திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நகரின் தெருக்களில் அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே;
ஆள்நடமாட்டமற்ற இடங்களில் சுற்றித்திரியாதே." - சீராக்கின் ஞானம் 9:7.

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

பெண்கள்[தொகு]


1 உன் காதல் மனையாளைப் பார்த்துப் பொறாமைப்படாதே;
உனக்கே தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை
அவளுக்குச் சொல்லிக்கொடாதே.


2 ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே;
இல்லையேல், அவள் உன்னையே அடக்கியாள நேரிடும்.


3 நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே;
அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய். [1]


4 பாடகியுடன் உனக்குத் தொடர்பு வேண்டாம்.
அவளது மயக்கும் வலையில் சிக்கிக்கொள்வாய்.


5 கன்னிப்பெண்ணை உற்று நோக்காதே;
நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய். [2]


6 விலைமாதரிடம் உன் உள்ளத்தைப் பறிகொடாதே;
உன் உரிமைச் சொத்தை நீ இழக்க நேரிடும்.


7 நகரின் தெருக்களில் அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே;
ஆள்நடமாட்டமற்ற இடங்களில் சுற்றித்திரியாதே.


8 அழகான பெண்ணிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்;
பிறன் மனைவியின் அழகை உற்றுநோக்காதே.
பெண்களின் அழகால் பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்;
இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும். [3]


9 அடுத்தவருடைய மனைவியுடன் அமர்ந்து விருந்துண்ணாதே;
அவளுடன் மது அருந்திக் களிக்காதே;
உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்;
முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.

மற்றவர்களுடன் உறவு[தொகு]


10 உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே;
புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்;
புதிய நண்பர்கள் புதிய மதுவைப் போன்றவர்கள்.
நாள் ஆக ஆகத்தான் அதை நீ சுவைத்துக் களிப்பாய். [4]


11 பாவிகளின் பெருமை கண்டு பொறாமை கொள்ளாதே;
அவர்களுக்கு வரவிருக்கும் கேடு உனக்குத் தெரியாது.


12 இறைப்பற்றில்லாதவர்களுக்குப் பிடித்தமானவற்றில்
இன்பம் கொள்ளாதே;
அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே
தண்டனை பெறுவார்கள் என்பதை நினைவில் இருத்து. [5]


13 கொலை செய்ய அதிகாரம் கொண்டவர்களை விட்டுத்
தொலைவில் இரு;
அப்பொழுது சாவுபற்றிய அச்சத்தால் நீ அலைக்கழிக்கப்படமாட்டாய்;
அவர்களிடம் நீ சென்றால் தவறு ஏதும் செய்யாதே;
செய்தால் உன் உயிரை அவர்கள் வாங்கிவிடுவார்கள்.
கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய் என்றும்
நகரின் கோட்டை கொத்தளங்களூடே செல்கிறாய் என்றும் அறிந்துகொள்.


14 அடுத்திருப்பவரை அறிய முடிந்தவரை முயற்சி செய்;
ஞானிகளைக் கலந்து ஆலோசனை செய். [6]


15 அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு உரையாடு;
உன் பேச்செல்லாம் உன்னத இறைவனின் திருச்சட்டம்பற்றி அமையட்டும்.


16 நீதிமான்கள் உன்னுடன் விருந்தாடட்டும்;
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உனது பெருமையாக இருக்கட்டும்.


17 கைவினைஞரின் திறமையைக் கொண்டே
பொருள்கள் மதிப்புப் பெறுகின்றன;
மக்கள் தலைவர் தம் பேச்சைக் கொண்டே
ஞானியாய் மதிக்கப்படுகிறார்.


18 வாயாடியைக் கண்டு அவர்களின் நகரத்தார் அஞ்சுவர்;
உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.


குறிப்புகள்

[1] 9:3 = நீமொ 7:10-23.
[2] 9:5 = இச 22:28-29.
[3] 9:8 = 2 சாமு 11:2-4; மத் 5:28.
[4] 9:10 = நீமொ 27:10.
[5] 9:12 = நீமொ 11:21.
[6] 9:14 = தோபி 4:18.


அதிகாரம் 10[தொகு]

ஆட்சியாளர்[தொகு]


1 அறிவுடைய நடுவர் தம் மக்களுக்கு நற்பயிற்சி அளிப்பார்;
அறிவுக்கூர்மை கொண்டோரின் ஆட்சி சீராய் அமையும்.


2 மக்களின் நடுவர் எவ்வாறோ
அவருடைய பணியாளர்கள் அவ்வாறே;
நகரத் தலைவர் எவ்வழியோ,
அவ்வழி நகர மக்கள். [1]


3 நற்பயிற்சி பெறாத மன்னர் தம் மக்களை அழிப்பார்;
ஆட்சியாளர்களின் அறிவுக்கூர்மையால் நகர் கட்டியெழுப்பப்படும்.


4 மண்ணுலகில் அதிகாரம் ஆண்டவரின் கையில் உள்ளது;
ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில் அவரே எழுப்புகிறார்.


5 மனிதரின் மேம்பாடு ஆண்டவரின் கையில் உள்ளது;
மறைநூல் அறிஞர்களை அவர் பெருமைப்படுத்துவார்.

