சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கமலி

விக்கிமூலம் இலிருந்து
38. கமலி

காஞ்சி மாநகரில் சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனைக்குப் பின்புறத்தில் விஸ்தாரமான பூந்தோட்டம் இருந்தது. பூந்தோட்டத்தின் பின்புறமதிற்சுவரையொட்டிச் சில சிறு கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் சில குதிரை லாயங்கள்; சில ரதங்களை நிறுத்தும் கொட்டடிகள்; மற்றவை ரதசாரதிகளும் தோட்டக்காரர்களும் வசித்த வீடுகள். அந்த வீடுகளில் ஒன்றுக்கு முன்னால், கண்ணபிரான் ஓட்டிக்கொண்டு வந்த ரதம் நின்றது. ரதத்தின் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பெண் குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

"கமலி! யாரை அழைத்து வந்திருக்கிறேன், பார்!" என்று சொல்லிக்கொண்டே கண்ணபிரான் ரதத்திலிருந்து குதித்தான். அதே சமயத்தில் ரதத்திலிருந்து சிவகாமி இறங்குவதைப் பார்த்த கமலி, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று சிவகாமியை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டாள். அப்போது வீட்டிற்குள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார். "அப்பா! யார் வந்திருக்கிறார் பாருங்கள்!" என்றான் கண்ணபிரான். அந்தப் பெரியவர் உற்றுப் பார்த்துவிட்டு, "வாருங்கள், ஐயா!" என்று சொல்லிக்கொண்டு ஆயனரின் அருகில் சென்றார். பெரியவரும் ஆயனரும் பேசிக்கொண்டே வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். கமலியும் சிவகாமியும் உள்ளே போனார்கள்.

சிவகாமியும் கமலியும் குழந்தைப்பிராயத்திலிருந்து தோழிகள். ஆயனர் காஞ்சியில் இருந்த காலத்தில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் கமலியின் பெற்றோர்கள் வசித்தார்கள். சிவகாமி குழந்தையாயிருந்தபோதே, அவளைக் காட்டிலும் ஒன்றரை வயது மூத்தவளான கமலி சிவகாமியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, "தங்கச்சி!" என்று அருமையாக அழைத்துச் சீராட்டுவாள். குழந்தை சிவகாமியும், "அக்கா! அக்கா!" என்று மழலைச் சொல்லில் குழறுவாள்.

இவ்வாறு ஆரம்பித்த அக்குழந்தைகளின் சிநேகமும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஆயனர் காட்டுக்குள்ளே சென்று வீடு கட்டிக்கொண்டு வசிக்கத் தொடங்கிய பிறகு கமலி அடிக்கடி அங்கு வந்து மாதக்கணக்கில் தங்கியிருப்பாள். சிவகாமி ஆட்டம் பயிலும் போதெல்லாம் கமலி அவள் எதிரில் இருந்து இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அவளுடைய ஆட்டத் திறமையைப் பாராட்டுவாள். "என் தங்கச்சிக்கு இணை ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!" என்பாள். ஆயனருக்கு அடுத்தபடியாகச் சிவகாமிக்கு ஆட்டக் கலையில் ஊக்கமளித்தவள் கமலி என்று தான் சொல்லவேண்டும்.

கமலியின் தகப்பனார் காஞ்சியில் பெயர்பெற்ற குதிரை வியாபாரி. அரேபியா முதலான வெளி தேசங்களிலிருந்து அவர் குதிரைகள் தருவிப்பார். மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் கப்பலில் வந்து குதிரைகள் இறங்கும். அவற்றைக் காஞ்சிக்குக் கொண்டு வருவார். முதலில் அரண்மனைக் குதிரைலாயத்தின் தலைவரும் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத் தலைவரும் வந்து, புதிதாகத் தருவிக்கப்பட்ட குதிரைகளைப் பார்ப்பார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டதுபோக மற்றக் குதிரைகளைத்தான் பொது ஜனங்களுக்கு விற்கலாம்.

இதன் காரணமாக, அரண்மனைக் குதிரை லாயத்தின் தலைவர் அடிக்கடி கமலியின் தந்தையைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வருவதுண்டு. சில சமயம் அவருடன் அவருடைய மகனும் வருவான். அந்த வாலிபன் பெயர்தான் கண்ணபிரான். தந்தைமார்கள் இருவரும் குதிரைப் பரிவர்த்தனை விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கையில், மகனுக்கும் மகளுக்கும் இடையே இருதய பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது. இரு குடும்பத்தாருக்கும் விஷயம் தெரிந்தபோது, கண்ணபிரானுக்கும் கமலிக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள். இது நடந்து வருஷம் ஒன்றரை ஆயிற்று. இந்த ஒன்றரை வருஷமும் சிவகாமியும் கமலியும் சந்திக்கவில்லை என்றாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் நினையாத நாள் கிடையாது.

