பக்கம்:அஞ்சலி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

வேண்டியதுதான் பாக்கி. சொல்லின் வேளையில் அவர்கள் வெளிப்படுவார்கள் எனும் தீர்மான உணர்வே எனக்கு உண்டு.

பார்க்கப்போனால், ஜன்மங்களே உயிரின் உடை மாற்றம்தானே! உயிரே, உணர்ச்சிகளின், எண்ணங்களின் வேஷப் பொருத்தம்தானே! ஆகையால் அந்தந்த வேஷம் அந்தந்த சமயத்தின் பொருத்தத்திற்கேற்ப வரும். அப்படி வருவதுதான் அதன் வெற்றி. அவ்வெற்றிதான் அதன் இலக்கணமுமாகும்.

காகிதத்தில் பேனா முள்ளால் கீறி, வெள்ளை கறுப்பானதுதான் எழுத்து அல்ல. எழுதினவன்தான் எழுத்தாளன் அல்ல.

எண்ணத்திலும், உணர்ச்சியிலும், உணர்விலும் உள்ள எழுச்சியிலுமே, நம் கையெழுத்தின் முழு சீறலுடன் கதையும், கவியும் நாம் சிருஷ்டித்துக்கொண்டேயிருக்கிறோம். நெஞ்சில் விழுந்த ஒவ்வொரு கீறலுமே ஒவ்வொரு தனித் தனிக் காவியம்தான். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்றாள் கிழவி. அம்மாதிரியே இதுவும் ஒரு மனப்பழக்கம்தான். இம் மனப்பழக்கம்தான் ரஸானுபவம். இந்த ரஸானுபவத்தை இக்கதைகள் அளிப்பின், அதுவே வாசகர் அவரவர் மூலம், அவைகளின் நிறைவு.

பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் தோன்றவில்லை. இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கின்றன. தரங்கணிக் (ஜலம்) கடுத்த இரண்டு மூன்று மாதங்களில் ஜமதக்னி (அக்னி). அதற்குச் சில மாதங்கள் கழித்துப் பூரணி (பூமி). பூரணிக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பின் காயத்ரி (காற்று). அதற்கும் எட்டு வருடங்கள் கழிந்தபிறகு ஏகா (ஆகாயம்). ஆக மொத்தம், இவ்வரிசை முற்றுப்பெற பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/8&oldid=1030107" இலிருந்து மீள்விக்கப்பட்டது