திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 35 முதல் 36 வரை

விக்கிமூலம் இலிருந்து
அரசன் செதேக்கியா சங்கிலியால் கட்டப்பட்டு நெபுகத்னேசருக்கு முன் கொண்டுவரப்படல். "விவிலிய வரலாறு" நூல் ஓவியம். கலைஞர்: பேத்ருசு கொமஸ்டோர். ஆண்டு:1670. காப்பிடம்:ஓலாந்து.

2 குறிப்பேடு (The Second Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 35 முதல் 36 வரை

அதிகாரம் 35[தொகு]

யோசியா பாஸ்காவைக் கொண்டாடல்[தொகு]

(2 அர 23:21-23)


1 பின்னர், யோசியா எருசலேமில் ஆண்டவருக்காகப் பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்; முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் அவர்கள் பாஸ்காப்பலி செலுத்தினர்.
2 அவர் குருக்களுக்கு அவர்களது பணிமுறையை வகுத்துக்கொடுத்து, ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களை ஊக்குவித்தார்.
3 அடுத்து, அவர் இஸ்ரயேலர் அனைவருக்கும் போதனை செய்தவர்களும் ஆண்டவருக்காகத் தங்களையே தூய்மையாக்கிக் கொண்டவர்களுமான லேவியரை நோக்கி, "இஸ்ரயேல் அரசர் தாவீதின் மகன் சாலமோன் கட்டியெழுப்பிய திருக்கோவிலில் புனிதப் பேழையை வையுங்கள்; உங்கள் தோள்களில் அது ஒரு சுமையாக இருத்தலாகாது! இப்பொழுது, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர்தம் மக்கள் இஸ்ரயேலுக்கும் பணிபுரியுங்கள்!
4 இஸ்ரயேல் அரசர் தாவீதும், அவர்தம் மகன் சாலமோனும் எழுதியுள்ளவாறு குடும்பவாரியாகவும், பகுதிவாரியாகவும் உங்களையே தயார்ப்படுத்திக்கொண்டு, [1]
5 நீங்கள் உங்கள் சகோதரராகிய மற்ற மக்களின் பிரிவிற்கேற்பப் பகுதி பகுதியாகத் திருத்தலத்தில் நில்லுங்கள்.
6 அங்கே பாஸ்காப்பலி செலுத்தி உங்களையே தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்; மேலும் உங்கள் சகோதரர் மோசேமூலம் வந்துள்ள ஆண்டவரின் வாக்கிற்கேற்ப வாழுமாறு அவர்களையும் தயார்ப்படுத்துங்கள்" என்று கூறினார்.


7 அங்கிருந்த மக்கள் பாஸ்காப் பலிக்கென அவர்களின் எண்ணிக்கைப்படி. செம்மறி ஆட்டுக்குட்டிகளும் வெள்ளாட்டுக் குட்டிகளுமாக மொத்தம் முப்பதாயிரமும், காளைகள் மூவாயிரமும் அரசர் யோசியா தம் உடைமையிலிருந்து அளித்தார்.
8 அவருடைய தலைமை அலுவலர் மக்களுக்கும் குருக்களுக்கும் லேவியருக்குமாக, தன்னார்வக் காணிக்கை அளித்தனர். ஆண்டவரின் இல்லத் தலைமை அதிகாரிகளான இல்க்கியா, செக்கரியா, எகியேல் ஆகியோரும் பாஸ்காப் பலிக்காக இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் அளித்தனர்.
9 மேலும் கொனனியா, அவன் சகோதரரான செமாயா, நெத்தனியேல், லேவியர் தலைவர்களான அசபியா, எயீயேல், யோசபாத்து ஆகியோரும் லேவியருக்குப் பாஸ்காப் பலிக்கென ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், ஐந்நூறு காளைகளையும் அளித்தனர்.


10 அரசரின் கட்டளைப்படி குருக்கள் அவர்களுக்குரிய இடத்தில் நிற்க, லேவியர் தங்கள் பிரிவின்படி காத்திருக்க, பாஸ்காப்பலி தயாரிக்கப்பட்டது.
11 அவர்கள் பாஸ்காப் பலிக்குரிய ஆட்டுக்குட்டிகளை வெட்டினர்; குருக்கள் அவற்றின் குருதியைத் தங்கள் கைகளில் பிடித்துத் தெளிக்க, லேவியர் தோலுரித்தனர்.
12 மேலும், மோசேயின் நூலில் எழுதியுள்ளவாறு மக்கள் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்படி அவர்கள் மூதாதையர் குடும்ப முறைமைப்படி, ஆடுகளையும் காளைகளையும் பிரித்துக் கொடுத்தனர்.
13 பின்னர் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை திருச்சட்ட முறைமைப்படி தீயில் வாட்டினர்; புனித காணிக்கைகளைப் பானைகள், சட்டிகள், கொப்பரைகள் ஆகியவற்றில் சமைத்து மக்கள் எல்லாருக்கும் விரைவாகப் பகிர்ந்தளித்தனர். [2]


14 இவ்வாறே தங்களுக்காகவும், குருக்களுக்காகவும், பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். ஆரோனின் மக்களான குருக்கள் எரிபலியையும், கொழுப்பானவற்றையும் இரவுவரை செலுத்தியதால், லேவியர் தங்களுக்காகவும் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்காகவும் ஆயத்தம் செய்தனர்.
15 மேலும் ஆசாபின் வழிமரபினரான பாடகர், தாவீது, ஆசாபு, ஏமான், அரசரின் திருக்காட்சியாளர் எதுத்தூன் ஆகியோரின் கட்டளைக்கேற்ப தமக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் நின்றனர். வாயிற்காப்போர் ஒவ்வொரு வாயிலிலும் நின்றிருந்தனர், அவர்கள் தங்கள் பணிமுறையிலிருந்து வழுவவில்லை. ஏனெனில், அவர்கள் சகோதரர்களான லேவியர் அவர்களுக்காகப் பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். [3]
16 பாஸ்காவைக் கொண்டாடுதல், ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலிகளைச் செலுத்துதல் ஆகிய அவரது வழிபாட்டுமுறை அனைத்தும் அரசர் யோசியாவின் கட்டளைப்படி அந்த நாளில் ஆயத்தம் செய்யப்பட்டன.
17 அங்கிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அப்பொழுது பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்; அன்றுமுதல் புளியாத அப்பத் திருவிழாவையும், ஏழு நாள்கள் கொண்டாடினர். [4]
18 இறைவாக்கினர் சாமுவேல் காலம் தொட்டு இன்றுவரை இஸ்ரயேலில் இதுபோன்று பாஸ்காத் திருவிழா நடைபெற்றதில்லை; யோசியாவும், குருக்களும், லேவியரும், அங்கிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் எருசலேம் வாழ் மக்களும் பாஸ்கா விழாவைக் கொண்டாடியது போல் இஸ்ரயேல் அரசர்களில் எவரும் கொண்டாடியதில்லை.
19 யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் இப்பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது.

யோசியாவின் இறப்பு[தொகு]

(2 அர 23:28-30)


20 இவையாவும் முடிந்தபின், அதாவது, யோசியா திருக்கோவிலை ஒழுங்குபடுத்தியபின், எகிப்திய மன்னன் நெக்கோ யூப்பரத்தீசு ஆற்றின் பகுதியிலிருந்த கர்க்கமிசு என்ற இடத்திற்குப் படையெடுத்து வந்தான். யோசியாவும் அவனை எதிர்கொண்டு சென்றார்.
21 ஆனால் எகிப்திய மன்னன் அவரிடம் தூதரை அனுப்பி, "யூதாவின் அரசே! உமக்கும் எனக்கும் என்ன? இன்று நான் உமக்கெதிராகப் படையெடுத்துவரவில்லை. மாறாக, வேறொருவனுடன் போரிடவே நான் செல்கிறேன். நான் இதனை விரைவாகச் செய்ய வேண்டுமென்று கடவுள் கூறியுள்ளார். என்னோடு இருக்கும் கடவுளை எதிர்ப்பதை நீர் நிறுத்துவீர்! இல்லையெனில், அவர் உம்மை அழித்துவிடுவார்" என்றார்.
22 ஆயினும், யோசியா தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல், மாறுவேடத்தில் அவனோடு போரிடச் சென்றார்; நெக்கோ மூலம் வந்த கடவுளின் வாய்மொழியைக் கேளாமல், மெகிதோ பள்ளத்தாக்கில் அவனோடு போரிடச் சென்றார்.


23 அரசர் யோசியாவின் மேல் வில்வீரர் அம்பெய்ய, அவர் தம் அலுவலர்களைப் பார்த்து, "என்னை உடனே அப்புறப்படுத்துங்கள், ஏனெனில் நான் பெரிதும் காயமடைந்துள்ளேன்" என்றார்.
24 அவருடைய அலுவலர்கள் அவரைத் தேரிலிருந்து இறக்கி, அவரது இரண்டாம் தேரில் ஏற்றி, எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவர் அங்கே இறக்க, தம் மூதாதையரின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டார். யோசியாவுக்காக யூதா, எருசலேம் முழுவதும் துக்கம் கொண்டாடியது.


25 யோசியாவுக்காக எரேமியாவும் ஓர் இரங்கற்பா இயற்றினார். அது எல்லாப் பாடகர், பாடகியராலும், அவருக்காகப் புலம்பும் பொழுது இன்றுவரை பாடப்படுகிறது. இது, இஸ்ரயேலில் நிலையான நியமமாகி, புலம்பல் பற்றிய நூலில் காணக்கிடக்கிறது.
26 யோசியா ஆட்சியின் மற்ற நிகழ்ச்சிகளும், ஆண்டவரின் சட்டத்திற்கேற்ப அவர் செய்த அவருடைய பக்திச் செயல்களும்,
27 தொடக்க முதல் இறுதிவரை எல்லாமே இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.

குறிப்புகள்

[1] 35:4 = 2 குறி 8:14.
[2] 35:13 = விப 12:8-9.
[3] 35:15 = 1 குறி 25:1.
[4] 35:17 = விப 12:1-20.

அதிகாரம் 36[தொகு]

யூதாவின் அரசன் யோவகாசு[தொகு]

(2 அர 23:30-35)


1 பின்னர், நாட்டுமக்கள் யோசியாவின் மகனான யோவகாசை அவருக்குப் பதிலாக எருசலேமில் அரசனாக்கினர்.
2 யோவகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபத்து மூன்று; அவன் எருசலேமில் மூன்றே மாதங்கள் ஆட்சி செய்தான்.
3 எகிப்திய மன்னன் அவனை எருசலேமில் பதவியிலிருந்து நீக்கியபின், நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், நாற்பது கிலோகிராம் பொன்னும் கப்பமாகச் செலுத்துமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
4 எகிப்திய மன்னன் யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம் என்று பெயர்மாற்றம் செய்து, அவனை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான்; பின்பு நெக்கோ, யோவகாசை எகிப்துக்கு இட்டுச் சென்றான். [1]

யூதாவின் அரசன் யோயாக்கிம்[தொகு]

(2 அர 23:36-24:7)


5 யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான். [2]
6 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான். [3]
7 அத்துடன், ஆண்டவரின் இல்லத்துப் பாத்திரங்கள் சிலவற்றை நெபுகத்னேசர் பாபிலோனுக்கு எடுத்துச் சென்று, அங்கேயுள்ள தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான்.
8 யோயாக்கீமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும், அவனுக்கு எதிராய்க் காணப்பட்டவை யாவும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அவனுக்குப்பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.

யூதாவின் அரசர் யோயாக்கின்[தொகு]

(2 அர 24:8-17)


9 யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
10 ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனது படையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்; பின்பு அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான். [4]

யூதாவின் அரசன் செதேக்கியா[தொகு]


11 செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். [5]
12 அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்; ஆண்டவர் பெயரால் பேசிய இறைவாக்கினர் எரேமியா முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளவில்லை.

எருசலேமின் வீழ்ச்சி[தொகு]

(2 அர 25:1-21; எரே 52:3-11)


13 கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். [6]
14 அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர்.
15 அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்.
16 ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது.


17 ஆதலால், அவர் அவர்களுக்கு எதிராக கல்தேயரின் மன்னனைப் படையெடுத்து வரச் செய்தார். அவன் அவர்களின் திருஉறைவிடமாகிய ஆண்டவரின் இல்லத்தில் அவர்களின் இளம் வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினான்; இளைஞர் கன்னியர் என்றோ, முதியோர் இளைஞர் என்றோ, எவர்மேலும் இரக்கம் காட்டாமல், எல்லாரையும் அவன் கையில் ஆண்டவர் ஒப்புவித்தார். [7]
18 கடவுளின் இல்லத்து எல்லாச் சிறிய, பெரிய பாத்திரங்களையும், அதன் கருவூலங்களையும் அரசனிடமும் அவன் அதிகாரிகளிடமும் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
19 கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர்.
20 மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.
21 "நாடு, ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்" என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. [8]

யூதர்கள் எருசலேமிற்குத் திரும்புமாறு சைரசு கட்டளையிடல்[தொகு]

(எஸ்ரா 1:1-4)


22 பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின்முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்:


23 "பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!" [9]

குறிப்புகள்

[1] 36:4 = எரே 22:11-12.
[2] 36:5 = எரே 22:18-19; 26:1-6; 35:1-19.
[3] 36:6 = எரே 25:1-38; 36:1-32; 45:1-5; தானி 1:1-2.
[4] 36:10 = எரே 22:24-30; 24:1-10; 29:1-2; 37:1; எசே 17:12,13.
[5] 36:11 = எரே 27:1-22; 28:1-17.
[6] 36:13 = எசே 17:15.
[7] 36:17 = எரே 21:1-10; 34:1-5.
[8] 36:21 = எரே 25:11; 29:10.
[9] 36:23 = எசா 46:28.


(குறிப்பேடு -இரண்டாம் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): எஸ்ரா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை