அபிதா O 75
ஒரே எழுத்து. ஒரே சொல். ஒரே கத்தி. ஒரே குத்து.
மாமிக்கு கன்னங்கள் வெடித்துவிடும்போல் உப்புகின்றன. வாயடைச்சுப் போச்சு. விழி பிதுங்கறது.
ஆனால் அவள் தம்பிக்கு இரக்கமில்லை. அவள் பக்கம் கூட அவன் முகம் திரும்பவில்லை. அக்காவுக்காகவா அவன் இங்கு வருகிறான்?
“நீங்களும் வரணும் சார். மாமியையும் அழைச்சுண்டு. வாங்கோ உங்களுக்கெல்லாம் Air conditioned தியேட்டரில் உட்கார்ந்து பழக்கம் இல்லையா?” சிரிக்கிறான். Kolymos சிரிப்பு உரமான இறுகிய தாடைகள். நன்றாய்த்தானிருக்கிறான். “இதுவும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாயிருக்கட்டுமே! நாளடைவில் நானும் ஒரு Air conditioned தியேட்டர் கட்ட எனக்கு வசதி வரட்டும்னு, பெரியவாள் ஆசிர்வாதம் பண்ணுங்களேன்!”
பேச்சும் நன்றாய்த்தான் பேசுகிறான்.
“பேச்சுக்கு நாளடைவில்னு சொல்றேன். இந்த பிஸினெஸ் அடிச்சால் நாளைக்கே வாரிக் கொடுக்கும். போச்சுன்னா அன்னிக்கே காலை வாரிவிடும். சரி, நான் கிளம்பறேன். எனக்கு வேலை காத்துக்கிடக்கு. அபிதா மறக்காதே.”
ஆள் வந்து போனதே புயல் வந்து கடந்தாற்போல் அவன் சென்ற வழி நோக்கி அபிதா நின்றாள். இவன் ஒரு திக் விஜயன். இங்கத்திய நினைவு அவளுக்கில்லை. நினைப்பில் வெள்ளிக்கிழமை சினிமாவை இப்பவே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அப்படிக் காண்கையில் என் மார்பை மின்னல் வெட்டுகிறது.
- “நின்ன இடத்தில் கல்லாலடிச்சாப்போல் நின்னுட்டால் பறிச்ச பழம் மாதிரி கலத்தில் சோறு விழுந்துடுமா? விழுந்துடுமான்னு கேக்கறேன்!”