இறுமாப்பு[தொகு]


6 அநீதி ஒவ்வொன்றுக்காகவும்
அடுத்திருப்பவர்மீது சினம் கொள்ளாதே;
இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே.


7 இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்;
அநீதியை இருவரும் பழிப்பர்.


8 அநீதி, இறுமாப்பு, செல்வம்
ஆகியவற்றால் ஆட்சி கைமாறும்.


9 புழுதியும் சாம்பலுமாக மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்?
உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும்.


10 நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது;
இன்று மன்னர், நாளையோ பிணம்!


11 மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள்,
புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன. [2]


12 ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே
மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம்;
அவர்களின் உள்ளம் தங்களைப் படைத்தவரை விட்டு
அகன்று போகின்றது.


13 பாவமே ஆணவத்தின் தொடக்கம்.
அதில் மூழ்கிப்போனவர்கள் அருவருப்பை உண்டாக்குகின்றனர்;
இதனால், ஆண்டவர் அவர்கள்மீது
கேட்டறியாப் பேரிடர்களை வருவிப்பார்;
அவர்களை முழுதும் அழித்தொழிப்பார்.


14 ஆளுநர்களின் அரியணையினின்று
ஆண்டவர் அவர்களை வீழ்த்துகிறார்;
அவர்களுக்குப் பதிலாகப் பணிவுள்ளோரை அமர்த்துகிறார். [3]


15 நாடுகளின் ஆணிவேரை ஆண்டவர் அகழ்ந்தெறிகிறார்;
அவர்களுக்குப் பதிலாகத் தாழ்ந்தோரை நட்டுவைக்கிறார்.


16 ஆண்டவர் பிற இனத்தாரைப் பாழாக்குகிறார்;
அவர்களை அடியோடு அழிக்கிறார்.


17 அவர்களுள் சிலரை அகற்றி அழித்தொழிக்கிறார்;
அவர்களின் நினைவை உலகினின்று துடைத்தழிக்கிறார்.


18 செருக்கு மனிதருக்கென்று படைக்கப்படவில்லை;
கடுஞ் சீற்றமும் மானிடப் பிறவிக்கு உரியதல்ல.

மாண்புக்குரிய மனிதர்[தொகு]


19 மதிப்பிற்குரிய இனம் எது? மனித இனம்.
மதிப்பிற்குரிய இனம் எது? ஆண்டவருக்கு அஞ்சும் இனம்.
மதிக்கத் தகாத இனம் எது? அதே மனித இனம்.
மதிக்கத் தகாத இனம் எது? கட்டளைகளை மீறும் இனம்.


20 உடன் பிறந்தாருள் மூத்தவர் மதிப்பிற்குரியவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர் முன்னிலையில் மதிப்புப்பெறுவர்.


21 [ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஏற்பின் தொடக்கம்;
பிடிவாதமும் ஆணவமும் புறக்கணிப்பின் தொடக்கம்;] [4]


22 செல்வர், மாண்புமிக்கோர், வறியவர்
ஆகிய எல்லாருக்கும் உண்மையான பெருமை
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே.


23 அறிவுக்கூர்மை படைத்த ஏழைகளை இழிவுபடுத்தல் முறையன்று;
பாவிகளைப் பெருமைப்படுத்துவதும் சரியன்று.


24 பெரியார்கள், நடுவர்கள், ஆட்சியாளர்கள்
ஆகியோர் பெருமை பெறுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை விட
இவர்களுள் யாருமே பெரியவர் அல்லர்.


25 ஞானமுள்ள அடிமைக்கு உரிமைக் குடிமக்கள் பணிபுரிவார்கள்;
இது கண்டு அறிவாற்றல் நிறைந்தவர்கள் முறையிடமாட்டார்கள்.

பணிவு[தொகு]


26 நீ உன் வேலையைச் செய்யும்போது,
உன் ஞானத்தைக் காட்டிக் கொள்ளாதே;
வறுமையில் வாடும்போது
உன்னையே பெருமைப்படுத்திக் கொள்ளாதே.


27 தற்பெருமை பாராட்டி உணவுக்கு வழி இல்லாதோரைவிட
உழைத்து வளமையுடன் வாழ்வோர் சிறந்தோர்.


28 குழந்தாய்,
பணிவிலே நீ பெருமைகொள்;
உன் தகுதிக்கு ஏற்ற உன்னையே நீ மதி.


29 தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை
நீதிமான்களென யாரே கணிப்பர்?
தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை
யாரே பெருமைப்படுத்துவர்?


30 ஏழையருக்குத் தங்கள் அறிவாற்றலால் சிறப்பு;
செல்வருக்குத் தங்கள் செல்வத்தால் சிறப்பு.


31 வறுமையிலேயே பெருமை பெறுவோர்
செல்வச் செழிப்பில் எத்துணைப் பெருமை அடைவர்!
செல்வச் செழிப்பிலேயே சிறுமையுறுவோர்
வறுமையில் எத்துணைச் சிறுமையுறுவர்!


குறிப்புகள்

[1] 10:2 = நீமொ 29:12.
[2] 10:11 = எசா 14:11.
[3] 10:14 = 1 சாமு 2:8; லூக் 1:52.
[4] 10:21 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை