அபிதா O 109
அடுக்குமா?” என்கிறாயா? சாவித்ரி. இது விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்ந்து வரும் விதியின் பழிவாங்கல். இது உனக்குப் புரியாது. எனக்கே புரியல்லியே. இது சகுந்தலையின் கோபம். சகுந்தலை செத்துப் போனபின் அவள் கோபமாக மாறி, என்னை ஆட்டுவிக்கும் ஆட்டத்தில், அபிதா என் பெண்ணோ, பெண்டோ, இது என் செயலில் இல்லை. அபிதாவில் நான் காணும் சகுந்தலை. என்னில் தன் அம்பியைக் காணமாட்டாளா? சகுந்தலையில் அபிதா, அபிதாவில் சகுந்தலை. ஒருவருக்கொருவர் ஒருவரில் இருவர், இவர்கள்தான் என் சாபம், விமோசனம், இரண்டுமே.
சாவித்ரி, என்னை மன்னித்துவிடு. மன்னிக்க முடியாவிடில் மறந்துவிடு. இரண்டுமே இயலாவிடில், உன் கஷ்டத்துக்குப் பொறுப்பு நானானாலும், நீ படும் வேதனை உன்னுடையதுதான். நாளடைவில், பொறுப்பும் உன்னுடையதாகிவிடும். ஏனெனில் நான் என் விதியை நோக்கிச் செல்கிறேன்.
மலையடிவாரத்தில், கிணற்றடியில் சகுந்தலையை-இல்லை அபிதாவைக் காணோம் (பார், இப்பவே எனக்குக் குழம்புகிறது!) மலைமேல் போயிருப்பாளா? இல்லை, அதற்கு ரொம்பவும் நேரமாகி விட்டதே? இல்லை, இருட்டே இறங்க ஆரம்பித்து விட்டது. மலை, மலையாயில்லை. பிரம்மாண்டமான நிழலாக மாறிவிட்டது.
மலையடிவாரத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறேன்.
கரடிமலையே, நீதான் என் விதியோ? நான் எங்கிருந்தாலும் என்மேல் எப்பவும் விழுந்துகொண்டிருக்கும் நிழல் நீதானோ? கனவையும் நனவையும் ஒருங்கே தன்னுள் விழுங்கிய உன் நிழலின் சுயநலம் அதன் தன்மை யாது?