24
அன்பு அலறுகிறது
"அணைத்துக்கொள், லலிதா! அடித்த கையால் என்னை அன்புடன் அணைத்துக்கொள், லலிதா! நீ மட்டுமல்ல-இனி நானும் உன்னுடையவன்தான்; என்னுடைய வாழ்வும் தாழ்வும் இனி உன்னுடைய கையில்தான் இருக்கிறது. அணைத்துக்கொள், லலிதா! அடித்த கையால் என்னை அன்புடன் அணைத்துக்கொள், லலிதா!"என்று 'கெஞ்சு, கெஞ்சு' எனக் கெஞ்சிக்கொண்டே அவர் என்னை நெருங்கினார்.
நடுக்கத்துடன் நான் அவரைப் பார்த்தேன்; சிறிது நேரத்துக்கு முன்னால் சிரித்த கண்கள் இப்போது அழுது கொண்டிருந்தன-ஆம், துன்பத்தின்போது மட்டுமல்ல; இன்பத்தின்போதும் மனிதன் அழத்தானே அழுகிறான்?
அவ்வளவுதான்; "பாவி நீங்களல்ல; நான்தான் பாவி?" என்று நான் அவரை ஒரே தாவாகத் தாவி அணைத்துக்கொண்டு அழுதேன் அழுதேன், அழுது கொண்டே இருந்தேன்.
"உன்னுடைய கண்ணீரை நான் துடைத்தேனே என்னுடைய கண்ணீரை நீ துடைக்கமாட்டாயா லலிதா?" என்றார் அவர்,
துடைத்தேன்!
"இன்று மட்டுமா துடைப்பாய்?" என்று அவர் கேட்டார்.
"என்றும் துடைப்பேன்!” என்றேன் நான்.
என்னுடைய கையை எடுத்துத் தம்முடைய கண்களில் ஒத்திக்கொண்டு, "ரொம்பப் பொல்லாதவள் நீ!" என்றார் அவர், சிரித்துக்கொண்டே.