உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது யாழிசைக்கிறார். ஓவியர்: டேவிட் குவெர்ச்சீனோ (1591-1666).

திருப்பாடல்கள்

[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 5 முதல் 6 வரை

திருப்பாடல் 5

[தொகு]

பாதுகாப்புக்காக மன்றாடல்

[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.


2 என் அரசரே, என் கடவுளே,
என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;
ஏனெனில், நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.


3 ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்;
வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன்.


4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.


5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்;
தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.


6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.


7 நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்;
உம் திருத்தூயகத்தை நோக்கி
இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்;


8 ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால்,
உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்;
உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.


9 ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை;
அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்;
அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;
அவர்கள் நா வஞ்சகம் பேசும். [*]


10 கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை
அவர்களுக்கு அளியும்;
அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்;
அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு,
அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.
ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.


11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்;
அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;
நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;
உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.


12 ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;
கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.


குறிப்பு

[*] 5:9 = உரோ 3:13.

திருப்பாடல் 6

[தொகு]

இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்

[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்;
என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.


2 ஆண்டவரே, எனக்கு இரங்கும்;
ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;
ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;
ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.


3 என் உயிர் ஊசலாடுகின்றது;
ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?


4 ஆண்டவரே, திரும்பும்;
என் உயிரைக் காப்பாற்றும்,
உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.


5 இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை;
பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?


6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்,
ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது.
என் கட்டில் அழுகையால் நனைகின்றது.


7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;
என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.


8 தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்;
ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார். [*]


9 ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்;
அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.


10 என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;
அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.


குறிப்பு

[*] 6:8 = திபா 38:1.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 7 முதல் 8 வரை