அமுதன் அடிகள்
123
இன்று மணவையாரின் கலைச் சொல்லாக்கப் பணியில் உறுதுணையாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருடன் மணவையார்க்கு ஏற்பட்ட தொடர்பு, தனிநாயக அடிகளார் சொல்லாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்தினை அரண்செய்வதாக அமைந்தது. மொழித் தூய்மையைவிட மொழியில் கருத்துணர்த்தும் திறனுக்கே முதன்மை தரவேண்டும் என்று கருதிய பேராசிரியர். தெ.பொ.மீ.யின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டவர் பாவாணர். மொழித் தூய்மைக்கு முதலிடம் தருவதன் மூலம் மொழியைச் செம்மைப்படுத்த இயலும், சிதைவின்றிக் காக்க முடியும் என்பது பாவாணரின் கருத்து, இவ்விருபெரியோர்களின் கருத்துகளை அறிந்து திறனாய்ந்து தெளிந்த மணவையார் தமக்கென ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டார். மொழித் தூய்மையோடு கருத்துணர்த்தும் ஆற்றல்மிகு கருவியாகத் தமிழைக் கையாள வேண்டும். அதுவே காலத்துக்கேற்ற போக்காகவும் மொழி நலம் காக்கும் முறையாகவும் அமைய முடியும் என்பதே மணவையார் கண்ட முடிவு ஆகும்.
தெ.பொ.மீ, தனிநாயக அடிகள், பாவாணர் ஆகிய மூவருமே பிற சமயங்களைப் சார்ந்தவர்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. மணவையாரின் சமய நல்லிணக்க உணர்வுக்கு இது தக்க சான்றாகும்.
சமய நல்லிணக்கத்துக்கோர் முன் மாதிரி
இந்தியாவில் பல சமயங்கள் உண்டெனினும் ஒரு சமயத்தைக் சார்ந்தவர் பிற சமயங்களின் கோட்பாடுகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் அறிந்திருப்பதில்லை. இத்தகைய அறியாமை சமயச் சழக்குகளுக்குக் காரணமாகி விடுவதுண்டு.