அந்திம காலம்/அந்திம காலம் - 5
குடும்பம் சீராக நடந்து வந்தது. திருமணமான சில ஆண்டுகள் கடூத்துத்தான் ராதா பிறந்தாள். அதற்கு இரண்டாண்டுகள் கடூத்து வசந்தன் பிறந்தான். "வகைக்கு அரை டஜன்" என்று அவர்கள் பேசியது வேடிக்கைக்காகத்தான். அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்ற அறிவு இருவருக்கும் இருந்தது.
அக்கா இரண்டு குழந்தைகளின் பிரசவத்தின் போதும் அத்தையையும் அழைத்துக் கொண்டு உடன் வந்திருந்து எல்லா வகையிலும் உதவினாள். அவர்கள் ஊர் பிரிந்து வாழ்ந்தாலும் பாசம் மிகுந்ததே தவிர குறையவில்லை. விடுமுறை நாட்களில் சுந்தரமும் ஜானகியும் குழந்தைகளும் தைப்பிங் அத்தையின் வீட்டிற்குச் சென்று இருந்து வருவதென்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டிருந்தது.
சுந்தரம் அர்ப்பணிப்பு உணர்வுள்ள நல்ல ஆசிரியராக இருந்தார். பள்ளிக்கூடத்தின் எந்தப் பொறுப்பையும் அவர் தட்டிக் கழிப்பதில்லை. அதோடு தன்னை வளர்த்துக் கொள்ளவும் அவர் தவறவில்லை. வேலை பார்த்த காலத்திலேயே மாலை வேளைகளில் பள்ளி உயர்வுச் சான்றிதழ் கல்வியை தனியார்ப் பள்ளியில் கற்று நல்ல முறையில் தேரினார். தனது சேவையின் பத்தாம் ஆண்டு நிறைவு பெற்ற போது பல்கலைக் கழகத்தில் சென்று பயில மனுச் செய்து இடம் கிடைத்தவுடன் கல்வி அமைச்சுக்கு மனுச் செய்து மூன்றாண்டுகள் விடுமுறையும் அரைச் சம்பளமும் பெற்று மலாயாப் பல்கலைக் கழகத்தில் பயின்று சரித்திரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பட்டமும் பெற்றார்.
அவர் கோலாலும்பூரில் சென்று படித்த மூன்றாண்டுகளுக்கும் தைப்பிங்கிலிருந்த அத்தையை ஜானகிக்குத் துணையாக அக்கா அனுப்பி வைத்திருந்தாள். ஆகவே எந்தச் சிரமமும் தெரியவில்லை. ஜானகியும் குடும்பத்தைத் திறமையாக நடத்தக் கற்றுக் கொண்டாள். படிப்புக் குறைவுதான் என்றாலும் அறிவுக் குறை உள்ளவள் அல்ல. அவள் தகப்பனின் அடக்குமுறையால் வௌி உலகம் தெரியாமல் வெகுளியாக வளர்ந்து விட்டாலும் சுந்தரம் கொடுத்த சுதந்திரத்தில் அவள் திறமைகள் ஒளிர்ந்தன.
சுந்தரம் பட்டம் பெற்று வந்த கையோடு பினாங்கில் உள்ள மிகப் பெரிய, பழமைப் புகழ் வாய்ந்த பினேங் ஃப்ரீ ஸ்கூலுக்கு அவரை சரித்திர ஆசிரியராக மாற்றினார்கள். அந்தப் பள்ளியில் சுந்தரத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் நண்பர்களானார்கள். சுந்தரத்தோடு நண்பர்கள் வீட்டுக்குப் போக வர இருக்க ஜானகியும் அந்தச் சீன மலாய் சக ஆசிரியர்கள் குடும்பத்தோடும் கலந்து பழகத் தெரிந்து கொண்டாள்.
ஆங்கிலமும் மலாயுங்கூட கற்றுக்கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்த காலங்களில் அவர்களுக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்கவும் செய்தாள். சுந்தரத்திற்கு அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் பெருமையாக இருந்தது.
சுந்தரம் பள்ளிக்கூடத்தில் கடைபிடித்த நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு, கடமை தவறாமை இவற்றைக் கண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாலிப் அவரை கட்டொழுங்கு ஆசிரியராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். சுந்தரத்திற்கு அந்தப் பொறுப்பு பிடிக்கவில்லை.
"இஞ்சே தாலிப், நான் பொறுப்புகளுக்கு பயந்தவன் அல்ல என்பது தங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகள். அவர்களில் பலர் கெட்டிருக்கிறார்கள், மற்றவர்களையும் கெடுத்து வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுது உள்ள கட்டொழுங்கு ஆசிரியர் இதைக் கண்டும் காணாததுமாய் இருக்கிறார். என்னால் முடியாது. நான் நடவடிக்கையில் இறங்கினால் இவர்களின் பகை வரும். உங்களுக்கும் தொந்திரவுதான். என்னை விட்டு வேறு யாரையாவது நியமிப்பதுதான் நல்லது! என்னை விட சீனியரான பல ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்களே" என்றார்.
"சுந்தரம், நீங்கள் சொல்லுகின்ற அதே காரணங்களுக்காகத்தான் இந்தப் பொறுப்பை உங்கள் தலையில் சுமத்துகிறேன். இந்தப் பள்ளியின் மாணவர்கள் ஒழுக்கக் குறைவைப் பற்றி மாநிலக் கல்வித் துறைக்கே முறையீடுகள் போயிருக்கின்றன. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். இப்போதுள்ள கட்டொழுங்கு ஆசிரியர் பொறுப்பை சரிவரக் கவனிக்கவில்லை என்பது தௌிவாகி விட்டது. கல்வித் துறையில் உங்களைப் பற்றிச் சிலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களே உங்கள் பெயரை முன் மொடூந்தார்கள். ஆகவே எங்கள் நம்பிக்கையெல்லாம் உங்கள் மேல் இருக்கிறது. தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
தலைமை ஆசிரியர் இத்தனை வலுவாகக் கூறிய பிறகு சுந்தரத்தால் மறுக்க முடியவில்லை. அந்தப் பள்ளிக் கூடத்தில் தன் சக ஆசிரியராக இருந்து உற்ற நண்பராகிவிட்ட இராமச்சந்திரனிடம் மட்டும் தனியே கலந்து பேசினார்.
ராமா தைரியம் வழங்கினார்: "ஒப்புக் கொள்ளு சுந்தரம். நீ ஒரு தலைமை ஆசிரியராக ஆக எல்லாத் திறமையும் உள்ள ஆசிரியர். ஆகவே தேடி வர்ர முக்கிய பொறுப்புக்கள தட்டிக் கடூக்கக் கூடாது. என்னால முடியும்னு காட்டணும். அப்பதான் உன் மேல நம்பிக்கை ஏற்படும். ஆனா இது சிரமமான பொறுப்புத்தான். ரொம்ப எச்சரிக்கையா இருந்துக்க" என்றார்.
சுந்தரம் ஒரு பயத்துடன் ஏற்றுக்கொண்டார். விரைவிலேயே அந்தப் பொறுப்புக்குச் சோதனை வந்தது.
ஓராண்டுக்கு முன் வந்து சேர்ந்த ராம்லி என்ற மாணவன் மாநில அரசியலில் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகன். முரடன். வீட்டுக்குச் செல்லப் பள்ளை. பள்ளிக் கூடத்தில் படிப்பில் அக்கறையில்லாத சில மாணவர்களுக்கு அவன் தலைவனாக இருந்தான். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களையும் அவன் தன் கேங்கில் சேர்க்க முயன்ற போது சுந்தரம் அந்த நல்ல மாணவர்களைக் கூப்பிட்டு அவர்களை எச்சரித்து வைத்தார். "ராம்லியை நான் கண்டிக்க முடியாது. நான் சொன்னால் எதிர்த்து நிற்பான். அவனுக்குப் படிப்பிலும் பள்ளிக் கூடத்திலும் அகக்கறை கிடையாது. நீங்கள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆகவே கேட்பீர்கள். அவனோடு சேர்ந்து கெட்டுப் போகவேண்டாம். இநதப் பள்ளிக்கூட மாணவர்களின் நற்பெயரைக் காப்பாற்றுங்கள்" என்பதுதான் அவர் அறிவுரை.
ராம்லிக்கு இந்தச் செய்தி எட்டியவுடன் ஆசிரியரை மற்ற மாணவர்களிடம் கேவலமாகத் திட்டிப் பேசினான். இந்தப் பேச்சுக்கள் சுந்தரத்தின் காதுக்கு எட்டியிருந்தாலும் ஆதாரம் ஏதும் இல்லாமல் அவர் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.
ஒரு நாள் ஒரு பிற்பகல் பொழுதில் அவர் வேறு வேலையாகப் பள்ளிக் கூடம் போயிருந்த பொழுது மாணவன் ஒருவன் அவசரமாக அவருடைய அறைக்கு வந்து ராம்லியும் இன்னும் சில மாணவர்களும் பள்ளிக்கூடத்தின் பின்னால் உள்ள விளையாட்டுத் தளவாடங்கள் வைக்கும் அறையில் இரண்டு மாணவிகளை அடைத்து வைத்து தொந்திரவு செய்வதாகச் சொன்னான். சுந்தரம் அங்கு விரைந்து போனார். கதவு அடைத்திருந்தது. கதவுக்கு முன்னால் ராம்லியின் கும்பலைச் சேர்ந்த ஒரு மாணவன் காவல் நின்றான். திடீரென்று சுந்தரத்தைக் கண்டதும் "ஓய் செகு மரி, செகு மரி" என்று கத்திக் கொண்டு ஓடிவிட்டான். அடுத்த நிமிடம் கதவைப் படீரென்று திறந்து கொண்டு நான்கு மாணவர்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அவர்களில் மூவரை சுந்தரம் அடையாளம் கண்டு கொண்டார். கடைசியாக வௌியே வந்தவன் ராம்லி. அவன் அவசரப் படவில்லை. நின்று அவரை முறைத்துப் பார்த்து விட்டுத் தன் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.
"நில் ராம்லி, இங்கு என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்.
"உங்களுக்கு என்ன அதைப்பற்றி?" என்று கேட்டுவிட்டு அவன் மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.
சுந்தரம் கதவு திறந்து அறைக்குள் நுழைந்த போது பள்ளிச் சீருடைகள் அலங்கோலமாகக் குலைந்த இரண்டு பள்ளிப் பெண்கள் நின்றிருந்தார்கள். அவருடைய கேள்விகளுக்குப் பயந்து பயந்து பதில் சொன்னார்கள். பக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த தாங்கள் விளையாட்டுப் பயிற்சிக்கு வந்ததாகவும் ராம்லியும் அவன் நண்பர்களும் அவர்களை வௌியில் சந்தித்து வேடிக்கையாகப் பேசித் தங்களை இந்த அறைக்குள் அழைத்து வந்து பின்னர் கதவை மூடிவிட்டு முரட்டுத் தனமாக ஆடைகளைக் களைய முயன்றதாகவும் சொன்னார்கள்.
"தப்பாக ஏதாகிலும் நடந்ததா?" என்று கேட்டார்.
"இல்லை. நல்ல வேளையாகச் செகு வந்து விட்டீர்கள்" என்றார்கள்.
அவர்களைத் தன் அறையில் உட்கார வைத்துக் கேள்விகள் கேட்டு பெயர் அடையாளக்கார்டுகள் பதிந்துகொண்டு ஒரு புகார் எழுதிக் கொண்டு தலைமை ஆசிரியர் தாலிபுக்குப் போன் செய்தார். அவர் வீட்டில் இல்லை. போலிசுக்குப் போன் செய்வதா என்று யோசித்து விட்டுத் தலைமை ஆசிரியரைக் கலக்காமல் செய்யவேண்டாம் என்று முடிவு செய்து மாணவிகளை அனுப்பி விட்டார்.
மறுநாள் காலையில் முதல் வேலையாகத் தலைமை ஆசிரியரைப் பார்த்து விஷயத்தைக் கூறி எழுத்து பூர்வமான புகாரையும் அவரிடம் கொடுத்தார். தாலிபுக்குக் கோபத்தில் முகம் சிவந்து விட்டது. "பார்த்தீர்களா சுந்தரம். இவர்களெல்லாம் இந்தப் பள்ளியின் பெயரைக் கெடுக்க வந்தவர்கள் இவர்களைச் சும்மா விடக் கூடாது!" என்று அந்த மாணவர்களைக் கூப்பிடப் பணித்தார்.
இதற்கிடையே பள்ளிக் கூடம் முழுவதும் அந்த செய்தி பரவி பரபரப்பாக இருந்தது. சுந்தரத்தை வடூயில் சந்தித்த ஆசிரியர்கள் "உண்மைதானா? உண்மைதானா?" என்று கேட்டார்கள். செய்தி இவ்வளவு விரைவில் பரவியதற்குக் காரணம் நேற்று தன்னிடம் முதலில் வந்து செய்தி சொல்லி நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பையனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் யூகித்துக் கொண்டார்.
ராம்லியும் அவன் நண்பர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார்கள். ஒட்டு மொத்தமாகத் தங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்றார்கள். சுந்தரம் ஆசிரியருக்குத் தங்களை என்றுமே பிடிக்காதாகையால் யாரோ செய்த குற்றத்தைத் தங்கள் மேல் போடுவதாகச் சாதித்தார்கள்.
தலைமை ஆசிரியர் திகைத்தார். அதன் பின் முதலில் வந்து சுந்தரத்திடம் சொன்ன மாணவனை அழைத்துக் கேட்டார்கள். அவன் தயங்கித் தயங்கி அங்குமிக்கும் பார்த்தவாறு சொன்னான்:
"செகு! அந்த அறையில் இரண்டு பெண்களும் சில பையன்களும் நுழைவதைப் பார்த்தேன்! உடனே சென்று செகு சுந்தரத்திடம் சொன்னேன்!"
"யார் அந்தப் பையன்கள்?" என்று கேட்டார் தாலிப்.
"தெரியாது! நான் கவனிக்கவில்லை!"
"ராம்லி என்று நீ சொன்னதாகத்தானே செகு சுந்தரம் எழுதியிருக்கிறார்!"
"தூரத்தில் இருந்த பார்க்கும் போது ராம்லி போல இருக்கிறது என்று சொன்னேன்! ராம்லிதான் என்று சொல்லவில்லை!"
தலைமை ஆசிரியர் சுந்தரத்தைப் பார்த்தார். ராம்லியோ அவனைச் சார்ந்தவர்களோ இந்தப் பையனை மிரட்டியிருக்கிறார்கள் என்பது இருவருக்குமே தெரிந்தது.
அந்தப் பெண்கள் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியைக்கு தாலிப் போன் செய்தார். அந்தப் பெண்களின் விவரங்களைக் கொடுத்து இந்தப் பையன்களைத் தான் அங்கு பள்ளிக்குக் கொண்டு வருவதாகவும் பெண்களை விசாரித்து அடையாளம் காட்டும் படியும் கேட்டுக் கொண்டார்.
தாலிப், சுந்தரம் இருவரும் தங்கள் கார்களிலேயே பையன்களை ஏற்றிக் கொண்டு அந்தப் பள்ளிக்குப் போனார்கள். அந்த இரண்டு சிறுமிகளும் அங்கு தலைமை ஆசிரியை அறையில் காத்திருந்தார்கள். நேற்று நடந்தது உண்மைதான் என ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பையன்களை அடையாளம் காட்டச் சொன்ன போது இவர்கள் அல்ல என்றார்கள். தங்களைக் கெடுக்க முயன்ற பையன்களைத் தங்களுக்குத் தெரியாதென்றும் எந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடத் தெரியாதென்றும் சாதித்து விட்டார்கள். இங்கும் ராம்லியின் மிரட்டல் நடந்திருக்க வேண்டும் என்பது சுந்தரத்திற்குப் புரிந்தது.
ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பையன்களை எச்சரித்துத் திரும்ப அனுப்பினார் தலைமை ஆசிரியர். ராம்லி கேட்டான்: "செகு பெசார்! எங்களை ஏன் எச்சரிக்கிறீர்கள்? செகு சுந்தரம் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார். எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். எச்சரிக்கப்பட வேண்டியவர் அவர்தான்! அவர் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிடில் எங்கள் பெற்றோர்களிடம் சொல்லிப் போலிசில் புகார் செய்யச் சொல்லுவோம்!"
சுந்தரம் அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு தைரியம் உள்ளவனா? இவ்வளவு கெட்டவனா? இவ்வளவு கெட்டிக்காரனா?
தலைமை ஆசிரியர் சுந்தரத்தைத் தனியாயக் கொண்டு போய் பேசினார்.
"சுந்தரம். ஒரு வேளை நீங்கள்தான் அவசரத்தில் தவறாக அடையாளம் கண்டு விட்டீர்களோ?"
"இஞ்சே தாலிப். அவன் வௌியில் வந்து நின்று என்னிடம் பேசினான்! "உங்களுக்கு என்ன அதைப் பற்றி?" என்று கேட்டு அவனுடைய மோட்டார் சைக்கிளில் ஏறிப் போனான். எப்படி நான் தவறாக அடையாளம் கண்டிருக்க முடியும்?"
தலைமை ஆசிரியர் மேலும் கீழும் நடந்தார். பெரு மூச்சு விட்டார்: "சரி! நான் நம்புகிறேன். ஆனால் சாட்சிகள் சம்பந்தப் பட்டவர்கள் எல்லாம் திரும்பி விட்டார்கள். நீங்களும் உடனடியாகப் போலிசில் புகார் செய்யவில்லை. இப்போதைக்கு இதோடு விட்டு விடுவோம்!" என்றார்.
"அப்போது என் வார்த்தைக்கு என்ன மதிப்பு, இஞ்சே தாலிப்? இம்மாதிரி தறுதலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் நாளைக்கு என்னையும் உங்களையும் யார் மதிப்பார்கள்?" என்று கேட்டார் சுந்தரம்.
தலைமை ஆசிரியர் அமைதியிழந்து அலைந்தார். "சரி. இந்த மாணவர்களின் பெற்றோர்களை நாளை வரவழைத்துப் பேசுவோம்! கண்டித்து வைக்கச் சொல்லுவோம்!" என்றார்.
அன்று பிற்பகல் ராம்லியின் தந்தை டத்தோ யூசுப் மாநில அரசின் பெயர் பொறித்த அதிகார்வ பூர்வ பெரிய காரில் வந்து பள்ளிக்கூடத்தில் வந்து இறங்கினார். முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் கூறிய புகார்களைக் கேட்டார். இறுதியில் சொன்னார்: "நான் இந்த விஷயத்தை என் பையனிடமும் மற்றவர்களிடமும் விசாரித்து விட்டேன். அவர்கள் இப்படிப்பட்ட தவற்றைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. உங்கள் கட்டொழுங்கு ஆசிரியர் என் மகன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியால் யாரோ செய்த குற்றத்தை அவன் தலை மேல் சுமத்துகிறார். ஆகவே அவர்தான் தன் தவற்றுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் இந்தக் குற்றச் சாட்டை மீட்டுக் கொண்டு என் மகனிடமும் மற்ற மாணவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் இந்த விஷயத்தை இதோடு விட்டு விடுகிறேன். இல்லையானால் கல்வித் துறைக்கும் போலிசுக்கும் சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வேன்! இது என் எச்சரிக்கை!" என்றார்.
தலைமை ஆசிரியர் தாலிப் அதிர்ச்சியடைந்திருந்தார். சுந்தரமும் இந்த எதிர்பாராத தாக்குதலின் கடுமையில் அதிர்ந்துதான் இருந்தார். என்ன நடக்கிறது இங்கே? நானா குற்றவாளியாகிவிட்டேன்? இரண்டு மாணவிகள் மானபங்கம் செய்யப் படுவதினின்றும் காப்பாற்றித் தன் கடமையை ஆற்றியதற்குக் கிடைக்கும் பரிசா இது?
தாலிப் சுந்தரத்தைத் தனியாக அழைத்துப் போனார். "சுந்தரம். இந்த விஷயம் இப்படித் திரும்பி விட்டதற்கு வருத்தப் படுகிறேன். ஆனால் உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய சாட்சிகள் எல்லாம் மாறிப் போய் விட்டதால் ஒரு சிறிய மன்னிப்போடு இந்த விஷயத்தை முடித்துவிடுவோம். மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம். டத்தோவிடம் மட்டும் கேட்டு மற்றவர்கள் காது படாமல் நம் மூவருக்குள் முடித்துவிடுவோம். அதுதான் இந்தப் பள்ளிக் கூடத்துக்கும் உங்களுக்கும் நல்லது" என்று சுந்தரம் காதில் கிசுகிசுத்தார்.
சுந்தரம் மலைத்திருந்தார். இங்கு வந்திருப்பவர் அதிகாரம் மிக்கவர். அவர் மகன் சொல்லியிருப்பது பொய்யேயானாலும் அவருக்கு அது தெரிந்திருக்க நியாயாமில்லை. பொய்யைப் பொய் என்று அறிந்து கொள்ளாமல் அதைத் தற்காக்க வந்திருக்கிறார். தலைமை ஆசிரியரோ இந்த விஷயத்தை இதோடு முடித்துவிட்டு தன் பெயரையும் பள்ளிக்கூடத்தின் பெயரையும் தற்றகாத்துக் கொள்ள முனைந்திருக்கிறார்.
ஆனால் தான் பேசுவது சத்தியம். ஆகவே தான் இந்த அதிகாரத்துக்கும் பகைக்கும் பொய்க்கும் அடி பணிந்து போக வேண்டியதில்லை. அடிபணிந்தால் இப்போதைக்குத் துன்பங்களைத் தவிர்த்து விடலாம். ஆனால் இந்தத் தோல்வியை வாழ்நாள் முழுவதும் வடுவாகச் சுமந்து வாழவேண்டியிருக்கும். அதில் தனக்குப் பெருமை இருக்காது. ராம்லியும் அவன் நண்பர்களும் பின்னால் சிரிப்பார்கள். சுந்தரம் இப்படி வெகுளித்தனமாகத் தப்புச் செய்து மாட்டிக்கொண்ட கதை ஆசிரியர்கள் மத்தியில் பரவும். அதற்கு இடம் கொடுக்க முடியாது.
இது வரை நிமிர்ந்து வாழ்ந்து விட்டேன். இந்தச் சிறிய விபத்தினால் முதுகு உடைந்தவனாக இனி குனிந்து வாழ முடியாது. எப்படியோ இந்தச் செயலைத் தொடங்கிவிட்டேன். அதனால் பகை விளைந்து விட்டது. "வினை பகை என்றிரண்டின் எச்சம்" விட்டு வைக்காதே, அது மீண்டும் வளர்ந்து உன்னைக் கெடுக்கும் என வள்ளுவர் கூறியிருக்கிறார்.
சுந்தரம் நெஞ்சு நிமிர்ந்து நின்றார். "இஞ்சே தாலிப், டத்தோ யூசோப், நான் இந்தப் புகாரில் கூறியிருப்பவை அனைத்தும் என் நெஞ்சறிய உண்மை. ஆகவே அதை மீட்டுக் கொள்வதோ மன்னிப்புக் கேட்பதோ தேவையில்லாதது. ஆகவே நான் அப்படிச் செய்ய மாட்டேன்! டத்தோ அவர்கள் தன் மகனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்ளலாம்!" என்றார்.
டத்தோ யூசுபும் தாலிப்பும் அதிர்ச்சி அடைந்து காணப்பட்டனர். டத்தோ கோபத்தில் முகம் சிவக்கச் சொன்னார்: "தாலிப்! உங்கள் ஆசிரியர் இதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி அறியாமல் பேசுகிறார். இந்தப் பழம் பெருமை வாய்ந்த பள்ளிக்கூடத்திற்கு இந்த வழக்கினால் எவ்வளவு கெட்ட பெயர் என்பதை எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள்!"
தாலிப் ஏதோ கூறவந்ததை சுந்தரம் இடை மறித்தார். "இந்தப் பள்ளிக்கூடம் வெறும் கல்லும் மண்ணும் சேர்த்த கட்டிடம். நான் இரத்தத்தாலும் உணர்ச்சியாலும் ஆன மனிதன். ஆகவே பள்ளிக்கூட மானத்தை விட என் மானம் முக்கியமானது. அப்படியே பள்ளிக்கூடம் புனிதமானது என்று பார்த்தாலும் அதைத் தன் தீய செயலால் களங்கப் படுத்தியவன் உங்கள் மகன்! அந்த மாதிரித் தீய செயல்களை வளரவிடாமல் முறியடிக்க வேண்டும் என்று நினைக்கும் நான் இதன் நற்பெயரைக் காப்பாற்றத்தான் நினைக்கிறேன். ஆகவே என் முடிவில் மாற்றம் இல்லை!"
டத்தோ யூசுப் அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டுக் கதவைப் படீரென அடித்துச் சாத்திவிட்டுப் போனார்.
அடுத்த சில இரவுகள் அவருக்குத் தூக்கம் குறைந்த இரவுகளாகின. ஜானகி அவருக்கு எந்த மாற்று வடூயும் கூறமுடியாமல் முதுகு நீவி கால் பிடித்துத் தூங்கச் செய்தாள்.
தாலிப் இன்னும் ஓரிரு முறை அவரிடம் பேசிச் சமாதானம் செய்ய முயன்றார். இந்த வழக்கு தோற்றுவிட்டால் சுந்தரத்தின் வேலைக்கே ஆபத்து வரலாம் என்றும் சொன்னார். சுந்தரம் இணங்கவில்லை. அவர் தன் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள வேலை இழக்கவும் தயாரானார். உலகில் நீதி என ஒன்றிருந்தால் தன் உண்மை வெல்லும் எனக் காத்திருந்தார்.
ராமச்சந்திரனுக்கு இந்த விஷயம் தெரிய வந்த போது அவரிடம் வந்து ஆறுதல் கூறினார். "சுந்தரம்! நீ செய்றதுதான் சரி. ஆனா இந்தப் பசங்க ரொம்ப கெட்டவங்க! ஜாக்கிரதையா இரு. ஆனா இவங்களுக்குத் தலை வணங்கி விட்டுக் கொடுத்திராத. உண்மை உன் பக்கம் இருக்கிறவரைக்கும் பயப்பட வேணாம்!" என்று சொன்னார்.
டத்தோ யூசுபும் அவர் மகனும் கல்வி இலாகாவுக்குப் புகார் எழுதிப் போட்டுவிட்டார்கள். துணைக் கல்வி இயக்குநர் எல்லோரையும் கூப்பிட்டு ஒரு சுற்று விசாரித்தார். முதன் முறையாக பலவந்தம் செய்யப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார். எல்லாரும் முதலில் சொல்லிய கதையையே சொன்னார்கள்.
துணைக் கல்வி இயக்குநர் மீண்டும் ஒரு நாள் சுந்தரத்தின் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். தலைமை ஆசிரியர் அறைக்குள் அவர் முன்னிலையில் சுந்தரத்தை அழைத்துப் பேசினார்:
"இஞ்சே சுந்தரம். எங்கள் விசாரணை முடிந்து விட்டது. புதிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நீங்கள் குற்றம் சாட்டும் மாணவர்கள் யாரும் அந்தக் குற்றத்தைச் செய்ததற்கான ஆதாரம் இல்லை. ஆகவே உங்கள் சொல் ஒன்று மட்டுமே இருக்கிறது. இதை வைத்து நீங்கள்தான் தவறான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறீர்கள் என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. ஆகவே உங்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் தர மாநிலக் கல்வி இயக்குநர் தீர்மானித்திருக்கிறார். ஆனால் நீங்கள் நல்ல உதாரணமான ஆசிரியர். உங்கள் சேவை இதுநாள் வரை அப்பழுக்கற்றதாக இருந்திருக்கிறது. ஆகவே சம்பந்தப் பட்டவர்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் இந்தப் பிரச்சினையை யாருக்கும் பாதிப்பில்லாமல் சுமுகமாக முடிவு செய்யலாம் என அவர் ஆலோசனை கூற என்னை அனுப்பியிருக்கிறார்.
"நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்தாலும் கூட அதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆகவே வீண் பிடிவாதம் வேண்டாம். மன்னிப்புக் கேட்டுவிடுங்கள் அப்படிச் செய்யவில்லையானால் கல்வி இயக்குனர் எச்சரிக்கைக் கடிதம் அனுப்புவார். அதற்கு மேல் டத்தோ யூசுப் உங்கள் மேலும் பள்ளிக்கூடத்தின் மேலும் வழக்குத் தொடரவும் கூடும். உங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தந்திருக்கிறார். அதற்குள் நீங்கள் மன்னிப்புக் கேட்க இணங்காவிட்டால் அவர் கடித்தில் கையெழுத்திட்டு அனுப்புவார்."
துணை இயக்குநர் போய்விட்டார். சுந்தரம் தமது அறைக்குப் போய் நெடு நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார். அவருடைய எதிர்காலம் அவர் கண் முன் ஊசலாடிக் கொண்டிருந்தது. உலகம் தனக்கெதிராகத் திரும்பிவிட்டது அவருக்குத் தெரிந்தது. சத்தியம் அவரைக் கைவிட்டுவிட்டது.
உலகம் என்பது நன்மை தீமை என்னும் வேறுபாடு பார்த்து இயங்கவில்லை என்று நினைத்தார். அது இயந்திர கதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தியுள்ளவர்கள் அதன் போக்கிற்கேற்ப வளைந்தும் நௌிந்தும் பிழைத்துக் கொள்ளுகிறார்கள். தர்மம் நியாயம் என்று நம்பியிருப்பவர்கள் வளைய முடியாமல் முறிந்து விடுகிறார்கள். "கற்றூண் பிளந்திறுவதல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோதான்?" என்றோ படித்தது நினைவுக்கு வந்தது.
ஆனால் நியாயத்திற்காக முறிவதில் பெருமை இருக்கிறது. அதனால்தான் நியாயம் என்பது நிலைத்திருக்கிறது. அதனால்தான் மனித நாகரிகம் வளர்ந்திருக்கிறது. தான் முறிய அவர் தயாராகி விட்டார். மன்னிப்புக் கேட்டு இந்த வேலையைத் தங்க வைத்துக் கொள்வதை விட இதைத் துறந்து விடுவது நல்லது. என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களுக்கு இதனால் எக்களிப்பு இருக்கும். இந்த ஏமாளி வாத்தியார் தோற்றுவிட்டார் என்று வெற்றி முழக்கம் இடுவார்கள். அதைத் தான் தடுக்க முடியாது. தீமை சக்தி வாய்ந்தது. புயல் போல, வயிற்று வலி போல அதற்குத் தற்காலிக பலம் அதிகம். அதை அந்தக் கணத்தில் எதிர்த்துப் போராடிப் பலனில்லை. ஆனால் இது இறுதியில் அடங்கும். அமைதி நிலைக்கும்.
இப்போது தனக்கு முன்னால் உருவாகி இருக்கின்ற இந்தத் தீய புயலுடன் நான் மோத முடியாது. ஆனால் அதற்காக இந்தத் தீமைக்கு முன்னால் தலை வணங்கவும் முடியாது. ஒதுங்கிவிடலாம் அதுதான் நல்லது. அதற்குப் பின் வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசிக்கக் கூடாது. யோசித்தால் பயம் வரும். பயம் வந்தால் பணிந்து போகச் சொல்லும். பணிந்து போனால் தீமை வெல்லும்.
ஒரு தாளெடுத்தார். டைப்ரைட்டரில் சொருகி தன் வேலைத் துறப்புக் கடிதத்தைச் சுருக்கமாக எழுதினார். படித்துக் கையெழுத்திட்டார். தலைமை ஆசிரியரின் அறைக்கு வௌியே உட்கார்ந்திருந்த கிளர்க்கிடம் அதைக் கொடுத்தார். அங்கிருந்து நேராக வௌியேறி காரை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
"என்ன இன்னக்கி வெள்ளன வீடு வந்து சேர்ந்திட்டிங்க?" என்று கேட்ட ஜானகியிடம் "நான் வேலய விட்டுட்டேன் ஜானகி" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
மருண்ட விழிகளுடன் "என்ன சொல்றிங்க?" என்று அவள் கேட்டதும் அவள் மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்கினார்.
இரவெல்லாம் தூக்கமில்லாமல் விழித்திருந்தார். "நியாயம் தோற்றுவிட்டது, நியாயம் தோற்றுவிட்டது" என்று மனது ஓலமிட்டுக் கொண்டே இருந்தது. அப்புறம் "நியாயம் ஏன் தோற்றது?" என்ற கேள்வி எழுந்தது. பொய்க்கும் அநீதிக்கும் புயலுக்குண்டான வேகமும் பலமும் இருப்பது சரிதான். ஆனால் உண்மையும் நீதியும் என்றும் உள்ள மூச்சுக் காற்றல்லவா? அதுதானே இறுதியில் வென்று நிலைக்க வேண்டும். அது தானாக வெல்லுமா? அது வெல்லத் தான் ஏதாவது செய்ய வேண்டுமெனத் தோன்றியது.
மறுநாள் காலையில் வெள்ளென எழுந்தார். குளித்துவிட்டுத் தான் அதிகமாக நுழையாத ஜானகியின் சாமி அறைக்குள் நுழைந்து கும்பிட்டார். பசியாறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் பள்ளிக்குப் போய்த் தலைமை ஆசிரியைச் சந்தித்தார். சம்பந்தப் பட்ட அந்த இரண்டு சிறுமிகளின் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். தலைமை ஆசிரியை முதலில் தயங்கினாலும் அவருடைய நிலைமையை எண்ணிக் குறித்துக் கொடுத்தார்.
ஆயர் ஈத்தாமிலுள்ள ஒரு அழகிய இரண்டு மாடித் தொடர் வீட்டில் அந்த மலாய்க் குடும்பம் இருந்தது. சென்று அழைப்பு மணியை அடித்தார். வீட்டின் முன் கார் இருந்தது. குடும்பத் தலைவர், அந்தச் சிறுமியின் தந்தை மொக்தார், இன்னும் வேலைக்குப் புறப்படவில்லை. மொக்தாரை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை. முன்பின் தெரியாது. ஆனால் மனிதர்களின் நற்குணங்களை நம்பி அவர் வந்திருக்கிறார்.
மொக்தாரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் அவர் அன்போடு வரவேற்றார். "செகு சுந்தரம். நான் கேள்விப் பட்டிருக்கிறேன் அன்றைக்கு என் மகள் விஷயமாக விசாரிக்க கல்வி அதிகாரி வந்த போது உங்கள் பெயரைச் சொன்னார்" என்றார். மொக்தாரின் மனைவி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். உயர்ந்த இஸ்லாமிய பண்பாடும் அழகிய மலாய் கலையணர்வும் தவழும் வீடு.
"இஞ்சே மொக்தார், ஒருவர் தான் செய்த நல்ல காரியத்தைச் சொல்லிக் காட்டுவதும் அதற்குப் பிரதியுபகாரத்தை வாய் விட்டுக் கேட்பதும் தமிழர்களாகிய எங்களுக்கும் நல்ல பண்பாடல்ல, மலாய்க்காரரான உங்களுக்கும் நல்ல பண்பாடல்ல. ஆனால் நான் இப்போது வேலையை இழக்கும் நிலையில் நிற்கிறேன். ஆகவேதான் இதை உங்களிடம் வாய்விட்டுக் கேட்க வேண்டியிருக்கிறது.!" என்றார்.
