42
மனத்தின் தோற்றம்
போல் மற்றொரு முல்லை மலருக்கே சென்று அம் மகரந்தப் பொடியைச் சேர்க்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஏன், அந்த வண்டு அடுத்தாற்போல் ஒர் ஆம்பல் மலருக்கோ அல்லது வேறொரு மலருக்கோ செல்லக்கூடாதா? அங்ஙனம் செல்லின் ஒரு முல்லையின் மகரந்தம் மற்றொரு முல்லையில் சேர்ந்து கருவுறுவது எப்படி? இப்படி ஒர் ஐயம் எழலா மன்றோ? ஆனால் இந்த ஐயத்திற்கு இடமேயில்லை. இது உற்றாய்ந்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு முல்லை மலரில் தேன் குடித்த வண்டு, குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணிநேரம் வரையும் முல்லை மலர்களை மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்குமாம். அதே போல மந்தாரையில் தேன் குடித்த வண்டு தொடர்ந்து மந்தாரையை தேடித்திரிந்து தேன் குடிக்குமாம்? ஆகா இயற்கையின் வியத்தகு செயலை என்னென்பது மலர்களின் காதல் வாழ்க்கைக்கு இயற்கை எப்படி யெப்படி யெல்லாமோ உதவுகின்ற தல்லவா?
மேலும், பெண் மலர்கள் ஆண் மலர்களின் கூட்டுறவைத் தவங்கிடந்து பெற்றுக் கருவுற்று இன வளர்ச்சி செய்வதோடல்லாது, காயாகிக் கனியாகிப் பிற உயிரினங்கட்கும் உதவி ஒப்புரவு செய்து வாழும் மனையறத்தை எண்ணுங்கால் மயிர்க்கூச் செறிகின்றது. இங்கே, நாம் உண்ணும் நெல், கேழ்வரகு முதலியவற்றின் வாழ்க்கையைச் சிறிது நினைத்துப் பார்ப்போம். இவற்றின் பூக்கதிர்கள் தலைக்குமேல் மிக உயர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் என்ன? தாங்கள் அடர்த்தியாக நெருங்கி வாழ்வதால், பூக்கதிர்கள் அடியிலோ நடுவிலோ ஏற்படின், பிறமகரந்தச் சேர்க்கைக்குப் போதிய வசதியிராது, அதனாலேயே, பூக்கதிர்களைத் தலைக்கு மேல் மிக நீட்டிக் கொண்டு பிறமகரந்தச் சேர்க்கையை எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றன. என்னே இந்தச் செயல்!