பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38சீவக சிந்தாமணி



அவ்விமானம் ஒரு மலையையும் அதில் இருந்த சோலையையும் அடைந்தது. அங்கே அவன் பசியைப் போக்கக் கனிகளும் நீர் வேட்கையை நீக்கத் தெளிந்த நீரும் கிடைத்தன. அவற்றை உண்டு உடம்பு குளிர்ந்தான். அங்கே குங்குமம், சுரபுன்னை, சந்தனம் முதலிய மரங்கள் காட்சிக்கு இனிமை தந்தன.

“இம்மலைகளில் கற்களே இல்லையா?” என்றான்.

“எல்லாம் வெள்ளிக் கட்டிகள்; அதனால் இதனை வெள்ளிமலை என்பார்கள்.”

“இந்த நகர்?”

“இதுதான் எம் தலைவன் ஆட்சி செய்யும் வித்தியாதர நகரம்; இது அமராவதியினும் அழகியது” என்று கூறி அவ்வணிகனைக் கலுழவேகன் இருக்குமிடம் அழைத்துச் சென்றான்.

“உன் பெயர் கேட்க மறந்து விட்டேன்.”

“தரன் என்று அழைப்பார்கள் என்னை” என்றான்.

வித்தியாதர அரசனின் அரண்மனைக்குச் சீதத்தன் அழைத்துச் செல்லப்பட்டான்.

கலுழவேகன் தன் பட்டத்து அாசி தரணியோடு வீற்றிருந்தான்.

முறுவல் பூத்த முகம்; அவன் வருகையை வரவேற்று “அமர்க” என்றான்.

“உம் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

“வியப்பாக இருக்கிறதே” என்றான் சீதத்தன்.

“நமக்குள் சாதிபேதம் தேவையில்லை; உம் மூதாதையர் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள்; நம் இரு குடும்பத்தினருக்கும் தொடர்பு தொன்று தொட்டுள்ளது.