உள்ளடக்கத்துக்குச் செல்

அந்திம காலம்/அந்திம காலம் - 15

விக்கிமூலம் இலிருந்து

அந்த மருத்துவ மனை சுத்தமாக இருந்தது. விசாலமாக இருந்தது. புதிதாக சில டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பெரும் பணம் முதலீடு செய்து கட்டியது. நுழைவாயில், வரவேற்பறை, அடையாளப் பலகைகள் அத்தனையையும் நவீனமாக பளபளப்பாக இருந்தன. பணியாளர்கள் பணிவுடனும் பரிவுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்கள்.

பரமாவின் பதிவு மிக வேகமாக நடந்தது. காப்புறுதிப் பத்திரம் பார்த்தவுடன் வைப்புத் தொகை ஏதும் கேட்கவில்லை. தாதியர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வார்டில் ஒரு சுத்தமான அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளுடன் அவனையும் படுக்க வைத்தார்கள். விசாலமான அறை. பிரகாசமான வர்ணங்களைச் சுவரில் பூசியிருந்தார்கள். குழந்தை ஓவியங்கள் நிறையத் தொங்கின.

டாக்டர் சொக்கலிங்கம் என்ற இனிய முகம் கொண்ட டாக்டர் ஒருவர் பரமாவை உடனே வந்து பார்த்தார். பக்கத்தில் நின்றிருந்த சிவமணியை பிள்ளையின் தகப்பன் என்று அன்னம் அறிமுகப் படுத்தி வைக்கக் கைகுலுக்கினார். "பிள்ளை மிகவும் பலவீனமாக இருக்கிறான்! அவனுக்கு டிரிப் போடுவதுதான் நல்லது" என்று சொல்லி தாதியைக் கூப்பிட்டு டிரிப்புக்கு ஏற்பாடு பண்ணினார்.

சிவமணி டாக்டரிடம் ஆங்கிலத்தில் கேட்டான்: "என்ன நினைக்கிறீர்கள் டாக்டர் சொக்கலிங்கம்?"

டாக்டர் சொக்கலிங்கம் அன்னத்தையும் ஜானகியையும் காட்டி, திருத்தமான தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கலந்து சொன்னார்: "மத்தியானம் இவங்கிட்ட விளக்கமா சொல்லியிருக்கேன். அக்யூட் லியூகேமியா, ரொம்ப வேகமா மத்த உறுப்புக்களுக்குப் பரவி வருது. வயிறு, சிறுநீரகம், ஈரல் எல்லாத்திலியும் பாதிப்பு இருக்கு. கெமோதெராப்பி ஆரம்பிச்சிட்டோம். ரேடியோதெராப்பி நாளைக்குக் காலையில ஆரம்பிச்சிடுவோம்!"

"எதினால இப்படி?" டாக்டர் தமிழ் பேசுவதைப் பார்த்து சிவமணியும் தமிழிலேயே கேட்டான்.

"எப்படின்னு சொல்ல முடியாது மிஸ்டர் சிவமணி. புற்று நோய்க்கான காரணங்களைக் கூற முடியாது. ஏராளமான காரணங்கள ஒரு உத்தேசமாத்தான் கூறலாம். உங்க மகன் கேசில பாரம்பரியத்தையும் கவனத்தில எடுத்துக்க வேண்டியிருக்கு!" என்றார்.

"என்ன பாரம்பரியம்?" என்று கேட்டான் சிவமணி.

"இதோ பிள்ளையினுடைய குடும்பத்தில இவனுடைய தாய் வழி தாத்தாவுக்கு புற்று நோய் இருக்கிறதா போட்டிருக்கே!" என்றார்.

"யாரைச் சொல்றிங்க?"

"மிஸ்டர் சுந்தரம், தாயின் தகப்பன்னு போட்டிருக்கே!"

சிவமணி திரும்பி சுந்தரத்தைப் பார்த்தான். "அப்படியா! உங்களுக்குக் கேன்சரா?" என்று வாய்பிளந்து கேட்டான்.

டாக்டர் சொக்கலிங்கம் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். "நீங்கதானா அது? மன்னிக்கணும். நான் உங்கள முன்பு பார்த்தில்லை." கை குலுக்கினார்.

"நெசமா மாமா? உங்களுக்குக் கேன்சரா?" மீண்டும் கேட்டான்.

இந்த விஷயம் இப்படிப் பொதுவில் உடைபடும் என்பது தெரியாமல் போயிற்று. எல்லாருக்கும் சொல்லித் தன்னைப் பரிதாபத்துக்குரிய காட்சிப் பொருளாக ஆக்கிவிடக் கூடாது என்ற அவர் நோக்கம் அங்கு தகர்ந்தது.

டாக்டர் சொக்கலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். "உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?"

"மௌன்ட் மிரியத்திலிருந்து டாக்டர் ராம்லிகிறவர் போன் பண்ணினார். உங்களுக்கு அவர் புதிய முறை சிகிச்சை ஆரம்பிச்சிருக்கிறாராமே! உங்க குடும்ப விவரங்கள்ள உங்கள் மகள் வழிப் பேரனுடைய நோயைப் பதிவு பண்ணி வைக்கணும்னு விவரம் கேட்டார். செல் ஆய்வுகள் பற்றிய விவரங்களையும் அனுப்பச் சொன்னார். அப்பதான் எங்களுக்கும் இந்த விவரம் தெரியும்."

டாக்டர் சொக்கலிங்கம் சுந்தரத்தின் புற்று நோய் பற்றிய சில விரங்களை மட்டும் மேலோட்டமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். டாக்டர் ராம்லி மேலும் விவரங்களை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்.

கொஞ்ச நேரம் மௌனமாகத் தலை குனிந்திருந்த சிவமணி டாக்டரிடம் கேட்டான். "இந்தப் பிள்ளை குணமடைகிற வாய்ப்புக்கள் எப்படி டாக்டர்?"

டாக்டர் சொக்கலிங்கம் யோசித்தார். "வௌிப்படையா சொல்லப் போனா அவன் நோய் ரொம்ப முத்தின நிலையில இருக்கு. ரத்தத்தில வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகமாப் போச்சி. அதனால உடம்புக்கு இரத்தம் சக்தியைக் கொண்டு போறது ரொம்பக் குறைஞ்சி ரத்த சோகை ஏற்பட்டு பிள்ளை ரொம்ப பலவீனமாயிட்டான். அந்த வெள்ளை அணுக்களைக் கட்டுப் படுத்த அதிகமான மருந்துகள் உள்ள செலுத்திட்டோம். இதுக்கும் அதிகமா செலுத்தினா அவனுடைய கிட்னிகள், ஈரல் இதெல்லாம் பழுதாயிடும். மருந்த அது தாங்காது. நாளைக்கு ஈரலுக்கு ரேடியேஷன் குடுக்கப் போறோம். அது எப்படி அதை ஏத்துக்கிதுன்னு பாத்திட்டு அப்புறம்தான் ரேடியேஷன அதிகப் படுத்தலாமான்னு பாக்க முடியும்."

"உயிர் பிழைச்சிக்குவானா டாக்டர்?"

"மன்னிக்கணும் மிஸ்டர் சிவமணி! மெடிக்கல் விவரங்களை மட்டும்தான் நான் சொல்ல முடியும். எங்க சிகிச்சை முறைகள் ரொம்ப நவீனமான முறைகள்தான். ஆனா அது கூட சில சமயங்கள்ள இந்தப் புற்று நோயின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமப் போகலாம். நம்பிக்கையோட இருங்க. பல நோயாளிகளின் வாழ்க்கையில மருந்துகள விட ஆண்டவன் புரியிற அற்புதம் அதிகம்!"

டாக்டர் விடை பெற்றுப் போய்விட்டார்.

சிவமணி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான். அப்புறம் சுந்தரத்தைப் பார்த்துக் கொஞ்சம் இரக்கமான குரலில் கேட்டான்: "எவ்வளவு நாளா உங்களுக்கு...?"

சுந்தரம் பேசவில்லை.

"எங்கிட்ட சொல்லவே இல்லையே!"

மௌனம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இத்தனை அவமானப் படுத்திய பிறகு "வாயை மூடு" என்றெல்லாம் அதட்டிப் பேசிய பிறகு, மரியாதை தெரியாத இந்த முரடன் தன் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு வார்த்தைகள் கனிவாகப் பேசிவிட்டான் என்பதால் அவனிடம் உடனடியாக நட்புப் பாராட்டிவிட அவருக்கு மனம் வரவில்லை. கோபம்தான் கொப்புளித்துக் கொண்டு வந்தது.

அருகில் வந்து கையைப் பிடித்தான். "மன்னிச்சிருங்க! நான் ரொம்ப முரட்டுத் தனமா நடந்துக்கிட்டேன்!"

அவன் கையை உதறினார். வேறு பக்கம் பார்த்தார். ஜானகியும் அன்னமும் பார்த்துப் பார்க்காதது போல இருந்தார்கள்.

சிவமணி கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக அலைந்தான். அவனுக்குச் சிகிரெட் பிடிக்கும் ஆசை வந்து விட்டது. ஆஸபத்திரிக்குள் எங்கும் சிகிரெட் பிடிக்க முடியாதாகையால் அலைகிறான் எனத் தெரிந்து கொண்டார்.

சம்பந்தியம்மாள் இதிலெல்லாம் எதிலும் சம்பந்தமில்லாதவள் போல் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள். பின் எழுந்து மகனிடம் போய்ப் பேசினாள். "சிவமணி, நாம் போலாமா? இனி கே.எல். போய்ச் சேரணுமே. உங்க அப்பா வேற தனியா காத்துக்கிட்டு இருப்பாரு!" என்றாள்.

சிவமணி அவள் முகத்தை முறைத்துப் பார்த்தான். "நீதான் இதெற்கெல்லாம் காரணம்!" என்பது போல அந்த முறைப்பு இருந்தது. அப்புறம் மெதுவாக ஜானகியிடம் வந்தான்.

"அத்தை! நான் போகணும். அம்மாவ கொண்டி திரும்ப விடணும். இல்லைன்னா இங்கியே தங்கிப் போவேன். நான் நெனச்சி வந்தது ஒண்ணு, இங்க நடக்கிறது வேறொண்ணு!." சொல்லித் தலை குனிந்திருந்தான். பின் தொடர்ந்தான்: "என் மகனப் பாத்துக்குங்க அத்தை! நான் நாளக்கி நாளன்னிக்கு வரப் பாக்கிறேன். கண்டிப்பா வருவேன். இடையில போன் பண்ணி கேட்டுக்கிறேன்!" என்றான்.

சிலுவார் பைக்குள் கையை விட்டு தன் பணப்பையை எடுத்துச் சில 50 ரிங்கிட் நோட்டுக்களைப் பிடுங்கினான். "இத வச்சிக்குங்க அத்தை! எங்கிட்ட இப்ப இருக்கிறது இவ்வளவுதான். பின்னால கொண்டு தர்ரேன்!" என்றான்.

ஜானகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "உன் பணம் எங்களுக்கு வேண்டாம்பா! ராதா அவனுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கா! அதுக்கு மேல செலவுக்கு எங்ககிட்ட காசு இருக்கு!" என்றாள்.

காசை பரமாவின் படுக்கையின் மீது போட்டான். இறுதியாக எல்லா மிடுக்குகளும் தணிந்த குரலில் "என்ன மன்னிச்சிடுங்க! நான் முரடன்! எனக்கு யோசிக்கத் தெரியாது! சரியாப் பேசத் தெரியாது! நான் வர்ரேன்!."

அம்மாவை வா என்று கூடச் சொல்லாமல் விருட்டென்று எழுந்து போனான். சம்பந்தியம்மாள் பின்னாலேயே ஓடினாள்.

அந்த அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளும் அவர்களுடைய பெற்றோர்கள் சிலரும் உறவினர்களும் இருந்தார்கள். இவர்கள் அனைவரின் முன்னிலையிலும்தான் இந்த நாடகங்கள் நடந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் சீனர்களாக இருந்ததால் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லை. என் நோயும் என் குடும்ப ரகசியங்களும் வெட்ட வௌிக்கு வந்தாயிற்று. இனி யார் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன? என நினைத்தார்.

