அபிதா O 61
கரை கண்டவன் கவலைவிட்டவன். மிதப்பவனுக்கு மலையேறினால் என்ன? மலையிறங்கினால் என்ன?. உயரவோ தாழவோ, எங்கு ஒதுங்கினாலும் அங்கு நான் உன்னோடு இருந்தால் சரி.
அற்ப விஷயம்; சொற்ப சம்பவம்; அடிவயிறு வெள்ளி வீச, கடல் வயிற்றில் மீன்குட்டி துள்ளி விழுந்து, தனிப்படுகையில் கடலென்றும் மீனென்றும் கண்ட தனிப்பேதம் பொருளா? பொருள் காட்டும் மருளா? அல்லது பொருள் காண்பதே மருளா?
அவிழ்த்து அவிழ்த்துப் போட்டு எடுத்தெடுத்துக் கட்டிக் கொள்ளும் பொருளே!
சமயமே சிற்பமாகி விட்டபின் சிற்பத்தில் எது அல்பம் எது சொல்பம்?
ஆனால் சக்கு, நீ சக்குவா? அபிதாவா?
மலையேறுமுன் சக்கு. மலையிறங்கியதும் அபிதா.
ஆனால் நீ யாராயிருந்தால் என்ன? இனி உன்னைக் கவனிப்பதன்றி எனக்கு வேறு ஜோலியில்லை. நீ காந்த மலையாகி விட்டாய். உன்னைக் கவனிக்கக் கவனிக்க உன் செயல், அசைவுகளின் நுணுக்கம் ஒவ்வொன்றும் நீ அபிதாவோ, சக்குவோ நீயெனும் கவிதையின் தனித்தனி அங்கமாய் ஒவ்வொரு தனிமையும் அதனதன் முழுமை பெற்று, அதன் இரக்கமற்ற கொக்கி என்மேல் விழுந்து கவ்வி, கழுவில் நான் நெளிகிறேன். தரிசனத்தின் பயங்கரம் இதுதான். தரிசனத்திற்கு இரக்கமில்லை. எந்த தரிசனமும் அஞ்சத் தக்கதே. என்னை எனக்கில்லாமல் எல்லாம் தனக்காக்கிக் கொண்டு விட்ட தரிசனி,
“நேரமாச்சு”
நேரமாச்சா என்ன? என் பொறி கலங்கிய நிலையில் நேரம் என்று ஒன்று இருக்கிறதா என்ன?
“போவோமா”