திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை
சீராக்கின் ஞானம் (The Book of Sirach)
[தொகு]அதிகாரங்கள் 7 முதல் 8 வரை
அதிகாரம் 7
[தொகு]பல்வகை அறிவுரை
[தொகு]
1 தீமை செய்யாதே;
தீமை ஒருபோதும் உனக்கு நேராது. [1]
2 அநீதியை விட்டு அகன்று செல்;
அநீதியும் உன்னைவிட்டு விலகும்.
3 குழந்தாய்,
அநீதி எனும் நிலத்தில் விதைக்காதே;
அப்போது அதில் நீ ஏழு மடங்கு விளைச்சலை அறுக்கமாட்டாய்.
4 ஆண்டவரிடமிருந்து உயர்நிலையைத் தேடாதே;
பெருமைக்குரிய இருக்கையை மன்னரிடமிருந்து நாடாதே.
5 ஆண்டவர் திருமுன் உன்னையே நீதிமான் ஆக்கிக்கொள்ளாதே;
மன்னர் முன் உன்னையே ஞானி ஆக்கிக்கொள்ளாதே. [2]
6 நடுவர் ஆவதற்கு விரும்பாதே;
அநீதியை நீக்க உன்னால் முடியாமல் போகலாம்;
வலியவருக்கு அஞ்சி உன் நேர்மைக்கே இழுக்கு வருவிக்கலாம். [3]
7 நகர மக்களுக்கு எதிராகக் குற்றம் செய்யாதே;
மக்கள்முன் உன் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதே.
8 செய்த பாவத்தையே மீண்டும் செய்யாதே;
அவற்றுள் ஒன்றாவது உனக்குத் தண்டனை பெற்றுத் தரும்.
9 'நான் அளிக்கும் எண்ணற்ற கொடைகளை
ஆண்டவர் கண்ணோக்குவார்;
உன்னத கடவுளுக்கு நான் செலுத்தும் பலிகளை
ஏற்றுக்கொள்வார்' எனச் சொல்லாதே. [4]
10 நீ மன்றாடும்போது மனம் சோர்ந்து போகாதே;
தருமம் செய்வதைப் புறக்கணியாதே. [5]
11 கசப்புணர்வு கொண்டோரை எள்ளிநகையாடாதே;
நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும் வல்லவர் ஒருவர் உள்ளார்.
12 பொய் புனைந்து உன் உடன்பிறப்பை ஏமாற்றாதே;
உன் நண்பர்க்கும் அவ்வாறே செய்யாதே. [6]
13 பொய் சொல்ல விரும்பாதே;
பொய் பேசும் பழக்கம் நன்மை தராது.
14 மூப்பர் கூட்டத்தில் உளறாதே;
நீ வேண்டும் போது பின்னிப் பின்னிப் பேசாதே. [7]
15 கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே;
இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை. [8]
16 பாவிகளின் கூட்டத்தோடு சேராதே;
கடவுளின் சினம் காலம் தாழ்த்தாது வெளிப்படும் என்பதை மறவாதே.
17 பணிவையே பெரிதும் நாடு;
இறைப்பற்றில்லாதவர்களுக்கு
நெருப்பும் புழுக்களும் தண்டனையாகக் கிடைக்கும். [9]
பிறரிடம் உறவு
[தொகு]
18 பணத்துக்காக நண்பரைக் கைவிடாதே;
உண்மையான சகோதரனை ஓபிர் நாட்டுப் பொன்னுக்காகவும்
பண்டம் மாற்றாதே.
19 ஞானமுள்ள நல்ல மனைவியை இழந்துவிடாதே;
அவளது நன்னயம் பொன்னைவிட உயர்ந்தது.
20 உண்மையுடன் உழைக்கும் உன் அடிமைகளுக்கும்,
தங்கள் உயிரையே உனக்காகக் கொடுக்கும் கூலியாள்களுக்கும்,
எவ்வகைத் தீங்கும் செய்யாதே.
21 அறிவுக்கூர்மை கொண்ட அடிமைக்கு அன்புகாட்டு;
அவனுக்கு விடுதலை கொடுக்க மறுக்காதே. [10]
22 உன் வீட்டில் விலங்குகள் இருந்தால் அவற்றைக் கவனித்துக்கொள்;
அவை உனக்குப் பயன் கொடுத்தால் அவற்றை வைத்துக்கொள்.
23 உனக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நற்பயற்சி அளி;
இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.
24 உனக்குப் பெண் பிள்ளைகள் இருந்தால்,
அவர்களது கற்பில் அக்கறை காட்டு;
அவர்களுக்கு மிகுதியாகச் செல்லம் கொடுக்காதே.
25 உன் மகளுக்குத் திருமணம் செய்துவை;
உன் தலையாய கடமையைச் செய்தவன் ஆவாய்.
அறிவுக்கூர்மை படைத்தவருக்கே உன் மகளை மணமுடித்துக்கொடு. [11]
26 உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி உனக்கு இருந்தால்
அவளைத் தள்ளி வைக்காதே;
நீ வெறுக்கும் மனைவியை நம்பிவிடாதே.
27 உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட;
உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே. [12]
28 அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள்;
அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது
என்பதை நினைவில் இருத்து.
29 உன் முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு அஞ்சு;
அவருடைய குருக்களை மதித்து நட.
