பக்கம்:அலைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 243


இதுவரை நான் ஸிந்துவைக் கண்டதில்லையா? என் காலடியிலேயே அவள் விளையாடவில்லையா? அவளை மற்றவர் கடிகையில் நான் சிபாரிசுக்குப் போனதில்லையா? நான் அவள் விஷமம் பொறுக்காது அவளை கடிந்ததில்லையா?

ஆனால் அவள் வந்தாள் என்று அறியத் தெரிவதே ஒரு வாய்ப்பு என்று அன்றி அவள் நேரிடும் சமயத்தையும் ரூபத்தையும் விதிக்க யாரால் முடியும்!

துக்கத்துக்கு மாற்றாய், தன்னை மறக்கடிக்க, ஏற்றிக் கொள்ளும் மயக்கம் பட்டுப்பட்டு, பதமாகி, தேடித் தேடித் தேர்ந்த அறிவின் கத்திவிளம்பில் நர்த்தனமாடும் உள் பிரஞையின் ரூபதிவ்யம்: என் அந்தியில், ஸிந்துவில், அவளை அவள் அம்சபூரணத்தில் சந்திக்கும் அநுபவானந்தம். அதன் பெருக்கில், எங்களிடையில் வயதின் கோடுகள் அழிகையில், ஸிந்துவே என் குழந்தை.

ஸிந்துவே என் தாய்.

என் ஸஹி.

ஸிந்து என் சுமைதாங்கி.

நாங்கள் இருவருமே, ஏதோ ஒரு வகையில், மற்றவருக்கு வேண்டாப் பொருளாகி விட்டோம், நான் என் மூதால்; அவள் தன் வருகையால். அதனாலேயே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் தேடிய பொருளாகி விட்டோம்.

மாலை நேரம் நாங்கள் கைப்பிடித்துக்கொண்டு நடக்கையில், என் வீட்டிலுள்ளவர்களின் கேலிக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகிறோம்,

"நூத்துப் பாட்டனும், நூத்துக் கிழவியும் உலாத்தக் கிளம்பியாச்சா?’’

"அதுக்கென்ன குறைச்சல்? அவா ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சரி. அது பிஞ்சுலே பழுத்த அத்துரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/245&oldid=1286160" இலிருந்து மீள்விக்கப்பட்டது