8
அன்பு அலறுகிறது
"தாயும் சேயும் போல இருப்பதற்கு மட்டும் இயற்கை இடங்கொடுக்குமோ?”
"கொடுக்கும், அத்தகைய நினைப்பில் அன்புக்கு மட்டுமே இடம் இருப்பதால்!”
அவள் ஒரு கணம் மெளனமாயிருந்தாள். மறு கணம் அன்பிற்கு உருவில்லை, நிறமில்லை, அழிவில்லை என்கிறார்களே, அது உண்மைதானா?’ என்றாள்.
"அத்துடன் மரத்துக்கு மரம் மாறி மாறித் தாவும் குரங்கைப் போல, ஆளுக்கு ஆள் அது மாறி மாறித் தாவுவதும் இல்லை என்று சேர்த்துக் கொள்ளுங்கள்!' என்றேன் நான்.
அவள் முகம் மலர்ந்தது; அந்த முகத்திலே அவளுடைய அகமும் மலர்வதை நான் என்னுடைய அகக்கண்ணால் கண்டேன்.
அதற்குப் பின் அவள் என்ன நினைத்தாளோ என்னமோ,"நானும் தமிழச்சிதான்!” என்றாள் பெருமையுடன் .
"ரொம்ப சந்தோஷம்; அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன்!” என்றேன் நான்.
"அது எப்படி நினைத்தீர்கள்?”
"இல்லாவிட்டால் ஆளுக்கு ஆள் மாறி மாறித் தாவாமலிருப்பதுதான் அன்பு என்று நான் சொன்னதும் உங்களுடைய முகம் மலர்ந்திருக்காதே!"