கனிந்து வந்த இந்த முரட்டு மருமகனிடம் தாங்கள் இப்படி உதாசீனமாக நடந்து கொண்டது சரிதானா என்று எண்ணிப் பார்த்தார். ஆனால் அவன் அவர்கள் மேல் அள்ளி வீசியுள்ள அவமானங்களுக்கு இந்த உதாசீனம் ஒரு பொட்டளவுதான் எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.

நடப்பது ஒன்றும் தெரியாமல் பரமா மயங்கிக் கிடந்தான். அவனுக்கு டிரிப் போட்டிருந்ததோடு இப்போது வாயில் பிராண வாயுக் குழாயும் பொருத்தியிருந்தார்கள். ஒரு பரவௌி மனிதன் போல உடலிலிருந்து ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்க அவன் முகம் மேலும் துவண்டு கிடந்தது.

அவருக்கு உடம்பு பலவீனத்தால் நடுங்க ஆரம்பித்திருந்தது. தலையிலும் கை கால்களிலும் வலிகள் கூடியிருந்தன. தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. வீட்டுக்குப் போவதானால் அக்காவைத்தான் கேட்க வேண்டும். அவள் அவரையும் ஜானகியையும் இந்த இருட்டில் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு, ஒண்டியாக ஆஸ்பத்திரிக்குத் திரும்பி வரவேண்டும்.

அவள் பக்கம் பார்த்தார். அவள் பரமாவின் முகத்தை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு பிரமை இருந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்குள்? அவளுக்கென்று குடும்பம் இல்லை. இந்த மாதிரிப் பிரச்சினைகள் தன் வாழ்வில் வேண்டாம் என்பதைப் போல திருமணத்தையே தவிர்த்து விட்டவள். ஆனால் எல்லாப் பாரங்களையும் இப்போது அவள் முதுகில்தான் ஏற்றி வைத்திருக்கிறேன் என நினைத்தார். என் நோய், என் பேரப்பிள்ளையின் நோய், என் குடும்பம், என் மகளின் குடும்பத் தகராறு எல்லாம் உன் முதுகில்தானா அக்கா? எப்படி எல்லாவற்றையும் சுமக்கிறாய்? ஏன் சுமக்கிறாய்?

எக்கேடு கெட்டாவது போங்கள். தைப்பிங்கில் ஏரியோரத்தில் என் வசதியான பெரிய வீட்டில் நான் எனக்குத் தொந்திரவே கொடுக்காத ஓர் ஊமை அத்தையுடன் நிம்மதியாக இருக்கப் போகிறேன் என்று ஏன் எங்களைத் தூக்கி எறிந்து விட்டுப் போகவில்லை? எந்த பந்தம் உன்னைக் கட்டி வைத்திருக்கிறது? ஏன் எனக்காக இவ்வளவு செய்கிறாய்? அக்கா! உனக்கு நான் தம்பியா, மகனா?

ஜானகி வந்து தோள்களைப் பிடித்தாள். "ஏன் உங்களுக்கு இப்படி உதறுது?" என்று கேட்டாள்.

அன்னம் தலை நிமிர்ந்து பார்த்தாள். "என்ன வீட்டில கொண்டு விட்டுடு அக்கா!" என்றார். அன்னம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வந்து, "வா போகலாந் தம்பி!" என்றாள்.


      • *** ***

வீட்டிற்கு வந்து சேருவதற்குள் உடம்பு அதிகமாக உதறத் தொடங்கிவிட்டது. இப்படிக் காய்ச்சல் வரும் நேரங்களில் போட்டுக் கொள்வதென்று தனி மாத்திரை வீட்டில் இருந்தது. அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போகாதது தவறு என நினைத்துக் கொண்டார்.

வீட்டில் வண்டியை நிறுத்தி இரண்டு பெண்களுமாக அவரை அணைத்துப் பிடித்தவாறு வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவரைப் படுக்கையில் கிடத்தினார்கள்.

ஜானகியிடம் சொல்லி அந்தக் காய்ச்சல் மாத்திரையையும் தூக்க மாத்திரையும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கம்பளிக்குள் சுருண்டார். உடல் கதகதப்பாகி உதறல் கொஞ்சம் அடங்கியது. தொடர்ந்து வந்தது தூக்கமா, மயக்கமா என்பது தெரியவில்லை. ஆனால் நினைவு குறைந்து கண்களுக்குள் புகை மூண்டு இருண்டது. நல்லதுதான் என நினைத்துக் கொண்டார்.


      • *** ***

இருள் கனத்த மையாகக் கவிந்திருந்த நேரம். போன் அடித்தது போல இருந்தது. மூடிய கதவு நோக்கி போர்வையை நீக்கிக் கூர்ந்து கேட்டார். "டிரிங்... டிரிங்..." என்று போன்தான் வரவேற்பறையிலிருந்து விடாமல் அடித்தது. யார் இந்த நேரத்தில்...? ஜானகி அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். தலைமாட்டில் அலாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு! யார்? யார்?

பரமா பற்றிய செய்தியா? ராதாவா?

ஜானகியை எழுப்ப மனம் வரவில்லை. எழுந்து சென்று போனை எடுக்க முடியுமா? உடம்பு இடம் கொடுக்குமா? பேச முடியுமா?

போர்வையை நீக்கி எழுந்தார். தலை கொஞ்சம் சுற்றி அடங்கியது. கதவு திறந்தார். இரவு விளக்கு ஒன்று மட்டும் மஙகலாக ஹாலில் எரிந்து கொண்டிருந்தது. அந்த அரை இருளில் மெதுவாக அடிமேல் அடி வைத்துப் போனார். போனை எடுத்தார். மெதுவாக "ஹலோ" என்றார். அந்தச் சத்தம் கொஞ்சம் கரகரப்பாக வௌிவந்தது.

பதில் இல்லை. ஆனால் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று முதலில் புரியவில்லை. "ஹலோ" என்றார் மீண்டும். பதில் இல்லை. குழப்பமான ஒரு சத்தம். தவறான எண்ணா? விஷமிகள் விளையாடுகிறார்களா? இப்படித் தன்னைத் துன்பப் படுத்தி?

"ஹலோ" என்றார் மீண்டும்.

"மாமா!" என்று குரல் வந்தது. மாமாவா? சிவமணி குரல் போல...! ஏன் திணறுகிறான்.

"யாரு? சிவமணியா?" என்றார்.

"மாமா!" அழுகிறான். தேம்புகிறான்.

"என்ன சிவமணி?" என்றார்.

"மாமா! என் மகனப் பாத்துக்குங்க! பிளீஸ். என்னால தூங்க முடியில. எனனோட துக்கத்தத் தாங்க முடியில!" என்றான். தேம்பினான்.

"என்னப்பா! அழுவுறியா? ஏன் அழுவுற? நாங்கள்ளா இருக்கமே, பாத்துக்காமயா இருப்போம்? அழுவாத சிவமணி!" என்று ஆறுதல் சொல்ல முயன்றார்.

"மாமா! நான் முரடன். எனக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனா உங்களுக்குக் கேன்சர்ங்கிறது தெரிஞ்சிருந்தா அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டேன்!"

"அத மறந்திருப்பா! சின்ன விஷயம்!" என்றார்.

"மறக்க முடியாது மாமா! நான் பிடிக்க வந்த கைய உதறிட்டிங்கள, அத மறக்க முடியாது"." . அவருக்கே தன் செயல் முரட்டுத் தனமாகப் பட்டது. "சிவமணி, நான் அப்படி செஞ்சிருக்கப் படாது. நானும் ஒரு கோவத்திலதான்..."

"என் மூஞ்சில நீங்க அறைஞ்சிருக்கணும். காறித் துப்பியிருக்கணும்...!"

"சே! சே! அது அநாகரிகம்!"

"அதுதான் எனக்குக் கிடையாது மாமா! நாகரிகம் கிடையாது. அதினாலதான் ராதாவும் என்ன விட்டு ஓடிட்டா!"

அந்தக் கதைக்கு அவர் போக விரும்பவில்லை. உடல் தளர்ச்சி மீண்டும் வந்தது. "சிவமணி! பிறகு பேசிக்குவோம். நான் போய் படுக்கணும்!"

"மாமா! உங்களக் கையெடுத்துக் கும்பிட்றேன். என் பையனப் காப்பாத்தி எங்கிட்டக் குடுத்திடுங்க!" என்று மீண்டும் விம்மினான்.

"எல்லாம் பிறகு! மொதல்ல அவன் பிழைச்சி வரட்டும்னு பிரார்த்தன பண்ணு!" என்றார்.

போனை வைத்துவிட்டான். அவர் போனை வைத்துத் திரும்பியபோது ஜானகி தலை முடியைக் சேர்த்துக் கட்டியவாறு பின்னால் நின்றிருந்தாள்.

"யாருங்க?" என்றாள்.

"சிவமணிதான். மனம் உடைஞ்சி பேசிறான். மன்னிப்புக் கேக்கிறான்!" என்றார்.

"ஆமா இன்னைக்கு மன்னிப்பு, நாளைக்கு சண்டை, நாளன்னிக்கு அடி உதை! இதெல்லாம் உருப்படாத ஜென்மங்கள்!" என்றாள். "நீங்க வந்து படுங்க! நான் போன் அடிச்சதே கேக்காம தூங்கிட்டம் பாருங்க!" என்றாள்.

மெதுவாக வந்து படுத்தார். ஆனால் தூக்கம் முற்றாகப் போய்விட்டது. பேசியதில் தொண்டையில் வலி ஏற்பட்டிருந்தது. விடிய விடிய விழித்துப் புரண்டு கொண்டிருந்தார். அடுக்கடுக்கான எண்ணங்கள் வந்தன.

பரமா எப்படியிருப்பான் என எண்ணிப் பார்த்தார். அவன் கண் மூடிக்கிடக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தக் கண்மூடல் தூக்கமா, மயக்கமா? பிள்ளைக்கு உள்ளே என்னவெல்லாம் வலியிருக்கும்? எப்படி அவற்றை வௌியில் சொல்லுவான்?

மருமகனை எண்ணிப் பார்த்தார். திருந்தி விட்டானா? அழுதழுது பேசினானே! இதற்கு முன் அவன் அழுது தான் பார்த்ததில்லையே! என்று யோசித்தார். மனித குணம் ஒரு குறிப்பிட்ட வயதில் உருவாகி விட்டால் அப்புறம் அதிகமாகத் திருந்துவதில்லை. வார்ப்பு ஒன்று திடமாக உருவாகி விடுகிறது. தீய குணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவதில்லை. சட்டமும் சில சமயம் வாழ்க்கையும் கொடுக்கின்ற தண்டனைகளுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து விலகி இருக்கலாம். தற்காலிக விலக்கம்தான். அப்புறம் அடிப்படையில் ஊறிவிட்ட குணம் மீண்டும் தலையெடுக்கும்.

விடிந்தால் சிவமணியின் உள்ளம் இதே போல நினைக்குமா என எண்ணிப் பார்த்தார். இந்த இருட்டில், அவன் மகனுக்கு நேர்ந்துவிட்ட துயரத்தில், இந்த நேரத்தில் அவன் இளகியிருக்கிறான். ஒரு வேளை இரவில் குடித்திருப்பான். குடி அவன் உணர்ச்சிகளை மிகைப் படுத்தியிருக்கலாம். காலையில் அவனுடைய சுற்றுச் சூழல்களும் நண்பர்களும் அவனுக்கே உரிய முரட்டுத் தனமும் அவனை ஆளத் தொடங்கும் போது இப்படி நினைப்பானா? "என் மகனைப் பறித்துக் கொண்டீர்கள்" என்று சொல்ல மாட்டானா? சம்பந்தியம்மாள் சொன்னாளே, 'நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு!' அப்படிச் சொல்பவர்கள் பேச்சைக் கேட்டுத் தானும் வெறி கொண்டு ஆடமாட்டானா?

மனிதர்கள் அடிப்படைக் குணங்கள் மாறுவதில்லை என்பதாகத்தான் அவருக்குத் தோன்றியது. நல்லவர்கள் தீயவர்களாக ஆக நினைத்தாலும் முடிவதில்லை. அடாவடித்தனம் செய்வதில் சில லாபங்கள் இருக்கின்றன என்று தெரிந்தாலும் அப்படிச் செய்யத் தங்களைத் தாங்களே வற்புறுத்தினாலும் முடிவதில்லை. மனம் இசைந்தாலும் இயல்பு கட்டிப் போடுகிறது.

தீயவர்களும் அப்படித்தான். நன்மை செய்ய நினைத்தாலும் முடிவதில்லை. மனம் இருந்தாலும் இயல்பு அந்தப் பக்கம்தான் தள்ளுகிறது. தீயவன் மனந்திருந்தி வாழ்வது என்பதெல்லாம் சிறுவர் நீதிக் கதைகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சரி. ஆனால் வாழ்க்கையின் இயற்கையான நியதி அவரவர்களைக் கட்டித்தான் வைத்திருக்கிறது.

சிவமணி தீமையில் கட்டுப் பட்டிருக்கிறான். இன்று இரவு இது தற்காலிகத் தளர்ச்சி. நாளை இறுகிவிடுவான்.

பொறுத்திருந்து பார்ப்போம் என நினைத்துக் கொண்டார். தொண்டை வலி அதிகமாயிற்று. தொட்டுப் பார்த்தார். தடித்திருந்தது. வீக்கம் கண்டு வருகிறது என நினைத்துக் கொண்டார். டாக்டர் ராம்லியின் எச்சரிக்கை நினைவு வந்தது.

டாக்டர் ராம்லியும் தன்னுடைய இயல்பில் கட்டுண்டிருக்கிறாரா? என்னதான் டாக்டர் வேஷம் போட்டிருந்தாலும் பழைய தீயவன்தானா? அப்படி இருந்தால் தன் கதி என்ன ஆவது? சுந்தரத்துக்கு குழப்பம் அதிகமாயிற்று.

தொண்டை வறண்டது. படுக்கையின் பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலிலிருந்து ஒரு முழுத் தம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தார். ஒவ்வொரு மிடறுக்கும் தொண்டை வலித்தது.

நாலரை மணி வரை கடிகாரம் பார்த்திருந்தார். அப்படியானால் ஐந்து மணி வாக்கில்தான் தூங்கியிருக்க வேண்டும்.


      • *** ***

"டிரிங்... டிரிங்..."

டெலிபோன் அலறியதைக் கேட்டுத்தான் கண்விடூத்தார். இமைகளைப் பிரிக்க முடியவில்லை. உடனே படுக்கையை விட்டு எழவும் முடியவில்லை.

ஜானகி எழுந்து விட்டிருந்தாள். அவள் போய் டெலிபோனை எடுத்துப் பேசுவது மூடியிருந்த கதவினூடே மெல்லக் கேட்டது.

"ஹலோ... ஆமா... ராதாவா? ... அம்மாதாம்மா பேசிறேன்."

....

"நேத்து ராத்திரி கொண்டி ஆஸ்பத்திரியில சேத்தாச்சிம்மா."

....

"அவ்வளவு நல்லால்ல ராதா. மயக்கத்தில இருக்கிறான். ரொம்ப முத்திப் போச்சின்னு டாக்டர் சொல்றாரு. இன்னக்கித்தான் ரேடியேஷன் தெராப்பி ஆரம்பிக்கப் போறாங்களாம்."

....

"வியாழக் கிழம உறுதியாயிடுச்சா? சரி! ஆனா விமான நிலையத்தில இருந்து நீயாதான் டேக்சி எடுத்து வரணும். உன்ன வந்து அழச்சிக்க யாரும் இல்ல...!"

....

"அப்பா இருக்காரும்மா. படுத்திருக்கிறாரு."

....

"இல்ல இப்ப பேசமுடியாது."

....

"கோவம் இல்லம்மா! அவரு நெலமய நீயே நேரா வந்து பாத்துக்க!"

....

"டெலிபோன்ல சொல்ல விரும்பில. நீயே நேரே வந்து பாத்துக்க!"

....

"உன் புருஷனுக்குத் தெரியும். நேத்து ராத்திரி இங்கதான் இருந்திச்சி. அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. ஆஸ்பத்திரிக்கும் வந்தாங்க!"

....

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்து எல்லாத்தையும் கவனிச்சிக்க. வச்சிரட்டுமா!

....

"சரிம்மா பாத்துக்கிறோம். அழுவாத. அதுதான் வந்து நீயே பாக்கப் போறிய!"

டெலிபோனை வைக்கும் சத்தம் கேட்டது.

எழுந்து உட்கார்ந்தார். தலை சுழன்றவாறு இருந்தது. நிதானப்படவில்லை. ஜானகி கதவு திறந்து உள்ளே வந்தாள்.

"எழுந்திருச்சிட்டிங்களா? ராதா இப்பதான் போன் பண்ணினா!"

"கேட்டேன்! எனக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திக் குடு!" தொண்டையிலிருந்து சத்தம் கரகரப்பாக வந்தது.

தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்ததாள். "உங்க தொண்ட ஏன் இப்படி கரகரப்பா இருக்கு? வலிக்குதா?" என்று கேட்டாள்.

ஆமாம் என்று தலையாட்டிவிட்டுத் தண்ணீரை மெதுவாக விழுங்கினார். தொண்டை வலித்தது.

ஜானகி தடவிப் பார்த்துவிட்டு "வீங்கியிருக்குங்க!" என்றாள்.

"மருந்துதான் காரணம்" என்றார்.

"ராதா வியாழக்கிழம வர்ரது உறுதியாயிடுச்சாம். சாயந்தரம் 3 மணிக்கு கே.எல்.ல இறங்கி அடுத்த பிளைட் எடுத்து 5 மணிக்கு பினாங்கு வர்ராளாம்!"

"தெரிகிறது!" என்று தலையாட்டினார்.

மணி ஏழாகி விட்டிருந்தது. உடம்பு எப்படியிருந்தாலும் எழுந்து தயாராக வேண்டும். மருத்துவ மனைக்கு அழைத்துப் போக ராமா வந்து விடுவார்.

ராமாவைக் கொஞ்சம் வெள்ளன வரச்சொல்லியிருக்க வேண்டும். போகிற வடூயில் ஜானகியை ஸபெஷலிஸ்ட் சென்டரில் விட்டுப் போகவேண்டும். நேற்றுச் சொல்ல மறந்து விட்டது. இப்போது சொல்லலாமென்றால் திடீரென்று அந்த நல்ல நண்பனைத் தொந்திரவு படுத்த மனமில்லாமல் இருந்தது. இப்போதே எவ்வளவோ தொந்திரவு கொடுத்தாகிவிட்டது. அவர் வருகிற நேரத்தில் வரட்டும்.

குளியலறையில் இருந்த போதும் தலை சுற்றிக் கொண்டிருந்தது. எதையும் நேராக நின்று சரியாகச் செய்ய முடியவில்லை.

ஏழரை மணிக்குச் சட்டையை மாட்டிக் கொண்டிருந்த போது ராமா வந்து விட்ட ஓசை கேட்டது. எப்போதும் எட்டு மணிக்கு வருபவர் இன்றைக்கு எப்படி ஏழரை மணிக்கெல்லாம் வந்தார்? வௌியே வந்து அவரைப் பார்த்தார்.

"குட் மோர்னிங்" என்று தன் வழக்கமான சந்தோஷச் சிரிப்போடு சொன்னார் ராமா.

"குட் மோர்னிங் ராமா?". அவர் குரலின் கரகரப்பு ராமாவை வியக்க வைத்தது.

"ஏன் குரல் இப்படிப் பேச்சி...?"

"எல்லாம் மருந்துதான் ராமா! எப்படிப்பா இன்னக்கி வெள்ளனே வந்திட்ட?" என்று கேட்டார்.

"அதான் நேத்து நீங்க பரமாவ ஆஸ்பத்திரியில சேத்திருப்பீங்கன்னு தெரியும். உங்க மருமகன் வந்து பெரிய நாடகம் ஆடியிருப்பார்னு தெரியும். சேதியையும் கேட்டுட்டு தேவையானா ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் போயிட்டு, அப்படியே போவமேன்னுதான் எதுக்கும் வெள்ளனே வந்தேன்!" என்றார்.

கேட்கிறதையெல்லாம் கொடுக்கிறவன் மட்டுமல்ல தோழா நீ, கேளாததையும் குறிப்பறிந்து கொடுக்கிறவன் என்று எண்ணிக் கொண்டு ராமாவைத் தழுவிக் கொண்டார் சுந்தரம்.