திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஏனெனில், மலைகளை உருவாக்கியவர் அவரே; காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே; தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே; காலைப்பொழுதைக் காரிருள் ஆகச் செய்பவரும் அவரே; நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே; படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்." - ஆமோஸ் 4:13

ஆமோஸ் (The Book of Amos)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]


1 இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்;
உங்களுக்கு எதிராக -ஆம்,
எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த
முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக -
ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்:


2 "உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும்
உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்;
ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும்
நான் உங்களைத் தண்டிப்பேன்.

இறைவாக்கினரின் அழைப்பு[தொகு]


3 தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்
இருவர் சேர்ந்து நடப்பார்களோ?


4 இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில்
சிங்கம் கர்ச்சிக்குமோ?
ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே
குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ?


5 வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே
பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ?
ஒன்றுமே சிக்காதிருக்கும்போது
பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ?


6 நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,
மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ?
ஆண்டவர் அனுப்பவில்லையெனில்,
நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?


7 தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத்
தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல்,
தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை.


8 சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;
அஞ்சி நடுங்காதவர் எவர்?
தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,
இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

சமாரியாவின் அழிவு[தொகு]


9 "அசீரியாவின் கோட்டைகள் மேலும்
எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு
இவ்வாறு பறைசாற்று:
சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்;
அங்கு ஏற்படும் குழப்பங்களையும்
நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.


10 நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை"
என்கிறார் ஆண்டவர்.
"அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும்
கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்."


11 ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
"பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்;
அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்;
உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.


12 ஆண்டவர் கூறுவது இதுவே:
"சிங்கத்தின் வாயிலிருந்து இடையன்
தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ
பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து,
பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து
இன்புறும் இஸ்ரயேல் மக்கள்
விடுவிக்கப்படுவதும் இருக்கும்."


13 "கேளுங்கள்; யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச்
சான்று பகருங்கள்," என்கிறார் தலைவரும்
படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.


14 "இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில்,
பெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்;
பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும். [*]


15 குளிர்கால வேனிற்கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்;
தந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்;
மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்," என்கிறார் ஆண்டவர்.


குறிப்பு

[*] 3:14 = 2 அர 23:15.


அதிகாரம் 4[தொகு]


1 "சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே!
இந்த வாக்கைக் கேளுங்கள்;
ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள்
உங்கள் கணவர்களைப் பார்த்து,
'கொண்டுவாருங்கள், குடிப்போம்' என்று சொல்கிறீர்கள்.


2 இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக்
கூறுவது இதுவே:
"உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன;
அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும்,
உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும்
இழுத்துக் கொண்டு போவார்கள்.


3 நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள
கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு
அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.

இஸ்ரயேலின் பிடிவாதம்[தொகு]


4 "வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்;
கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்;
நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்;
மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.


5 புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து
நன்றிப் பலியாகப் படையுங்கள்;
நேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள்.
இஸ்ரயேல் மக்களே,
இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம்", என்கிறார் ஆண்டவர்.


6 "உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு
வேலை இல்லாமல் செய்தேன்;
நீங்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம்
உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்;
ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை"
என்கிறார் ஆண்டவர்.


7 "நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே
உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்;
ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து
அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன்.
ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன்.
வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று.


8 ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித்
தள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும்
அவர்கள் தாகம் தீரவில்லை;
இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை"
என்கிறார் ஆண்டவர்.


9 "வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன்.
உங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்;
அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது;
ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.


10 "எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற
கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்;
உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்;
உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின;
உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம்
உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்;
ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை,"
என்கிறார் ஆண்டவர்.


11 "சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல
உங்களுள் சிலரை அழித்தேன்.
நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட
கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்;
ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை"
என்கிறார் ஆண்டவர். [*]


12 "ஆகையால், இஸ்ரயேலே!
உனக்கும் இவ்வாறே செய்வேன்,
இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால்
உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!"


13 ஏனெனில், மலைகளை உருவாக்கியவர் அவரே;
காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே;
தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே;
காலைப்பொழுதைக் காரிருள் ஆகச் செய்பவரும் அவரே;
நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே;
படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.


குறிப்பு

[*] 4:11 = தொநூ 19:24.


(தொடர்ச்சி): ஆமோஸ்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை