்த மனத்தில் ஓடியிருக்க வேண்டும்?

நேற்று அவன் அம்மா அவனைக் கைப்பிடியாக இழுத்துக் காரில் ஏற்றி பினாங்குக்குக் கொண்டு வந்தது; இன்று காலை அவள் மறைந்து போனது; அப்பறம் இந்த ஆஸ்பத்திரிப் பயணம்; இன்றிரவு அவன் அப்பன் வந்து படுத்திய கொடுமை; பரமா, எப்படி தாங்கியிருந்தாய்? எப்படித் தாங்கியிருந்தாய்?

அவனை இறுக அணைத்துக் கொண்டார். தாய்க் கோழி போல கைகளுக்குள் அடக்கிக் கொண்டார். அவன் அவர் நெஞ்சுக்குள் ஆழமாக முகம் புதைத்திருந்தான்.

கொஞ்சம் திமிறி முகம் தூக்கிச் சொன்னான்: " தாத்தா, டோன்ட் லெட் மை ஃபாதர் டேக் மீ எவே!"

"நோ டார்லிங்! ஒரு நாளும் அவன் கிட்ட ஒன்ன ஒப்படைக்க மாட்டேன்! நீ தாத்தாகிட்டயே படுத்துக்கோ, படுத்துக்கோ!" என்று மீண்டும் தன் அணைப்பில் இறுக்கினார். அவன் கொஞ்ச நேரம் இருமிக் கொண்டிருந்து தூங்கிப் போனான். அவனை அணைத்திருக்கும் போது அவருடைய வலிகள் அனைத்தும் மறந்து போயிருந்தன.