பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/நந்தினி மறுத்தாள்
மணிமகுடம் - அத்தியாயம் 38
[தொகு]நந்தினி மறுத்தாள்
பழுவேட்டரையர் சிறிது உற்சாகத்துடனேயே நந்தினியைப் பார்க்கப் போனார். கடம்பூருக்கு அவர் புறப்பட்டு வந்த போது என்ன நம்பிக்கையுடன் வந்தாரோ, அது ஒன்றும் இது வரையில் நிறைவேறவில்லை. சிறு பிள்ளையாகிய ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் மாளிகையிலே தருவித்து வைத்துக் கொண்டால், அவனை நயத்தினாலும் பயத்தினாலும் தம்முடைய விருப்பத்தின்படி நடக்கச் செய்யலாம் என்று அவர் எண்ணியிருந்தார். தாமும் சம்புவரையரும் சொல்லுவதற்கு அவன் கட்டுப்பட்டே தீரவேண்டும் என்று நம்பினார். சோழ ராஜ்யம் முழுவதற்கும் மதுராந்தகனுக்கு உடனடியாகப் பட்டம் கட்டுவதிலுள்ள அபாயம் அவருக்குத் தெரிந்தேயிருந்தது. வடக்கே மலையமானும், தெற்கே கொடும்பாளூர் வேளானும் அதற்கு விரோதமாயிருப்பார்கள். கரிகாலன் அவர்களுடன் சேர்ந்து கொண்டால் உள்நாட்டு யுத்தம் மூண்டே தீரும். அதன் முடிவு எப்படியாகும் என்று யார் சொல்ல முடியும்? பொது மக்களில் பெரும்பாலோர் சுந்தர சோழருடைய புதல்வர்களின் பக்கமே இருப்பார்கள். மதுராந்தகனுடைய தாயே அவனுக்கு விரோதமாயிருக்கிறாள். காலாமுகக் கூட்டத்தாரை மட்டும் நம்பி உள்நாட்டுப் போரில் இறங்க முடியுமா? பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் பாலாற்றுக்கு வடக்கேயுள்ள நாடுகளிலும் கலகங்கள் கிளம்பினாலும் கிளம்பும். ஆகையால் இப்போதைக்கு மதுராந்தகனுக்குப் பாதி ராஜ்யம் என்று பிரித்துக் கொண்டால், அதுவும் தஞ்சையை தலைநகராகக் கொண்ட தென் சோழ ராஜ்யமாயிருந்தால், பிற்பாடு போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். கொடும்பாளூர் வேளானின் செல்வாக்கை ஒரு வழியாகத் தீர்த்துக் கட்டிவிடலாம். பிறகு வடக்கே திரும்பித் திருக்கோவலூர் மலையமானையும் ஒரு கை பார்க்கலாம். கரிகாலன் வெறும் முரடன், என்றைக்காவது ஒரு நாள் ஏதாவது ஏடாகூடமான காரியத்தில் இறங்கி அற்பாயுளில் இறக்கக்கூடும். அப்படி நேர்ந்தால், எல்லாக் கவலையும் தீர்ந்தது. இப்போதைக்குப் பாதி ராஜ்யம் என்று ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.
இளைய ராணி நந்தினியுடனும் கலந்தாலோசித்ததின் பேரில் பெரிய பழுவேட்டரையர் இத்தகைய முடிவுக்கு வந்து, அதன் பிறகுதான் கடம்பூருக்கு வந்தார். கரிகாலனையும் அங்கு அழைத்து வரச் செய்தார். ஆனால் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. பெரியவர்களுக்கு அடங்கி நடப்பதற்குப் பதிலாக கரிகாலன் பெரியவர்களை அதட்டி உருட்டி அதிகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய கேலிப் பேச்சுக்களையும் இரு பொருள் கொண்ட மொழிகளையும் பழுவேட்டரையரால் பொறுக்க முடியவில்லை. முக்கியமாக அவரைப் பற்றிக் கரிகாலன் அடிக்கடி வயதான கிழவர் என்று குறிப்பிட்டதும், இளைய ராணியைப் பாட்டி என்று அழைத்து வந்ததும் கூரிய விஷந் தோய்ந்த பாணங்களைப் போல் அவரைத் துன்புறுத்தி வந்தன. போதும் போதாதற்குச் சம்புவரையரின் போக்கும் அவ்வளவு திருப்திகரமாயில்லை. தமக்குப் பக்கபலமாக நின்று கரிகாலனுடைய அதிகப் பிரசங்கத்தை அடக்க முயல்வதற்குப் பதிலாகச் சம்புவரையர் பெரும்பாலும் வாயை மூடி மௌனம் சாதித்துக் கொண்டிருந்தார். ஏதாவது பேசினாலும் தயங்கித் தயங்கி வழவழா குழகுழா என்று பேசினார். கரிகாலன் தமது மாளிகைக்கு விருந்தாளியாக வந்து விட்டபடியினால் ஏதாவது ஏடாகூடமாய் நடந்து விடக் கூடாதென்று அப்படி ஜாக்கிரதையாக நடந்து கொண்டிருக்கிறார் போலும்! காரணம் எதுவாயிருந்தாலும் சம்புவரையரின் போக்கு கொஞ்சங்கூடப் பழுவேட்டரையருக்குத் திருப்திகரமாக இல்லை.
இன்றைக்குக் கரிகாலன் கூறியதில் எவ்வளவு தூரம் உண்மையான பேச்சு, எவ்வளவு தூரம் கேலிப் பேச்சு, எவ்வளவு தூரம் மனதில் ஒன்று உதட்டில் ஒன்றுமான வஞ்சகப் பேச்சு என்பதைக் கண்டு கொள்வதும் எளிதாயில்லை. மதுராந்தகனையும் அங்கே வரவழைத்த பிறகு ஏதேனும் பெரிய விபரீத காரியம் செய்ய உத்தேசித்திருக்கிறானோ என்னமோ, யார் கண்டது? மலையமானைப் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வரச் செய்து கடம்பூர் மாளிகையை வளைத்துக் கொள்ளும்படி செய்தாலும் செய்யலாம் அல்லவா?...
இவையெல்லாவற்றையும் எண்ணும்போது தஞ்சாவூருக்குத் திரும்பிப் போய்விடுவதே நல்லது. சின்னப் பழுவேட்டரையன் நல்ல மதியூகி. அவனிடமும் யோசனை கேட்டுக் கொள்ளலாம். ஒருவேளை மதுராந்தகனை இங்கு அழைத்து வருவதாயிருந்தாலும் எல்லா நிலைமைக்கும் ஆயத்தமாகக் காலாந்தககண்டனைப் பெரிய படை திரட்டிக் கொள்ளிடக் கரையில் கொண்டு வந்து வைத்திருக்கச் செய்யலாம். எது எப்படியானாலும் இளைய ராணியை இங்கே இனி மேல் இருக்கச் செய்து இந்த மூடர்களின் கேலிப் பேச்சுக்கு உள்ளாக்குவது கூடவே கூடாது. அவளை அழைத்துக் கொண்டு போய்த் தஞ்சாவூரில் விட்டுவிடுவது மிக்க அவசியம். அதற்கு ஒரு வசதி இப்போது ஏற்பட்டிருக்கிறது அதைக் கைவிடுவானேன்?
இவ்விதம் ஒரு முடிவுக்கு வந்ததும் பெரிய பழுவேட்டரையருக்குச் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. முக மலர்ச்சியுடனே நந்தினியின் அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே அவர் வாசற்படியருகில் வந்த போது உள்ளேயிருந்து கலகலவென்று சிரிப்புச் சத்தம் வருவதைக் கேட்டார். ஏனோ அந்தச் சிரிப்பின் ஒலி அவருக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. தஞ்சாவூர் அரண்மனையில் நந்தினி இவ்விதம் சிரிப்பதேயில்லை. இப்போது என்ன குதூகலம் வந்துவிட்டது? எதற்காகச் சிரிக்கிறாள்? அவளுடன் சேர்ந்து சிரிப்பது யார்?...
உள்ளே பிரவேசித்ததும் உடன் இருந்தவள் மணிமேகலை என்று தெரிந்தது. இதனால் அவர் மனம் சிறிது தெளிந்தது. அவரைக் கண்டதும் மணிமேகலை சிரிப்பை அடக்குவதற்காக இரண்டு கைகளினாலும் வாயைப் பொத்திக் கொண்டாள். அப்படியும் அடக்க முடியாமற் போகவே சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு ஓடிப் போனாள்.
நந்தினியின் சிரிப்பு பழுவேட்டரையரைக் கண்டதுமே நின்றுவிட்டது. அவளுடைய முகமும் வழக்கமான கம்பீரத்தை அடைந்தது. "ஐயா! வாருங்கள்! யோசனை முடிவடைந்ததா?" என்றாள்.
"நந்தினி! அந்தப் பெண் எதற்காக அப்படிச் சிரித்தாள்? ஏன் சிரித்துக் கொண்டே ஓடுகிறாள்?" என்று பழுவேட்டரையர் கேட்டார்.
"அதைச் சொல்லத்தான் வேண்டுமா? சொல்லுகிறேன். சபாமண்டபத்தில் நடந்த பேச்சுக்களில் கொஞ்சம் பக்கத்து அறையிலிருந்த மணிமேகலையின் காதில் விழுந்ததாம். இளவரசர் ஆதித்த கரிகாலர் பாட்டன்களைப் பற்றியும் பாட்டிகளைப் பற்றியும் பரிகாசமாகப் பேசியதைச் சொல்லி விட்டு அவள் சிரித்தாள்.."
"சீ! துஷ்டப்பெண்! அவளோடு சேர்ந்து நீயும் சிரித்தாயே?"
"ஆம்; அவளோடு சேர்ந்து சிரித்தேன். அவள் அப்பால் போனதும் அழலாம் என்று இருந்தேன். அதற்குள் தாங்கள் வந்து விட்டீர்கள்!" என்று நந்தினி கூறிவிட்டுக் கண்ணில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"ஆகா! உன்னை இப்பேர்ப்பட்ட மூடர்களின் மத்தியில் நான் அழைத்துக் கொண்டு வந்தது என் தவறு. நாளைப் பொழுது விடிந்ததும் நாம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டுப் போகலாம். இன்றிரவு மட்டும் பொறுத்துக் கொள்!" என்றார்.
"தஞ்சாவூருக்குப் புறப்படவேண்டுமா? ஏன்? வந்த காரியம் ஆகிவிட்டதா?" என்று நந்தினி கேட்டாள்.
அன்று சபா மண்டபத்தில் நடந்த பேச்சின் முடிவுகளைப் பழுவேட்டரையர் நந்தினிக்குத் தெரியப்படுத்தினார்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு நந்தினி, "சுவாமி! தாங்கள் தஞ்சாவூருக்குப் போய் வாருங்கள் நான் வரமாட்டேன். ஆதித்த கரிகாலனுக்கு புத்தி கற்பிக்கும் வரையில் நான் இங்கிருந்து புறப்படுவதாக உத்தேசமில்லை. அந்தக் கர்வம் பிடித்த இளவரசன் ஒன்று தங்கள் காலில் விழுந்து அவன் பேசிய பரிகாசப் பேச்சுக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். அல்லது தங்கள் கத்திக்கு அவன் இரையாக வேண்டும்!" என்றாள்.
"நந்தினி! இது என்ன சொல்லுகிறாய்? இத்தகைய பாதகமான எண்ணம் உன் உள்ளத்தில் எப்படி உதித்தது."
"ஐயா! எது பாதகமான எண்ணம்? என்னைக் கைப்பிடித்து மணந்த கணவனை ஒருவன் நிந்தித்துப் பேசினால், அவனைப் பழிவாங்க வேண்டும் என்று நான் நினைப்பது பாதகமா?"
"இல்லை, நந்தினி! இதைக் கேள்! எங்கள் பழுவூர்க் குலம் சோழ குலத்தோடு ஆறு தலைமுறையாக நட்புரிமை கொண்டது. அதையெல்லாம் மறந்து, அறியாச் சிறுவன் ஒருவன் ஏதோ உளறினான் என்பதற்காக நான் அக்குலத்துக்கு விரோதமாய்க் கத்தி எடுக்க முடியுமா? சுந்தர சோழரின் புதல்வனை, இன்று வரையில் பட்டத்து இளவரசனாயிருப்பவனை, நான் என் கையினால் கொல்லுவதா? இது என்ன பேச்சு?" என்று பழுவேட்டரையர் பதறினார்.
கரிகாலனுடைய காரசாரமான வார்த்தைகளை கேட்ட போது சில சமயம் பழுவேட்டரையருக்கே உடைவாளின் மீது கை சென்றது. அப்போது சிரமப்பட்டு மனத்தையும் கையையும் கட்டுப்படுத்திக் கொண்டார். தம் உள்ளத்தில் முன்னம் தோன்றிய எண்ணத்தை நந்தினி வெளியிட்டுச் சொன்னவுடனே அவருக்கு அவ்வளவு பதட்டம் உண்டாயிற்று.
"ஐயா! தாங்கள் சோழக் குலத்தோடு ஆறு தலைமுறையாக நட்புக் கொண்டவர்கள்; உறவும் கொண்டவர்கள். ஆகையால் தாங்கள் கத்தி எடுக்கத் தயங்குவது இயல்பு. ஆனால் எனக்கு அத்தகைய உறவு ஒன்றுமில்லை. சோழக் குலத்துக்கு நான் எந்த விதத்திலும் கடமைப்பட்டவள் அல்ல. ஆதித்த கரிகாலன் தங்கள் அடிபணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால், என் கையில் கத்தி எடுத்து நானே அவனைக் கொன்று விடுகிறேன்?" என்றாள் நந்தினி. அப்போது அவளுடைய கண்கள் சிவந்து, புருவங்கள் நெரிந்து முகத்தோற்றமே மாறி விட்டது.