உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தானியேல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை. அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை..." - தானியேல் 2:31-32

தானியேல் (The Book of Daniel) [1]

[தொகு]

முன்னுரை

தானியேல் என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புறச் செய்தார் என்பதை வற்புறுத்துமாறு இந்நூலில் எடுத்துக் காட்டுகளும் காட்சிகளும் கையாளப்பட்டுள்ளன.

இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது:

1. தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை கொண்டு, அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.

2. தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்துவரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன.

இந்நூலின் ஒரு பகுதி (1:1-2:3; 8:1-12:13) எபிரேய மொழியிலும், மறு பகுதி (2:4-7:28) அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. அசரியாவின் மன்றாட்டு, மூவர் பாடல், சூசன்னா, பேலும் பறவைநாகமும் ஆகிய நான்கு பகுதிகள் கிரேக்க மொழியில் மட்டும் காணப்படுகின்றன. அவை தானியேல்: இணைப்புகள் என்னும் இணைத்திருமுறை நூலில் இடம் பெற்றுள்ளன.

தானியேல்

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. தானியேலும் தோழர்களும் 1:1 - 6:28 1289 - 1302
2. தானியேலின் காட்சிகள்

அ) நான்கு விலங்குகள்
ஆ) செம்மறியும் வெள்ளாடும்
இ) வான தூதர்

7:1 - 11:45

7:1-28
8:1-9:27
10:1-11:45

1302 - 1312

1302-1304
1304-1308
1308-1312

3. முடிவின் காலம் 12:1-13 1312-1313

தானியேல்

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

தானியேலும் அவரின் தோழர்களும்

[தொகு]

(1:1 - 6:28)

வேற்றினத்து அரசன் அவையில் தானியேல்

[தொகு]


1 யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில்
பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். [1]
2 தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும்
கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார்.
அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று
அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.


3 அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு,
அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக்
கொண்டுவருமாறு கட்டளையிட்டான்.
4 அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க,
எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற,
அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த,
அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற
இளைஞர்களாய் இருக்க வேண்டும்.
மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளவேண்டும். [2]
5 அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலும்,
பருகி வந்த திராட்சை இரசத்திலும்
நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்.
இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின்,
இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து
நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான்.
6 இப்படித் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களுள்
யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா
என்பவர்களும் இருந்தார்கள்.
7 அலுவலரின் தலைவன் தானியேலுக்குப் 'பெல்தசாச்சர்' என்றும்
அனனியாவுக்குச் 'சாத்ராக்கு' என்றும்
மிசாவேலுக்கு 'மேசாக்கு' என்றும்,
அசரியாவுக்கு 'ஆபேத்நெகோ' என்றும் மாற்றுப் பெயரிட்டான்.


8 அரசனது சிறப்புணவினாலும்,
அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும்
தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல்
தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்;
அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.
9 அலுவலர் தலைவன் தானியேலுக்குப்
பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.
10 அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி,
"உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய
என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன்.
ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட
நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால்
என் தலையே போய்விடும்;
நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்" என்றான்.


11 தானியேல், அனனியா, மிசாவேல் அசரியா ஆகியவர்களுக்கென
அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது:
12 "ஐயா! தயை கூர்ந்து பத்து நாள்
உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும்.
எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும்,
குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும்.
13 அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும்
அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற
இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப்பாரும்;
அதன்பின் உமக்குத் தோன்றியபடி
உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்" என்றார்.


14 அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி
அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான்.
15 பத்து நாள்கள் ஆயின.
அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட
அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும்
உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது.
16 ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும்
பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக
மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.


17 கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும்
அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார்.
சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும்
கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.
18 அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக்
கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது.
அலுவலர் தலைவனும் அவர்களை
நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.
19 அரசன் அவர்களோடு உரையாடலானான்;
அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும்
தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா
ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை;
எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.
20 ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான்.
அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும்
மாயவித்தைக்காரர்களையும் விட
அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.
21 இவ்வாறு சைரசு என்ற அரசனது முதலாம் ஆட்சியாண்டுவரை
தானியேல் தொடர்ந்து பணிபுரிந்தார்.


குறிப்புகள்

[1] 1:1 = 2 அர 24:1; 2 குறி 36:5-7.
[2] 1:2-4 = 2 அர 20:17-18; 24:10-16;
2 குறி 36:10; எசா 39:7-8.

அதிகாரம் 2

[தொகு]

அரசனின் கனவும் தானியேலின் விளக்கமும்

[தொகு]


1 நெபுகத்னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு,
உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தான்.
2 அப்பொழுது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி
மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும்
சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான்.
அவர்களும் வந்து அரசன் முன்னிலையில் நின்றார்கள். [1]
3 அரசன் அவர்களை நோக்கி, "நான் ஒரு கனவு கண்டேன்;
அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது;
நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்" என்றான்.
4 அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமேய மொழியில்) [2]
"அரசரே! நீர் நீடுழி வாழ்க!
நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும்.
நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம்" என்று கூறினார்கள்.


5 அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக,
"நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும்
எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில்,
உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்;
உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்;
இது என் திண்ணமான முடிவு.
6 ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில்,
அன்பளிப்புகளும் பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள்.
ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும்
எனக்கு விளக்கிக் கூறுங்கள்" என்று கூறினான்.


7 அதற்கு அவர்கள் மீண்டும்,
"அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்;
அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்" என்று பதிலளித்தார்கள்.
8 அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது:
"நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே
நீங்கள் காலம் தாழ்ந்த முயலுகிறீர்கள்;
இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும்.
9 கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில்,
உங்கள் எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான்.
சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல
உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள்.
ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்;
அப்பொழுதுதான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும்
என்பதை நான் அறிந்துகொள்ள இயலும்."
10 கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி,
"அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவன்
இவ்வுலகில் ஒருவனுமில்லை;
வலிமையுடைய எந்தப் பேரரசனும்
இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது
மாயவித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது
இதுகாறும் கேட்டது கிடையாது.
11 ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று;
தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது;
ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!"
என்று மறுமொழி கூறினார்கள்.