30 உன்னை உண்டாக்கியவர்மீது
உன் முழு வலிமையோடும் அன்பு செலுத்து;
அவருடைய திருப்பணியாளர்களைக் கைவிடாதே. [13]
31 ஆண்டவருக்கு அஞ்சு;
குருக்களைப் பெருமைப்படுத்து;
குருக்களுக்குரிய பங்காகிய முதற்கனி,
குற்றம்போக்கும் பலி,
உழைப்பின் பயன்,
தூய்மையாக்கும் பலி,
தூய பொருள்களின் முதற்பயன் ஆகியவற்றை
உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி கொடு.
32 ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு;
இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும்; [14]
33 உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு;
உயிர் நீத்தோர்க்கும் அன்பு காட்ட மறவாதே.
34 அழுவோரைத் தவிர்க்காதே;
புலம்புவோரோடு புலம்பு.
35 நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே;
இத்தகைய செயல் மற்றவர்களின் அன்பினை உனக்குப் பெற்றுத் தரும்.
36 எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்;
அவ்வாறேனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்.
- குறிப்புகள்
[1] 7:1 = பேது 3:13.
[2] 7:5 = யோபு 9:2.
[3] 7:6 = லேவி 19:15.
[4] 7:9 = நீமொ 21:27.
[5] 7:10 = லூக் 18:1.
[6] 7:12 = தொநூ 4:8.
[7] 7:14 = சஉ 5:1-2; மத் 6:7.
[8] 7:15 = தொநூ 3:19.
[9] 7:17 = எசா 66:24.
[10] 7:21 = விப 21:2; இச 15:12.
[11] 7:24-25 = சீஞா 26:10-12; 42:9-11.
[12] 7:27 = தோபி 4:3-4.
[13] 7:30 = இச 6:5.
[14] 7:32 = இச 15:8.
அதிகாரம் 8
[தொகு]பொது அறிவு
[தொகு]
1 வலியவரோடு வழக்காடாதே;
அவர்கள் கையில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
2 செல்வருடன் சண்டையிடாதே;
உன்னைவிட அவர்கள் வசதிமிக்கவர்கள்.
பொன்னாசை பலரை அழித்திருக்கிறது;
மன்னர்களின் மனத்தையும் கெடுத்திருக்கிறது.
3 வாயாடிகளோடு வாதிடாதே;
எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்காதே.
4 பண்பற்றோரிடம் நகையாடாதே;
உன் முன்னோரை அவர்கள் பழித்துரைக்கலாம்.
5 பாவத்தினின்று மனந்திரும்புவோரைப் பழிக்காதே;
நாம் எல்லாருமே தண்டனைக்கு உரியவர்கள்
என்பதை நினைத்துக் கொள்.
6 முதியோர் எவரையும் இகழாதே;
நம்முள் சிலரும் முதுமை அடைந்து வருகிறோம். [1]
7 இறந்தோரைக் கண்டு மகிழாதே;
நாம் எல்லாருமே சாக வேண்டும் என்பதை நினைவில் கொள்.
8 ஞானிகளுடைய அறிவுரைகளைப் புறக்கணியாதே;
அவர்களுடைய பொன்மொழிகளைக் கற்றுணர்.
அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்;
பெரியார்களுக்குப் பணி செய்யக் கற்றுக்கொள்வாய்.
9 முதியோரின் உரைகளைப் புறக்கணியாதே;
அவர்களும் தங்கள் முன்னோரிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள்;
அவர்களிடமிருந்து நீயும் அறிவுக் கூர்மை பெறுவாய்;
தகுந்த நேரத்தில் தக்க விடை கூற அறிந்துகொள்வாய். [2]
10 பாவிகளது தீய நாட்டத்தைத் தூண்டிவிடாதே;
அது உன்னைப் பொசுக்கிவிடும்.
11 இறுமாப்புக் கொண்டோருடன் மோதாதே;
மோதினால், உன் சொற்களைக் கொண்டே உன்மீது குற்றம் சாட்டுவர்.
12 உன்னிலும் வலியோருக்குக் கடன்கொடாதே;
கொடுத்தால், அதை இழந்து விட்டதாக எண்ணிக்கொள்.
13 உன் உடைமைக்கு மிஞ்சிப் பிணையம் ஆகாதே;
பிணையமானால், பணம் செலுத்த ஆயத்தமாய் இரு.
14 நடுவருக்கே எதிராக வழக்குத் தொடுக்காதே;
அவரது பெருமையை முன்னிட்டு
அவர் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்படும்.
15 தறுதலைகளோடு பயணம் செய்யாதே;
அவர்கள் உனக்குச் சுமையாய் இருப்பார்கள்;
தங்களது விருப்பம் போல நடப்பார்கள்;
அவர்களது அறிவின்மையால் நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.
16 முன்கோபிகளுடன் சண்டையிடாதே;
அவர்களுடன் ஆளில்லாத் தனியிடத்திற்குச் செல்லாதே.
கொலை செய்யவும் அவர்கள் அஞ்சுவதில்லை;
உனக்கு உதவி இல்லாத இடத்தில் உன்னைத் தாக்கி வீழ்த்துவார்கள்.
17 அறிவிலிகளோடு கலந்தாராயாதே;
அவர்களால் இரகசியங்களைக் காப்பாற்ற முடியாது.
18 மறைக்க வேண்டியவற்றை அன்னியர் முன் செய்யாதே;
அவர்கள் எதை வெளியிடுவார்கள் என உனக்குத் தெரியாது.
19 திறந்த உள்ளத்துடன் எல்லாரிடமும் பேசாதே;
அவர்கள் உனக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.
- குறிப்புகள்
[1] 8:6 = லேவி 19:32.
[2] 8:9 = கொலோ 4:6.
(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை