பக்கம்:அலைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 லா. சா. ராமாமிருதம்



"டாக்ஸி!-டாக்ஸி!!-டாக்ஸி!!!-"

அவசரத்துக்கு ரிக்க்ஷா தான் அகப்பட்டது. ஆபீஸுக்கு அரைமணி 'லேட்’. முதலாளியுடன் சற்று மனஸ்தாபம்.

வேலை இடுப்பை ஒடித்தது. மனம் வேலையில் ஒட வில்லை; ஒரு நிலையில் நிற்கவில்லை. எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஏதோ ஒரு சாக்குச் சொல்லி விட்டு, மூன்று மணிக்கே படியைவிட்டு இறங்கிவிட்டேன்.

சட்டைப் பைகளில் கையைத் திணித்துக்கொண்டு. அப்படியே கடற்கரைப் பக்கமாகப் போனேன்.

மணலும் நீலக்கடலும் தகதகத்தன. வெயில் முதுகுத் தோலை உரித்தது.

குளு குளு என்று பசுமை ததும்பும் சரீரம். இன்னமும் குடும்பத்தில் அடிபட்டு வாடி வதங்கவில்லை. புதுக்குடித்தனத்தின் சுகவேதனையில் துடிக்கும் சரீரம்-என் மடியில் அவள் மடிந்தாள்.

இந்த மனத்தின் நிலையை ஒவ்வொரு தடவை என்னென்று சொல்வது? காரணமற்ற கிலேசம்; அதில் ஒர் இன்பம். கடுகடுக்கும் தனித்தொழுகும் ஒரு தித்திப்பு.

கரையோரமாய் நடந்துகொண்டே போனேன். அலைகள் வந்து காலைக் கழுவின.

அம்மாதிரி என் மனத்தின் கனத்தைக் கழுவுமா அவை? கரையோரமாய் நடந்துகொண்டு, நடந்ததையெல்லாம் மறுபடியும் மன அரங்கில் ஒருமுறை நடித்துக் கொண்டேன்.

அவள் கன்னத்தைத் தொட்டேனா? ஆம், தொட்டேன், சூடு இருக்கிறதோ என்று பார்க்க. சூடு அதற்குள் தணிந்துவிடுமா என்ன, மாரடைப்பில் செத்தவளுக்கு? சந்தனம் போல் வழுவழுத்த கன்னங்கள் கூட மாறவில்லையே! முன் மயிர் மாத்திரம் கொஞ்சம், இரண்டு பிரிகள், கலைந்திருந்தன. கோணல் வகிடோ, நேர் வகிடோ? இல்லை, அதுதான் சரியாக ஞாபகமில்லை. இருந்தால்......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/36&oldid=1284280" இலிருந்து மீள்விக்கப்பட்டது