திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நெகேமியா/அதிகாரங்கள் 11 முதல் 13 வரை

விக்கிமூலம் இலிருந்து
குரு, பெரிய குரு, லேவியர். ஹோல்மன் விவிலிய பதிப்பு. ஆண்டு: 1890.

நெகேமியா (The Book of Nehemiah)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 13 வரை

அதிகாரம் 11[தொகு]

எருசலேமில் வாழ்ந்தோர் பட்டியல்[தொகு]


1 மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர்.
ஏனைய மக்களில் பத்தில் ஒருவர்
புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச்
சீட்டுப் போட்டார்கள்.
மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.
2 எருசலேமில் மனமுவந்து வாழ
முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.
3 இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள்,
கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர்
யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில்
சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள். [*]


4 எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு:
இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர்.
யூதாவின் புதல்வர் பின்வருமாறு:
உசியா மகன் அத்தாயா - உசியா செக்கரியாவின் மகன்;
இவர் அமரியாவின் மகன்;
இவர் செபற்றியாவின் மகன்;
இவர் மகலலேலின் மகன்.
பேரேட்சின் வழிமரபினர்:
5 மாவேசியா பாரூக்கின் மகன்;
இவர் கொல்கோசியின் மகன்;
இவர் அசாயாவின் மகன்;
இவர் அதாயாவின் மகன்;
இவர் யோயாரிபின் மகன்;
இவர் செக்கரியாவின் மகன்;
இவர் சீலோனியின் மகன்.
6 எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர்
நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.


7 பென்யமினின் புதல்வர் இவர்களே:
சல்லூ மெசுல்லாமின் மகன்;
இவர் யோபேதுவின் மகன்;
இவர் பெத்யாவின் மகன்;
இவர் கொலயாவின் மகன்;
இவர் மாசேயாவின் மகன்;
இவர் இத்தியேலின் மகன்;
இவர் ஏசாயாவின் மகன்.
8 அவருக்குப் பின் கபாயும் சல்லாயும்.
இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.
9 சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார்.
அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.


10 குருக்கள்:
யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்;
11 செராயா;
இவர் இல்க்கியாவின் மகன்;
இவர் மெசுல்லாவின் மகன்;
இவர் சாதோக்கின் மகன்;
இவர் மெரயோத்தின் மகன்;
இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.
12 கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர்
எண்ணூற்று இருபத்திரண்டு பேர்.
அதாயா எரோகாமின் மகன்;
இவர் பெலலியாவின் மகன்;
இவர் அம்சியின் மகன்;
இவர் செக்கரியாவின் மகன்;
இவர் பஸ்கூரின் மகன்;
இவர் மல்கியாவின் மகன்.
13 குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர்.
அமசசாய் அசரியேலின் மகன்;
இவர் அகிசாயின் மகன்;
இவர் மெசில்லமோத்தின் மகன்;
இவர் இம்மேரின் மகன்.
14 படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு.
அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.


15 லேவியர்:
செமாயா;
இவர் அசூபாவின் மகன்;
இவர் அசபியாவின் மகன்;
இவர் பூனியின் மகன்.
16 கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும்,
லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;
17 மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா;
இவர் மீக்காவின் மகன்;
இவர் சப்தியின் மகன்;
இவர் ஆசாபின் மகன்;
பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார்.
அப்தா சம்முவாவின் மகன்;
இவர் காலாயின் மகன்;
இவர் எதுத்தூனின் மகன்.
18 புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.


19 வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன்,
இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
20 ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும்,
யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.
21 கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர்.
சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.
22 எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்;
இவர் அசபியாவின் மகன்;
இவர் மத்தனியாவின் மகன்;
இவர் மீக்காவின் மகன்;
இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.
23 பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது.
அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.
24 மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய
மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும்
அரசருக்கு உதவியாக இருந்தார்.

மற்ற ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்தோர் பட்டியல்[தொகு]


25 சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு:
யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும்
எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;
26 மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்
27 அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
28 சிக்லாசிலும், மெக்கோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,
29 ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,
30 சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும்,
இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும்,
அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.


31 பென்யமின் மக்கன் கெபா முதல் மிக்மாசிலும்,
அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,
32 அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்
33 ஆட்சோரிலும், இராமாவிலும், கித்தயிமிலும்
34 ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,
35 லோது, ஒனோ என்ற ஊர்களிலும்,
தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
36 லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.

குறிப்பு

[*] 11:3 = நெகே 7:73

அதிகாரம் 12[தொகு]

குருக்கள் மற்றும் லேவியர் பட்டியல்[தொகு]


1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும்,
வந்த குருக்களும், லேவியரும் பின் வருமாறு:
செராயா, எரேமியா, எஸ்ரா,
2 அமரியா, மல்லூக்கு, அத்தூசு,
3 செக்கனியா, இரகூம், மெரமோத்து,
4 இத்தோ, இன்னத்தோய், அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிபு, எதாயா,
7 சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில்,
குருக்களுக்கும் - தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.
8 லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல்,
செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும்
நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
9 பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும்
அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.

தலைமைக்குரு ஏசுவாவின் வழிவந்தோர்[தொகு]


10 ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்;
யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்;
எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.
11 யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்;
யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.

குருகுலத் தலைவர்கள்[தொகு]


12 யோவாக்கிமின் நாள்களில்
குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு:
செராயா வழிவந்த மெராயா;
எரேமியா வழிவந்த அனனியா;
13 எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்;
அமரியா வழிவந்த யோகனான்;
14 மல்லூக்கி வழிவந்த யோனத்தான்;
செபனியா வழி வந்த யோசேப்பு;
15 ஆரிம் வழிவந்த அத்னா;
மெரயோத்து வழிவந்த எல்க்காய்;
16 இத்தோ வழிவந்த செக்கரியா;
கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்;
17 அபியா வழிவந்த சிக்ரி;
மின்யமீன், மோவதியா, பில்த்தாய்;
18 பில்கா வழிவந்த சம்முவா;
செமாயா வழிவந்த யோனத்தான்;
19 யோயாரிபு வழிவந்த மத்தனாய்;
எதாயா வழிவந்த உசீ;
20 சல்லாம் வழிவந்த கல்லாய்;
அமோக்கு வழிவந்த ஏபேர்;
21 இல்க்கியா வழிவந்த அசுபியா;
யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.

குருக்கள் மற்றும் லேவியரின் பதிவேடு[தொகு]


22 லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா
ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து
பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள
லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
23 லேவியின் மக்களான குலத்தலைவர்கள்,
குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை
பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

கோவில் பணியின் பிரித்தளிப்பு[தொகு]


24 லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா,
கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும்
அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு,
கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி,
புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.
25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா,
மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர்,
வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.
26 இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த
ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும்,
ஆளுநர் நெகேமியா,
குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.

எருசலேம் மதிலின் அர்ப்பணம்[தொகு]


27 எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது
லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி
எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள்.
ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும்,
கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும்
கொண்டாட வேண்டியிருந்தது.
28 பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும்
நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும்,
29 பெத்கில்காலிலிருந்தும்,
கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.
30 குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு
மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.


31 அப்பொழுது நான்,
யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி,
புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன்.
ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி,
மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.
32 அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும்,
யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,
33 அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,
34 யூதா, பென்யமின், செமாயா,
எரேமியா ஆகியோரும் சென்றனர்.
35 மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்:
ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான
மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான
யோனத்தானின் மகன் செக்கரியாவும்,
36 அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல்,
மில்லலாய், கில்லேல், மாவாய்,
நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும்
கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர்.
நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.
37 அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து,
தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று
தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து
கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.


38 இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில்,
நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல்
அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம்.
சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.
39 எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும்,
மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம்,
மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம்.
அவர்களோ 'காவலர்' வாயிலில் நின்று கொண்டாhகள்.


40 பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும்
கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள்.
நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.
41 குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின்,
மீக்காயா, எலியோனாய், செக்கரியா,
அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.
42 மாசேயா, செமாயா, எலயாசர், உசீ,
யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர்.
பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.


43 அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர்.
ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார்.
அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர்.
எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.

கோவில் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள்[தொகு]


44 கருவூலம், படையல்கள், முதற்கனி,
பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும்,
திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை
நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள்.
ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும்
லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.
45 தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி,
இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும்,
தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர். [*]
46 ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே
பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.
47 மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும்
நெகேமியாவின் நாள்களிலிருந்தும்,
இஸ்ரயேல் மக்கள் யாவரும்,
பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை
நாள்தோறும் கொடுத்து வந்தனர்.
அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.
லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.


குறிப்பு

[*] 12:45 = 1 குறி 25:1-8; 26:12.


அதிகாரம் 13[தொகு]

வேற்றினத்தார் விலக்கப்படல்[தொகு]


1 அந்நாளில் மோசேயின் நூலை மக்கள் கேட்கும்படி உரக்கப் படித்தனர்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்:
"அம்மோனியரும் மோவாபியரும் என்றுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.
2 ஏனெனில் அவர்கள் இஸ்ரயேல் மக்களை அப்பத்தோடும் நீரோடும் சந்திக்காது,
அவர்களைச் சபிக்குமாறு பிலயாமுக்குக் கையூட்டுக் கொடுத்தனர்.
ஆனால் எங்கள் கடவுள் சாபத்தை ஆசியாக மாற்றிவிட்டார் ". [1] [2]
3 திருச்சட்டத்தைக் கேட்டவுடன் அவர்கள் எல்லா வேற்றினத்தாரையும்
இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து விட்டனர்.

நெகேமியாவின் சீர்திருத்தங்கள்[தொகு]


4 இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம்
எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
5 எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும்,
பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக்
கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம்,
திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும்
குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.
6 இவை எல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை.
ஏனெனில் பாபிலோனிய மன்னர் அர்த்தக்சஸ்தாவின் முப்பத்து இரண்டாம் ஆண்டில்
நான் மன்னரிடம் சென்றேன்.
சில காலத்துக்குப் பின் மன்னரிடம் நான் விடைபெற்றுத் திரும்பி வந்தேன்.
7 எல்யாசிபு தோபியாவுக்குக் கடவுளின் இல்ல முற்றத்தில்
ஓர் அறை கொடுத்திருந்ததால் விளைந்த தீமையை
நான் எருசலேமுக்கு வந்தபோது கண்டுபிடித்தேன்.
8 நான் மிகவும் சீற்றமுற்று,
தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன்.
9 பின்னர் நான் கட்டளையிட்டபடி
அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள்.
பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும்,
காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.


10 மேலும் லேவியருக்குச் சேர வேண்டிய காணிக்கைகள்
அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும்,
இதனால் அங்குப் பணிபுரிந்து வந்த லேவியரும் பாடகரும்
அவரவர் தம் நிலங்களுக்கு ஓடிப்போய் விட்டனர் என்றும் அறிந்தேன்.
11 அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு,
அவர்களிடம் "கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன்?" என்று கேட்டேன்.
பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன்.
12 அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும்,
திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும்
கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர்.
13 குரு செலேமியாவையும், மறை நூல் வல்லுநர் சாதோக்கையும்,
லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும்,
மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை
அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன்.
ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள்.
தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.


14 'என் கடவுளே! இதன் பொருட்டு என்னைக் கண்ணோக்கும்.
என் கடவுளின் கோவிலுக்கும் அதன் திருப்பணிக்கும்
அடியேன் உண்மையாய்ச் செய்துள்ளதை மறவாதேயும்'.


15 அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில்
திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும்,
தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும்,
திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள்,
அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை
ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன்.
அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன்.
16 மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள்,
மீன் மற்றும் வணிகப் பொருள்களை
யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.
17 எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு
நான் அவர்களிடம் கூறியது:
"எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்?
நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா?
18 உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ
நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார்.
இருப்பினும், ஓய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள்.
இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.


19 ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது,
கதவுகள் மூடப்படவேண்டும் என்றும்
ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன்.
எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.
20 எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும்
ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.
21 நான் அவர்களை எச்சரித்து,
"ஏன் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்?
மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்" என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.
22 "ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்;
வாயிலைக் காக்க வாருங்கள்" என்று லேவியரிடம் கூறினேன்.
இதன் பொருட்டும் 'என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும்.
உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்'.


23 அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு
ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.
24 அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்;
அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள்.
யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை.
25 நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன்.
சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன்.
"இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ,
அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோ மாட்டோம்"
எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன். [3]
26 நான் சொன்னது:
"இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ!
அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே!
அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார்.
கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார்.
இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள். [4]
27 வேற்றினப் பெண்களை மணந்து
கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும்
நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா?"


28 பெரிய குரு எல்யாசிபின் மகன் யோயாதாவின் மக்களில் ஒருவன்
ஓரானியனான சன்பலாற்றுக்கு மருமகனாய் இருந்தான்.
அவனை என்னிடமிருந்து துரத்திவிட்டேன். [5]
29 "என் கடவுளே, குருத்துவத்தையும்,
குருத்துவ உடன்படிக்கையையும்,
லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்."


30 வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்தினேன்.
குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து
பணிமுறைமைகளை அமைத்தேன்.
31 விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும்
குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்தேன்.
"என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்."


குறிப்புகள்

[1] 13:1-2 = இச 23:3-5.
[2] 13:2 = எண் 22:1-6.
[3] 13:23-25 = விப 34:11-16; இச 7:1-5.
[4] 13:26 = 2 சாமு 12:24-25; 1 அர 11:1-8.
[5] 13:28 = நெகே 4:1.

(நெகேமியா நூல் நிறைவுற்றது)

(தொடர்ச்சி): எஸ்தர்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை