அபிதா O 63
குடத்தின் நசுங்கலிலிருந்து ஜலம் மத்தாப்பூக் கொட்டிக் கொண்டே போகிறது. அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி; ஆனால், அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ.
ஜ்வாலை காட்டும் உருக்கள்: “நானா? நீயா? நீயா? நானா?”
கேள்விக் கொக்கிகள் என் முகத்தைப் பிராண்ட எழுகின்றன. முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொண்டே நடக்கிறேன்.
ஆனால், சக்கு நீ எங்கும் போகவில்லை. அறிவீனத்தில் நான் எங்கெங்கோ போனேன். ஆனால் எங்கு போனேன். போவதற்கும் போனதற்கும் எங்குமில்லை என்பதற்கு நானே எனக்கு ருசுவாய் இப்போது இங்குதானிருக்கிறேன்.
நீயும் இங்கே தானிருக்கிறாய்.
ஆனால், சக்கு என்றுமே நீ ஒரு இருண்ட கேள்வி.
அபிதாதான் உன் வெளிச்சமான பதிலோ?
அபிதா, உன் வெளிச்சம் கண் கூசுகிறது.
உன்னோடு கண்ணைப் பொத்திக் கொண்டுதான் நடக்கிறேன்.
எனக்கு என்ன தோன்றுகிறது? ஏன் தோன்றுகிறது? என்ன புரிகிறது?
புரிந்தால் தானே!
புரிவதற்கே எதுவுமில்லை என்பதுதான் புரிகிறது. அது அது அந்தந்தச் சமயம் எப்படி எப்படித் தோன்றுகிறதோ அதுதான் உண்டு. தொன்றுதொட்டு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று என்று ஒன்று, நீயும் நானுமென இரண்டாய்ப் பிரிந்து, பிரிந்தபின், பிரிந்தது திரும்ப ஒன்ற நீயும் நானும் படும் ஓயாத வேதனையில், நீயும் நானும் வெட்டியும், ஒட்டியும், ஒவ்வியும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதும்- இதுதான் கண்டது!