பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

267



ஒன்றுக்கென்று பகைமை முற்றத்தொடங்கியது; அரசர் செல்வாக்குப் பெற்ற சமயம், ஏனைய சமயங்களை ஏளனம் செய்யத் தலைப்பட்டது; மறைமுகமாகச் சில தீமைகளும் நிகழ்ந்திருக்கலாம். இப் பகைமை அப்பர்க்கு முன்பே வளர்ந்து வந்தது என்பதைத் தண்டியடிகள் புராணமும் நமிநந்தி அடிகள் புராணமும் நன்கு விளக்குகின்றன.

சமணர்-சைவர் கொடுமை

(1) தங்கள் சமயத்திற் சிறந்து இருந்த தருமசேனர் என்ற திருநாவுக்கரசர் சைவராக மாறியவுடன் திகம்பர சமணர் அரசனிடம் முறையிட்டனர்; அரசன் அவர் வயப்பட்டுச் சமணனாக இருந்தவன் ஆதலின், திகம்பர சமணர் அப்பரை ஒழிக்க நீற்றறையில் இடத் தூண்டினர்; விடம் கலந்த உணவை ஊட்டினர்; யானையால் இடறச் செய்தனர். இறுதியிற் கல்லிற் கட்டிக் கடலில் பாய்ச்சினர். சமணச் சார்புடைய மன்னன் இக்கொடுமைகள் செய்யப்பின்வாங்கவில்லை. இறுதியில் அப்பர் வென்றார்; அரசனும் சைவன் ஆனான். முன்பு சமணச் சார்பு கொண்டு சைவர்க்குத் தீங்கிழைத்தபடியே. அவன் சைவன் ஆனதும் சிறப்புற்ற பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கல்லூரியை ஒழித்தான்! பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொணர்ந்து திருவதிகையிற் குணதர ஈச்சரம் என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான். சமணர் முன்னர் விதைத்ததையே அறுவடை செய்தனர்.

(2) இங்ஙனமே இத்திகம்பர சமணர் மதுரையில் சம்பந்தர் தங்கி இருந்த மடத்திற்கே நெருப்பிட்டு விட்டனர். அந்நெருப்பிட்ட பயனே. அவர்கள் கழுவேற நேர்ந்தது. இந்த நிகழ்ச்சியிலும் முதலில் நெடுமாறன் அத் திகம்பரர் பக்கமே சார்ந்து, ‘கண்ட முட்டு, கேட்ட முட்டு’ என்றான். ஆனால், அவனே சைவனாக மாறியவுடன். அத் திகம்பரரையே கழுவேறச் செய்தான். திகம்பரர் மடத்திற்குத் தீவைத்த கொடுமையை எண்ணியே. சம்பந்தர் வாய்திறவாதிருந்தார் என்று சேக்கிழார் கூறுதல் சிந்திக்கத்தக்கது.