பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

9



அவ்வளவுதான்; 'ஆஹா! இதைக் கேட்கும் போது , நான் அனுபவிக்கும் இன்பமல்லவா. உண்மையான இன்பம்!” என்று ஒரு கணம் கண்ணை மூடி அந்த இன்பத்தை அவள் அனுபவித்தாள். மறு கணம், "உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்குமாமே, அது உண்மையா?" என்றாள்.

பொய்; வாழத் தெரியாதவர்கள் யாராவது இருந்தால்தானே அம்மா, உலகம் அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கப் போகிறது? இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும்-ஏன், ஒவ்வொரு ஜீவனும் வாழக்தெரிந்ததே, வாழத் தெரியாத எவரும், எந்த ஜீவனும் உலகில் பிறப்பதில்லை!”

"ஆச்சரிமாயிருக்கிறதே! அப்படி யாருமே எதுவுமே இல்லையென்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?”

"ஆமாம்; வாழ முடியாதவர்களை வாழத் தெரியாதவர்கள் என்று எப்படிச் சொல்வது?”

"சொல்ல முடியாதுதான்!” என்று நான் சொன்னதை ஆமோதித்துவிட்டு, "வாழத் துடிப்பவர்களுக்குக் குறுக்கே உலகம் நிற்கிறதாமே, அது உண்மைதானா?" என்றாள் அவள்.

"நிற்கும்; நிற்கத்தான் வேண்டும்!” என்றேன் நான்.

"ஏனாம்?”

"நிற்காவிட்டால் உலகம் மனிதர்களின் உலகமாயிருக்காது மிருகங்களின் உலகமாயிருக்கும்!"