இரவு உணவு அருந்திய பின்னர், ஆயனரும் அரண்மனையின் அசுவபாலரும் வாசல் திண்ணையில் காற்றோட்டமாகப் படுத்துக் கொண்டு யுத்த நிலைமையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். வீட்டுக்குள்ளே அரண்மனைப் பூந்தோட்டத்தை அடுத்திருந்த அறையில் சிவகாமியும் கமலியும் படுத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்தைப் பற்றிப் பேசவில்லை. கமலியின் இல்வாழ்க்கைதான் அவர்கள் சம்பாஷணையில் முக்கிய விஷயமாக இருந்தது. இடையிடையே 'கலீர்' 'கலீர்' என்று அவர்கள் குதூகலமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.

இரவு ஒன்றரை ஜாமத்துக்குமேல் ஆனபோது, வாசல் திண்ணையிலிருந்து ஆயனர், "அம்மா! சிவகாமி! உதயத்திற்கு முன்னால் நாம் புறப்பட வேண்டும் பேசியது போதும் தூங்கு!' என்றார். கமலியும் சிவகாமியும் உடனே கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். சிறிது நேரம் ஆனதும், சிவகாமி தூங்கி விட்டதாக எண்ணிக்கொண்டு கமலி சத்தம் செய்யாமல் எழுந்திருந்து அந்த அறையின் ஒரு பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள்.

சிவகாமி கண்களை மூடிக்கொண்டிருந்தாளே தவிர உண்மையில் தூங்கவில்லை. அவளுடைய உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து தோன்றிக் கொண்டிருந்தன. கமலிக்குக் கண்ணபிரான்மேல் காதல் உண்டான நாளிலிருந்து அவள் தன்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் சிவகாமியிடம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆரம்பத்திலிருந்தே கமலியின் காதல் ஆனந்தமாயிருந்தது. எவ்விதத் துக்கமோ வேதனையோ அவள் மனத்தில் ஏற்பட்டதில்லை. அந்த நாட்களில் அவளுடைய பேச்சு ஒரே குதூகலமாகவும் எக்களிப்பாகவுமே இருந்து வந்தது.

கல்யாணத்திற்குப் பிறகு அந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையும் அவ்விதமே குதூகலமாயிருக்கிறதென்பதை இப்போது சிவகாமி தெரிந்துகொண்டாள். ஆனால், தன்னுடைய காதல் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கவேண்டும்? அதில் எத்தனை வேதனை? எத்தனை ஆத்திரம்? எத்தனை கோபதாபம்? கமலியின் குதூகலமான காதலுக்கும், தன்னுடைய வேதனை மயமான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப்பார்க்கப் பார்க்க தனக்குத் தகுதியில்லாத இடத்தில் காதலைச் செலுத்தியது தான் தன்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று சிவகாமிக்குத் தோன்றியது.

அவரோ பெரிய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரியவர்; நாமோ கல்லில் உளியினால் வேலை செய்யும் சிற்பியின் மகள். அவருடைய காதலுக்கு நாம் ஆசைப்படுவது பெரிய பிசகுதான். ஆனால் இந்தப் பிசகுக்குக் காரணம் யார்? இந்த ஏழைச் சிற்பியின் மகளைத் தேடிக்கொண்டு அவர் தானே வந்தார்? ஒரு கவலையுமின்றிக் காட்டில் துள்ளி விளையாடும் மானைப்போல் குதூகலமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்த அபலைப் பெண்ணின் உள்ளத்தில் அவர் தானே ஆசைத்தீயை மூட்டினார்? ஆஹா! அந்த ஆசையானது இப்போது இப்படிப் பெருநெருப்பாய் மூண்டு விட்டதே? உடம்பையும் உள்ளத்தையும் இப்படித் தகிக்கின்றதே?

சற்று நேரம் புரண்டு பார்த்தும் தூக்கம் வராமற்போகவே, சிவகாமி படுக்கையை விட்டு எழுந்தாள். அந்த அறையின் பின்புறச் சுவரிலிருந்த பலகணியின் மாடத்தில் உட்கார்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே பலகணியின் வழியாகப் பங்குனி மாதத்து இளந்தென்றல் ஜிலுஜிலுவென்று வந்து கொண்டிருந்தது. அது சும்மா வரவில்லை அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்த செண்பக மரங்களில் நுழைந்தும், மல்லிகைச் செடிகளின் மீது தவழ்ந்தும் அந்த மலர்களின் இன்ப நறுமணத்தை அளாவிக் கொண்டு வந்தது. அவ்விதம் செண்பகமும் மல்லிகையும் கலந்து உண்டான சுகந்தமானது சிவகாமியின் உள்ளத்தில் ஏதோ தெளிவில்லாத பழைய ஞாபகங்களை உண்டாக்கிற்று. எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ஜன்ம ஜன்மாந்தரங்களில் இதே விதமான நறுமணத்தை அவள் நுகர்ந்தது போலவும், அந்தக் காலங்களிலும் இதே விதமான இன்ப வேதனை அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது போலவும், மங்கிய நினைவுகள் உண்டாயின. தனது அன்பைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆருயிர்க் காதலன் தனக்கு வெகு சமீபத்தில் இருந்தும் அவனை அடைய முடியாதிருப்பது போலவும், இருவருக்கும் இடையில் இன்னதென்று தெரியாத இடையூறுகள் முளைத்துப் பெரிய கரிய நிழல் உருவங்கள் எடுத்து நிற்பதுபோலவும் மனத்தில் பிரமைகள் உண்டாயின.