12 அரசன் இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து
பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும்
அழித்துவிடும்படி ஆணையிட்டான்.
13 ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி
தானியேலையும் அவருடைய தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள்.
14 அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு
பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்டு வந்தான்.
15 தானியேல் முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும்
அரசனுனடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம்,
"அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்?" என்று கேட்டார்.
அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான்.
16 உடனே தானியேல் அரசனிடம் போய்,
கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத்
தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார்.


17 பின்னர், தானியேல் வீட்டுக்குத் திரும்பிச் சென்று,
அனனியா, மிசாவேல், அசரியா ஆகிய தோழர்களிடம் செய்தியைக் கூறினார்.
18 பாபிலோனிய ஞானிகளோடு அவரும்
அவர்களுடைய தோழர்களும் கொல்லப்படாதிருக்க,
விண்ணகக் கடவுள் கருணை கூhந்து
அம் மறைபொருளை வெளிப்படுத்தியருள வேண்டுமென்று
அவரை மன்றாடுமாறு அவர்களிடம் சொன்னார்.
19 அவ்வாறே அன்றிரவு கண்டகாட்சி ஒன்றில்,
தானியேலுக்கு அம்மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது.
அப்பொழுது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
20 அவர் கூறியது:


கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழத்தப்படுவதாக!
ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன!


21 காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே!
அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே!
ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே!
அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே!


22 ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே!
இருளில் உள்ளதை அறிபவர் அவரே!
ஒளியும் வாழ்வது அவருடனே!


23 எங்கள் தந்தையரின் இறைவா!
உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்;
ஏனெனில், எனக்கு ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே!
நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்தியவர் நீரே!
அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே!


24 பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை அழிப்பதற்கு
அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி,
"நீர் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்;
என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் செல்லும்;
நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்" என்றார்.


25 எனவே, அரியோக்கு தானியேலை,
அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, அரசனிடம்,
"அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள்,
அரசருடைய கனவின் உட்பொருளை விளக்கிக் கூறவல்ல
ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றான்.
26 அரசனோ "பெல்தசாச்சர்" என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து,
"நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும்
எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா?" என்று கேட்டான்.
27 தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி:
அரசர் கேட்கும் மறைபொருளை அரசருக்கு அறிவிக்க
எந்த ஞானியாலும் மாயவித்தைக்காரனாலும்
மந்திரவாதியாலும் சோதிடனாலும் இயலாது.
28 ஆனால் அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள்
பிற்காலத்தில் நிகழப் போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்;
நீர் கண்ட கனவும், நீர் படுத்திருந்த பொழுது,
உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் பின்வருமாறு:
29 அரசரே! நீர் படுத்திருந்த பொழுது,
எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்;
அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர்
இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார்.
30 ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் மற்றெல்லா உயிர்களையும்விட
நான் ஞானம் மிக்கவன் என்பதால் எனக்கு வெளிப்படுத்தப்படவில்லை.
ஆனால் அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும்
உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும்
அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


31 அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர்.
உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை
பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது.
32 அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது;
அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை;
வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.
33 அதன் கால்கள் இரும்பினால் ஆனவை;
அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும்
மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை.
நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது,
மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது.
34 அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான
அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது.
35 அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன்
ஆகியவை யாவும் நொறுங்கி,
கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின.
அவற்றின் அடையாளம் இராதபடி
காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது;
ஆனால் சிலையை மோதிய அந்தக் கல்
பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.


36 அரசரே! இதுவே நீர் கண்ட கனவு;
அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம்.
37 அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர்.
விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல்,
வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார்.
38 உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும்,
வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து,
அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார்.
எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது.
39 உமக்குப்பின் வேறோர் அரசு தோன்றும்;
அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்;
அது உலகெல்லாம் ஆளும்.
40 பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல்
வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்;
அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல்
அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும்.
41 மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும்,
ஒரு பகுதி குயவனின் களி மண்ணாகவும்,
மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க,
அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும்.
ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க,
இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும்.
42 அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும்
மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல்
அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும்
ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.
43 இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க,
அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்;
ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல்,
அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள்.
44 அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்;
அது என்றுமே அழியாது;
அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது.
அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்;
அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
45 மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து,
இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையுயம் வெள்ளியையும்
பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது.
இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை
மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார்.
கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.


46 அதைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர்
தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்;
அவர்க்குக் காணிக்கைப் பொருள்களைப் படைத்துத்
தூபமிடுமாறு ஆணையிட்டான்.
47 மேலும், அரசன் தானியேலை நோக்கி,
"நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்;
அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்;
அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர்.
இது உண்மையிலும் உண்மை;
ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை
விளக்கிக் கூறமுடிந்தது" என்றான்.
48 பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து
அவருக்குப் பரிசில் பல தந்து,
பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்;
பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான்.
49 மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைப்
பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான்.
தானியேலோ அரசனது அவையில் தொடர்ந்து பணியாற்றினார்.


குறிப்புகள்

[1] 2:2 = தொநூ 41:8.
[2] 2:4 - இவ்வசனம் தொடங்கி ஏழாம் அதிகாரம் முடிய,
மூலம் அரமேய மொழியில் எழுதப்பட்டுள்ளது.



(தொடர்ச்சி): தானியேல்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை