பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நடந்துகொள்வார்கள் என்பதைத் தங்கள் மனைவியார் சொன்னார்கள். அப்படி நடந்துகொள்ள என்னால் முடியாது. தவறு என்று நான் நினைப்பதைச் சுட்டிக் காட்டும் பழக்கம் எனக்குண்டு. இந்த வயதில் இனி என் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாது. நம்முடைய நட்பு நீடிகக வேண்டுமானால், இப்பொழுதே நான் போய்விடுவதுதான் சரி; என்றேன். உணர்ச்சி பொங்கும் குரலில் நண்பர் ஜெயராமன் “இப்படி என்னைத் தட்டிக் கேட்க ஒருவரும் இல்லாமல் போனதுதான் என்னுடைய துரதிருஷ்டம், என்னைவிட மூத்தவராகிய நீங்கள் தாராளமாக அந்தப் பணியைச் செய்யலாம். அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்” என்றார்.

அன்று முதல் அவருடைய இறுதிநாள்வரை மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவருடைய மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த பல செய்திகளைச் சந்திக்கும் போதெல்லாம் பேசுவார். எப்போது சென்னைக்கு வந்தாலும் ஒன்று என் வீட்டிற்கு வருவார். இன்றேல் அவர் தங்கியிருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சென்று நான் அவரைச் சந்திப்பேன்.

1992-ல் அமெரிக்கா சென்ற நான் மீண்டு வந்து 1993 பிப்ரவரியில் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தப் பணி செய்துகொண்டிருந்தேன். உயிர்க்காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் நண்பர் டி.எஸ்.தியாகராஜன்தான் இந்த ஆராய்ச்சி மையத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்று அமெரிக்காவிலிருந்த என்னைத் தூண்டியவர். 1993 ஏப்ரல் மாதம் திரு. தியாகராஜன், ஏ.எம்.சுவாமிநாதன், ஆர்.முத்துக்குமாரசுவாமி, கி.மு.அழகர்சாமி ஆகியோருடன் ஜெயராமனை அழைத்து என் வீட்டில் முதல் கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். அக்கூட்டத்தில், திரு.வி.க.வின் குறிப்புரையுடன் கூடிய பெரிய புராணத்தை அச்சிட்டு வெளியிடுவது, சேக்கிழார்