80 O லா. ச. ராமாமிருதம்
நனைந்து, நனைந்த இடங்கள் உடலோடு ஒட்டித் கொண்டு அங்கங்கள் பிதுங்கின. சௌகரியத்திற்காக முழங்கால்களுக்கிடையே அள்ளிச் சொருகி, மடியில் அடைத்த சேலையின் நீலத்தையடுத்து தொடைச் சதை வெய்யில் படா தனி வெண்மையில் பளீரிட்டது.
அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் நின்ற இடத்தில் ஒரு வேளை கரைமேடு என்னை மறைத்ததோ என்னவோ? அல்ல, அவள் முழுக்கவனம் குடத்தைத் தேய்ப்பதில் முனைந்திருந்ததோ அல்ல, அவள் காணும் பகற்கனவிலிருந்து இன்னும் விழிக்கவில்லையோ?
கரைகளினிடையே வாய்க்கால் வளைந்து, தன் தலையைத் தேடும் பாம்பு போல் ஒடிற்று. கரை மேட்டுக்கப்பால், வயல்களில், கதிர்களிடையே காற்று சலசலத்து பாம்பின், சீறல்போல் ஒசை என்மேல் இறங்கிற்று. மையம் ஸஹிக்க முடியா ஸௌந்தரியம் கக்கிற்று.
விஷம்.
பொழுது, இடம், செயல் மூன்றும் ஒன்றாய் விழைந்து, உட்புலனுக்கு மட்டும் எட்டும் அர்த்தம் கொள்கின்றன.
கரைகள் என்ன குறுகினும்
நான் இக்கரை,
அவள் எதிர்க்கரை.
கரைகள் சொல்லும் பொருள் இதுதானோ? “நாங்கள் கரைகள் கரைகள் கரைகள்தாம்.” மௌனமாய் என் கரையோரம் மேலே நடக்கிறேன்.
பக்ஷிகள் உற்சாகமாய், மரங்களில், ஆகாயத்திலே, தலைக்குமேல், கண்பட்டு, கண்படாமல் சப்திக்கின்றன.
“ட்வீக் ட்வீக்- ”
“- கீக் கீச் கீச்- ”
“一 ட்ர்ர்ர்ரீ一”