பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பல்லவர்

75



இயற்றிய பாரவி (தாமோதரர்)யும் காவ்யாதர்சம் செய்த தண்டி என்னும் வடமொழிப் புலவரும் பல்லவரால் பாராட்டப்பெற்றனர். (5) இக்காலத்தே தமிழ்மொழியும் ஓரளவு வளர்ந்ததென்றே கூறலாம். தேவாரத் திருமுறைகள், நாலாயிரப் பாடல்கள், நந்திக் கலம்பகம், பாரத வெண்பா முதலியன இக்காலத்த்ேதான் எழுந்தவை. இவற்றை அருளிச்செய்த அடியாரும் ஆழ்வாரும் புலவர்களும் பல்லவர் மதிப்பைப் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை.

இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்

(1) இக்காலப் பல்லவர் செப்புப் பட்டயங்களையும் பெருவாரியான கல்வெட்களையும் வெளியிட்டனர். அவை தமிழ் நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவே இன்று காறும் வெளியாகி இருப்பவை: பல படித்து முடியாமலும் அச்சாகி வெளிவராமலும் இருக்கின்றன. அவை வெளிப்படுமாயின், இக்காலப் பல்லவர் வரலாறு பெரிய மாறுதலைப் பெறலாம்: இதுகாறும் உணரமுடியாத பல உண்மைகளை உணரலாம். கல்வெட்டுகள் பலவும் அரசர் அல்லது பெரு மக்கள் கோவில்களுக்கும் மறையவர்க்கும் சமயக் கல்விக்கும் நிலம் விட்டதை அல்லது பிறவகை அறச்செயல்களைக் குறிப்பிடுவாகும். இவற்றில் சிம்மவிஷ்ணு முதலாக வந்த அரசர் பரம்பரை கூறப்பட்டிருக்கும். செப்புப் பட்டயங்களிலும் அரசர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அது வெளிப்பட்டபோது இருந்த அரசன் பெயரையும் அவனது ஆட்சி ஆண்டையும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளும் பட்ட்யங்களும் அரசர் மரபையும் அவர்தம் பிற செயல்களையும் குறிப்பிடுதல் இல்லை. கல்வெட்டுகளில் பழமையானவை முதல் மகேந்திரவர்மன் வெட்டுவித்தவையே ஆகும்; அவை தென்ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டுக் கோட்டங்களில் உள்ள குகைக் கோவில்களில் உள்ளன. மற்றவை மாமல்லபுரத்தில் உள்ள மலைக்கோவில்களிலும் பிறகோவில்களிலும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும் பிற இடங்களிலும் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/95&oldid=517551" இலிருந்து மீள்விக்கப்பட்டது