சாயங்கால மேகங்கள்
255
யான்னு இன்னும் அவங்களாலே கண்டு பிடிச்சிருக்க முடியாது அதனாலேதான் இதுவரை ஆபத்து எதுவும் வரலே.”
“கண்டு பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். அதுக்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? நாம் எந்தத் தவறான காரியத்தையும் செய்து கொண்டிருக்கவில்லையே?”
“தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவங்களும் நல்லது செய்ய முயல்கிறவர்களும்கூட ஆகாதவங்கதான்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும்.”
இப்படி அவர் கூறியது பூமிக்கு மேலே என்ன செய்வதென்று சிறிது மலைப்பாயிருந்தது. கொன்று புதைக்கப் பட்டிருக்கும் பையனே தான் தேடிவந்திருக்கும் பையனாயிருக்கலாமோ என்று சந்தேகம் தீர்வதற்கு உதவ வேண்டும் என்று அவரிடம் மன்றாடினான் பூமி. அப் பெரியவர் மறுபடியும் தயங்கினார். பூமியின் வற்புறுத்தல் தொடர்ந்தது. அவர் சொன்னார்:
“இருங்க; இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிக் கிட்டிருப்போம். நம்மை யாராவது கவனிச்சிக்கிட்டிருந்தாலும் சந்தேகம் தீர்ந்து அவங்க திரும்பிப் போகட்டும். யாரோ என் உறவுக்காரங்க வெளியூர்லேருந்து என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்கன்னு நெனைச்சுக்கட்டும்.”
தொடர்ந்து மேலும் சிறிது நேரம் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் பெரியவர் பெயர் காளத்திநாதன் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது, கடத்தல்காரர்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன் அந்தத் தீவாத்தரமான கிராமத்தில் ஊர்ப் பெரிய மனிதராகவும் நாட்டாண்மைக்காரராகவும் சிறந்த அந்தஸ்தோடு வாழ்ந்தவர் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது.