அகல் விளக்கு/அத்தியாயம் 25
ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் செய்து தடுமாறித் துன்புறுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன்.
பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல்ல செய்தி இருக்கும் என்று எதிர்பார்த்துப் பிரித்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்தக் கடிதம் என் கலக்கத்தை மிகுதிப்படுத்தியது. நான் சோழசிங்கபுரத்துக்குச் சென்றபோது, அவன் இல்லாமற் போனதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, பண முடையால் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தான்படும் துன்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான்.
இந்த வேளை பார்த்துத் தன் மனைவி தன்னைக் கைவிட்டுத் தாய் வீட்டுக்குப் போய்ச் சுகமாக உட்கார்ந்திருப்பதாகக் குறித்திருந்தான். கடைசியாக, எப்படியாவது இந்தச் சமயத்தில் தனக்கு இரண்டாயிரம் ரூபாய் கடன் தரவேண்டும் என்றும், எந்தக் காரணத்தாலும் தட்டிக் கழிக்கக்கூடாது என்றும், இந்தச் சமயத்தில் இந்த உதவி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையே அடியோடு போய்விடும் என்றும் எழுதியிருந்தான்.
தங்கைக்குத் தையல்பொறி வாங்கித் தருவதாக மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வந்ததை நினைத்துக் கொண்டேன். அதற்காக அந்த மாதச் சம்பளத்திலிருந்து நூறு ரூபாய் தனியே எடுத்து வைத்திருந்தேன். இன்னும் இரண்டு மாதம் அப்படி நூறு நூறு ரூபாய் எடுத்து வைத்தால் அவளுக்கு அதை வாங்கிக் கொடுத்துவிடலாம், அவ்வாறு செய்தால் பொருள் வகையிலும் அந்தக் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்ததாகும். அதைக் கொண்டு அக்கம் பக்கத்தாருக்குச் சோளி சொக்காய் முதலானவை தைத்துக் கொடுத்துத் தன் குடும்பத்துக்குச் சிறு வருவாயும் தேடிக் கொள்வாள் என மகிழ்ந்திருந்தேன். என் திட்டமெல்லாம் வீண் மனக்கோட்டை ஆனதாக வருந்தினேன்.
இரண்டாயிர ரூபாயை யாரிடமிருந்து நான் எப்படி வாங்கித் தருவது? தந்தையாரின் மளிகைக்கடை வீட்டுச் செலவுக்கு வேண்டிய வருவாயைக் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நிலையில் நான் அவரைப் பண உதவி கேட்க முடியாது. அவருக்கு இந்தச் செய்தி தெரிந்தாலும் என்மேல் வருத்தப்படுவார்.
மாலனுக்கு நான் உதவி செய்யப் போவதாகத் தெரிந்தால் அந்தப் பணம் வீணாகி விடும், திரும்பி வராது என்று அம்மாவும் தடுப்பார். நான் உதவி செய்யாமல் இருப்பதும் முடியாது. மாலனும் பொறுப்போடு பணத்தைக் கையாள்பவனாகவும் தெரியவில்லை. வீண் செலவு செய்பவன் அல்ல. ஆனால், வழியல்லா வழியில் போய் ஏமாந்து கெடுகின்றான். என்ன செய்வது என்று மூன்று நான்கு நாள் கலங்கிக் கொண்டிருந்தேன்.
கடைசியில் ஆயிர ரூபாயாவது அனுப்புவது என்றும் கையில் இருந்த இருநூறோடு இன்னும் எண்ணூறு கடன் வாங்கிச் சேர்த்து அனுப்புவது என்றும் முடிவு செய்தேன். யாரிடம் சென்று கடன் கேட்பது? நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடமே சென்றேன். அவரும் பணவகையில் பலருக்குக் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவர். ஏமாந்த கதைகளை எல்லாம் என்னிடம் விரிவாகச் சொல்லிக் கடைசியில் பணம் கொடுக்க இசைந்தார். மாதம் நூறு நூறாக எட்டு மாதத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கொடுத்தார்.
ஆயிரமும் சேர்த்து மாலனுக்கு அனுப்பியபோது விரிவாக ஒரு கடிதம் எழுதினேன். கடன் வாங்கி ஆலை வைக்கும் முயற்சி தொடங்கியிருக்கக் கூடாது என்றும் அங்கேயே இருந்து இரவும் பகலும் தொழிலைக் கவனிக்கவேண்டும் என்றும், இனிமேல் சாமியார்கள் பின்னே சுற்றக்கூடாது என்றும், மூடநம்பிக்கைகளைக் குறைத்து உழைப்பையும் உண்மையையும் நம்ப வேண்டும் என்றும் கடுமையாகவே எழுதியிருந்தேன். அவனுடைய மனைவி கற்பகத்தை என் தாய் கண்டு பேசினார் என்றும், அவளாகக் கணவனை விட்டு வரவில்லையாம் என்றும், கணவனோடு எப்போதும் வாழ விரும்புகிறாளாம் என்றும் மாமனார் கொடுத்தால் பணம் வாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர வற்புறுத்திக் கேட்பது தகாது என்றும், எனக்கு நேரே தெரியாத செய்திகள் போல், அவனுடைய மன உணர்ச்சியைப் புண்படுத்தாத வகையில் குடும்பத்தைப் பற்றியும் அறிவுரை எழுதியிருந்தேன்.
சந்திரன் போல் அவன் கடிதம் எழுதாமல் இருக்கவில்லை. அந்த வகையில் அவன் ஒருபடி மேலானவன் என்றே சொல்ல வேண்டும். உடனே கடிதம் எழுதியிருந்தான். பணம் வந்து சேர்ந்ததற்காக நன்றி தெரிவித்தான். இன்னும் ஓராயிரம் அனுப்ப முடிந்தால் பேருதவியாகும் என்றும் எழுதியிருந்தான். இனிமேல் தொழிலை அக்கறையுடன் கவனிக்க முடியும் என்று உறுதியும் கூறியிருந்தான்.
ஆனால், தன் மனைவியைப் பற்றி ஒரு சொல்லும் எழுதவில்லை. ஒருகால் இந்தத் துறையில் எனக்கு ஒன்றும் தெரியாது என்றும், பணம் வாங்கத் திறமையில்லாத என்னுடைய அறிவுரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எண்ணியிருப்பான். கல்லூரியில் படித்தபோதே சோதிடத்தை நான் நம்பவில்லை. அப்போது, 'உனக்கு ஒன்றும் தெரியாது' என்று இகழ்ந்தவன் அவன். அதே மனநிலையோடு இப்போதும் என் அறிவுரையை இகழ்ந்து ஒதுக்கியிருக்கக் கூடும். இப்படி மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பிப் பணம் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணிவிட்டிருப்பான். எப்படியோ போகட்டும். தொழில் நன்றாக நடந்த பிறகாவது திருந்தினால் போதும் என்று ஆறுதல் அடைந்தேன்.
ஐந்தாம் மாதம் மனைவியையும் மாதவியையும் அழைத்து வருவதற்காக ரயில் ஏறி ஊருக்குப் புறப்பட்டபோது மாலனுக்கு உதவி செய்ததைப் பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். தையல்பொறி வாங்குவது பற்றி அம்மா ஏதாவது கேட்டாலும் திருடனைத் தேள் கொட்டியது போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
நான் வீட்டுக்குள் நுழைந்தவுடனே தங்கை மணிமேகலையைத் தான் கண்டேன். அவளுக்கு செய்வதாகச் சொன்ன உதவியை நினைத்து மனம் திக்கென்றது. ஒருவாறு மனத்தை மாற்றிக்கொண்டு பேசினேன். மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அம்மா இல்லை. எங்கே என்று கேட்டேன். கற்பகத்தின் அண்ணி இறந்துவிட்டதாக சொல்லவே அம்மாவும் அவர்களோடு நேற்றுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாள் தங்கை. "நேற்று கற்பகம் அழ, மாமி அழ, வீடு ஒரே துயரமாக இருந்தது. மாமிதான் மிகுதியாக அழுதார்கள்" என்றாள் மனைவி.
"என்ன காரணம்? திடீரென்று இறந்துபோன காரணம்" என்றேன்.
"யாருக்குமே தெரியாது. அம்மா வந்தால்தான் தெரியும்" என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் வந்தார்.
என்னென்னவோ எண்ணினேன். சந்திரன் ஏதாவது கொடுமை செய்திருப்பானோ என்றும் ஓர் எண்ணம் வந்தது. சே, என்ன கெட்டவனாக இருந்தாலும் அந்த எல்லைக்குப் போயிருக்க மாட்டான் என்று தெளிந்தேன்.
அன்று பகல் உணவுக்கு உட்கார்ந்தபோது, பாக்கியம் தங்கையையும் மனைவியையும் உடன் உட்கார்ந்து உண்ணுமாறு வற்புறுத்தினார். "மாதவி தூங்குகிறாள். அவள் எழுவதற்கு முன்னே சாப்பாட்டு வேலையை முடித்து விடலாம்" என்று வற்புறுத்தி உண்ணச் செய்தார்.
உணவின் போது, கற்பகத்தின் பேச்சைத் தங்கை தொடங்கினாள். "வீட்டில் பிறந்த பெண்ணும் நன்றாக இல்லை. புகுந்த பெண்ணும் இப்படி ஆகிவிட்டாள்" என்று வருந்தினாள். மறுபடியும் அவளே, "பெண்ணாய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது. தக்க கணவர் கிடைக்காத பெண்கள் திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். நம் நாட்டில் மணிமேகலை இல்லையா? ஆண்டாள் இல்லையா?" என்றாள்.
உணவு பரிமாறிக்கொண்டிருந்த பாக்கியம், "மணிமேகலைக்குத் தக்க கணவன் இல்லையா? அவளே துறவியாகிவிட்டாள். ஆண்டாளுக்குக் கணவன் கிடைக்கவில்லையா? மனிதரை மணக்க மாட்டேன் என்று உறுதி பூண்டார்" என்றார்.
"நல்ல கணவராக இல்லை என்று தெரிந்தால் நாமும் அப்படி இருந்துவிடவேண்டும்" என்றாள் தங்கை.
என் இலையில் மோர் விட்டபடியே பாக்கியம் அதற்கும் மறுமொழி சொன்னார். "ஆண்டாளைப் போல் மனிதர் யாரையும் மணந்து கொள்ளமாட்டேன் என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனால், மீராவைப் போல் திருமணம் ஆனபிறகு கணவனைக் கைவிட்டுப் போகக்கூடாது" என்றார்.
என் மனம் திடுக்கிட்டாற் போல் நின்றது. உணவை மறந்து அவருடைய புதிய கருத்தில் சென்றது. அவர், விட்ட மோர் இலையைவிட்டு ஓடி மனைவியின் இலைப்பக்கம் சென்றது. "அப்புறம் யோசிக்கலாம். சோற்றைப் பிசையுங்கள். மோர் தரையில் ஓடுகிறது" என்று மனைவி சொன்ன போதுதான் என் கைகள் கடமையை உணர்ந்தன. எண்ணிக் கொண்டே உண்டேன். உண்டு முடித்துக் கை அலம்பிய பிறகு, "மீரா செய்ததில் தவறு என்ன? கணவன் உயரவில்லை. தாம் உயர்ந்த நிலையை எட்டி விட்டார். ஆகவே குடும்பத்தைத் துறந்து விட்டார்" என்றேன்.
"சரி இருக்கலாம். காளிகோயிலில் இராமகிருஷ்ணர் தவம் செய்தாரே. அவர் உயர்ந்த நிலையை அடையவில்லையா? அதனால் மனைவி சாரதாமணியை விட்டுத் துறந்துவிடவில்லையே. மனைவியிடத்திலும் கடவுளைக் கண்டாரே. அதுபோல் மீரா கணவனிடத்திலும் தெய்வத்தைக் கண்டு வாழ்ந்திருக்கலாமே" என்றாள் தங்கை.
என் மூளையில் மின்னல் பாய்ந்தது போல் இருந்தது.
"உண்மை, அது சரி" என்றார் பாக்கியம்.
தங்கையின் அறிவு நுட்பத்தையும் தெளிவையும் உணர்ந்து போற்றினேன். "சாரதாமணி கணவருடைய நெறிக்கே திரும்பிவிட்டார். அதனால் இராமகிருஷ்ணர் தம்முடைய உயர்ந்த தவத்திற்கும் துணையாக்கிக் கொண்டார். ஆனால் மீராவின் கணவன் அவ்வாறு திருந்தாதிருக்கலாம்; உயராதிருக்கலாம் தன் வழிக்கு வராத கணவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என்றேன். என்ன விடை வரப்போகிறது என்ற ஆவலாலேயே விளையாட்டுப் போல் கேட்டேன்.
பாக்கியம் மறுமொழி கூறினார்; "நெடுமாறனுடைய மனைவி மங்கையர்க்கரசி என்ன செய்தார்? கணவன் வேறே வழியாகச் சென்றபோதிலும், அவனோடு அன்பாக வாழவில்லையா? கடைசியில் கணவனைத் திருத்தும் முயற்சியில் வெற்றியும் பெறவில்லையா?" என்றார்.
பேசாமல் இருந்தேன்.
"கற்பகத்துக்கு முந்தாநேற்று இரவும் இதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்த வேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிடாதே; ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்ப துன்பமே உன் இன்ப துன்பம்; இன்ப துன்பம் மட்டும் அல்ல, ஆக்கமும் அழிவும் கூட அப்படியே இருவர்க்கும் பொதுவாகக் கருதவேண்டும்; கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சி வேண்டும் என்று எவ்வளவோ சொன்னேன்.
கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும், எதிர்த்துப் பிரிந்து வாழ்வதைவிட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து, சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான் பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும், அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்துவிட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது.
குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை, அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்? எவ்வளவு தியாகம் வேண்டும்? சரியோ தவறோ, ஒருவனோடு பிணைந்து விட்ட வாழ்வு அவனோடேயே போகட்டும் என்ற துணிவு பழங்காலத்தில் பெண்களுக்கு இருந்தது. இந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் இப்படித் துணிய மாட்டாள். கற்பகம் மட்டும் துணிய முடியுமா? அவளைக் குறை கூற முடியாது" என்றார்.
"கற்பகத்திடமும் குறை உண்டா" என்றேன்.
"உண்டு உண்டு. அவளும் பிடிவாதக்காரி. நயமாகப் பேசவும் பழகவும் தெரியாதவள். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ளவள். உண்மையும் நேர்மையும், மட்டும் இருந்தால் குடும்பத்துக்குப் போதுமா? அவற்றால் மனங்களைப் பிணைக்க முடியாது; அன்பும் நயமும்தான் மனங்களைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளவை. கற்பகத்திடம் அந்தக் குறை உண்டு. எதற்கும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவாள். நயமே இல்லை" என்றார்.
"அவளுடைய அண்ணன் சந்திரனிடம் அந்தக் குறை உண்டு" என்றேன்.
அதற்குள் குழந்தை மாதவி விழித்து அழவே, எங்கள் பேச்சு அந்த அளவில் நின்றது.
மறுநாள் பகல் இரண்டு மணிக்குத்தான் பெருங்காஞ்சியிலிருந்து அம்மா வந்து சேர்ந்தார். வந்ததும் அலுத்துக் களைத்துக் கூடத்தில் உட்கார்ந்தார். செய்தி அறிவதற்காக நாங்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்தோம். அப்போது அப்பாவும் வீட்டில் இருந்தார். அவரும் செய்தி தெரிந்து கொள்வதற்காக நின்றார்.
"கற்பகத்தின் கலியாணத்துக்குப் போனபோது ஒன்றரை நாள் பழகினேன். அவளுடைய அன்பையும் குணத்தையும் நினைத்தால் மனம் கேட்கவில்லை. அய்யோ! பெண்ணே! போய்ப் பிணமாய்ப் பார்த்தேன். நம் வீட்டுக்கு வரணும் வரணும் என்று அவ்வளவு ஆசையாய் இருந்தாளாம். அந்தக் குடும்பம் கொடுத்து வைக்கவில்லை. முகத்தில் பால் வடிகிறது. என்ன களை! என்ன குணம்! ஊரே அழுது விட்டது" என்றார்.
"என்ன’மா உடம்புக்கு" என்றேன்.
"கிணற்றிலே விழுந்து உயிரை விட்டு விட்டாள். கணவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல்தான்."
இதைக் கேட்டதும் என் நெஞ்சம் குமுறியது.
"அய்யோ, பாவி" என்றாள் என் மனைவி.
அம்மா விரிவாகச் சொல்ல தொடங்கினார். "அடிதடி நடக்கிற குடும்பமாய்ப் போச்சு. எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு நகையாய்க் கேட்டு வாங்கி ஊரில் கண்ட பெண்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டான். அடித்து உதைத்து நகையைக் கழற்றிக் கொண்டு போகும் பழக்கம் இருந்திருக்கிறது. கடன் கேட்டால் ஊரில் கொடுப்பார் இல்லை. பணம் இல்லாதபோது இப்படி நகைகளைக் கழற்றிக் கொண்டு போயிருக்கிறான்.
ஊரில் அவனைப் பழிக்கிற பழி எல்லாம் கேட்டு உருகிக் குன்றிப் போய்விட்டாள் அந்தப் பெண். முன்நாள் இரவு வந்தபோது, மனத்தில் இருந்ததை எல்லாம் சொல்லிக் கேட்காததை எல்லாம் கேட்டுவிட்டாள். அவன் கோபத்தால் தடியும் தாம்பும் எடுத்து அடித்திருக்கிறான். மூக்குத்தி கேட்டிருக்கிறான். அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டுப் பேசாமல் தோட்டத்துப்பக்கம் போனாள். காவல்காரன், 'இந்த நேரத்தில் எங்கே'மா. தனியாகப் போகிறீர்களே' என்று தடுத்துக் கேட்டானாம்.
'தனியாகப் போகாமல், இதற்குக்கூட யார் துணை வருவார்கள்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். வெளிக்குப் போகிறாள் என்று காவல்காரன் இருந்து விட்டானாம். நேரே தோப்புக் கிணற்றுக்குப் போய் இறங்கி விட்டாள். அந்தப் பாவி பெரும்பாவி சிறிது நேரம் பொறுத்து வெளியே வந்தானாம். காவல்காரனைப் பார்த்து, அவள் வந்தாளா என்று கேட்டானாம். தோப்புக்குப் போனாள் என்று சொல்லவே அவன் பயந்துவிட்டான். 'போய்த் தேடு, போடா' என்று காவல்காரனை அனுப்பினானாம்.
எங்கும் கிடைக்கவில்லை என்று வந்து சொன்னானாம். விடியற்காலையில் போய்ப் பார்த்திருக்கிறான். பிணம் மிதப்பதைப் பார்த்து ஓடி வந்து சொன்னானாம். அந்தப் பாவி அப்போது போனவன் இன்னும் வரவில்லையாம். எங்கெங்கோ கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். எங்கும் கிடைக்கவில்லையாம். இங்கே ஆள் அனுப்பினார்கள். போனோம். அழுதோம். எடுத்துப் போட்டுவிட்டோம். போய்ச் சேர்ந்துவிட்டாள்" என்று சொல்லிக்கொண்டே கண்ணீர் உதிர்த்தார்.
"எங்கே போய்விட்டாராம்?" என்றாள் தங்கை.
"தொழு நோய் ஆஸ்பத்திரிக்குப் போகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானாம், அங்கேதான் போயிருப்பான் பாவி" என்றார் அம்மா.
"போய்த் தொலையட்டும். அங்கேயே ஒழிந்தால் குடும்பத்தைப் பிடித்த தொல்லையே விட்டுப் போகும்" என்று சொல்லிக் கொண்டே அப்பா நகர்ந்தார்.
பாக்கியத்தின் முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டே கம்மிய குரலில், "அய்யோ! இப்படியா ஆகணும்?" என்றார். "வெறி பிடித்துத் தப்புச் செய்தாலும் திருந்தக்கூடாதா? படித்த பிள்ளைக்கு நல்ல புத்தகம் கிடைக்கவில்லையா? நல்லவர்களின் பழக்கம் கிடைக்கவில்லையா? காலமெல்லாம் இப்படியா நடத்தை கெட்டு அழிய வேண்டும்? கடவுள் ஏன் இப்படிப் படைக்க வேண்டும்" என்று வருந்தினார்.
என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. என் வாழ்க்கையில் நேர்ந்த பெரிய அதிர்ச்சி போல் இருந்தது.
அம்மா இரண்டு நாள் இதே நினைப்பாக இருந்து அடிக்கடி பெருமூச்சு விட்டு வருந்தினார். எனக்கும் இந்தப் பயணத்தின் போது மனம் நன்றாக இல்லை. மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டபோதும் எல்லோரிடத்திலும் துன்பத்தின் சாயல் இருந்தது. அம்மா பேத்தியைக் கையில் வாங்கிக் கண்ணில் ஒத்தி மருமகளிடம் கொடுத்தார். அப்போது மாதவி பாட்டியைப் பார்த்து வாய் திறந்து சிரித்தாள். அதைக் கண்ட போதுதான் அம்மாவின் முகத்தில் சிறு மலர்ச்சி தோன்றியது.