"நீங்கள் ஏன் வேலையை இழக்க வேண்டும்? நடந்தது ஒன்றும் உங்கள் குற்றமில்லையே!" என்று கேட்டார் மொக்தார். தான் வேலை துறந்த நிகழ்வுகளைச் சுருக்கிச் சொன்னார் சுந்தரம்.
"நான் என்ன செய்ய முடியும்?" மொக்தார் கேட்டார்.
"இஞ்சே மொக்தார். அன்றைக்கு உங்கள் மகள் இருந்த நிலையில் நான் அந்த நேரத்துக்குப் போயிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?" என்று சுந்தரம் கேட்டார்.
கேட்டுக் கொண்டிருந்த மொக்தாரின் மனைவி "யா அல்லா!" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார். "செகு. நீங்கள் செய்த உதவி மிகப் பெரியது. என் மகளின் மானத்தைக் காப்பாற்றினீர்கள்!" என்றார்.
"அம்மா உங்கள் பெண்ணுக்கு அந்தப் பையன் யார் என்று தெரியும். அவர்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்தான். மாட்டிக் கொண்ட பின் மறைக்கப் பார்க்கிறார்கள்!"
"அப்படியா? யாரோ தெரியாத மாணவர்கள் இழுத்துக் கொண்டு போனதாக அல்லவா சொன்னார்கள்?"
"பொய். நான் கண்ணால் பார்த்தவன் சொல்கிறேன். டத்தோ யூசுபின் மகனைக் காப்பாற்றவும் தான் இசைந்து அங்கு போனதை மறைக்கவும் இப்படிக் கதை சொல்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து செய்கின்ற சதி இது. இதற்குப் பலியானவன் நான்!"
திருமதி மொக்தார் "யா அல்லா, யா அல்லா!" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.
மொக்தார் ஏதோ யோசித்தவாறு இருந்தார். அப்புறம் திடீரென எழுந்து நின்றார். "செகு. எனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டது. நான் புறப்பட வேண்டும்" என்றார். "உனக்குக் கொடுத்த நேரம் முடிந்து விட்டது. நீ போகலாம்" என அவர் சொல்வதைப் புரிந்து கொண்டார் சுந்தரம். அந்த சந்திப்பு இப்படித் திடீரென முடிந்தது ஏமாற்றமாக இருந்தது.
சுந்தரம் விடை பெற்று வந்தார். கடவுளே! நான் செய்ய வேண்டியதைச் செய்து விட்டேன். நான் செய்தது சரிதானா? இது எப்படிப் போய் முடியும் எனத் தெரியவில்லை. நான் இவர்களுக்குப் பெரிதா? நான் ஒருவன் அவமானப் படுவதும் வேலை இழப்பதும் இவர்களுக்கு ஒரு பொருட்டா?
ஏன் அவர்கள் சுந்தரத்தை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டும்? அவரை ஒரு பொருட்டாக மதித்து விஷயத்தை நேர் செய்ய முற்பட்டால் பல பேருக்குப் பாதிப்பு இருக்கிறது. டத்தோ யூசுப், அவர் மகன், அந்த இரண்டு சிறுமிகள், பள்ளித் தலைமை ஆசிரியர், பள்ளியின் நல்ல பெயர், கல்வித் துறையின் நல்ல பெயர் எல்லாருக்கும் பாதிப்பு இருக்கிறது.
மாறாக எல்லோரும் தங்கள் தங்கள் சுயநலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். சுந்தரம் என்ற ஒருவனைப் பற்றிக் கவலைப் படாமல் "அவன் பாவம்" என்று மனதுக்குள் சொல்லிப் புதைத்து விடலாம். புதைத்து விட்டால் குழப்பமும் கலவரமும் இல்லை. யாருடைய பெயரும் கறைபடப் போவதில்லை. சுந்தரத்துக்குப் பதில் இன்னொரு ஆசிரியரை அமைத்துக் கொண்டு பள்ளி ஜாம் ஜாம் என்று நடக்கும்.
என்ன செய்து விட்டேன் நான்? எந்த நம்பிக்கையில் அந்நியர்களிடம், எனக்கு முன் பின் தெரியாதவர்களிடம் நியாயம் கேட்கப் போனேன்? பட்டது போதாதா? இன்னும் இவர்களால் மீண்டும் ஓரு முறை உதாசீனப் படுத்தப்பட வேண்டுமா? தன் சுய கௌரவமும் சுயமதிப்பும் இன்னும் குறைந்து அதள பாதாளத்துக்குப் போக வேண்டுமா?
வீட்டுக்கு வந்து சேர்ந்த போது உள்ளம் மிகச் சோர்ந்திருந்தது. நம்பிக்கைகள் கரைந்திருந்தன. மனத்தின் ஒரு மூலையில் உள்ள கருமை, புகையாய்ப் பெருகி நெஞ்சை கப்பென்று மூடிக் கொண்டது. "என்ன ஆச்சிங்க? எங்க போனிங்க?" என்ற ஜானகியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் படுக்கையில் சென்று விழுந்தார். கணவரின் வாழ்க்கையிலும் மனசுக்குள்ளும் என்ன நடக்கிறது என்று சரியாகப் புரியாமல் கடவுளை வேண்டியவாறே இருந்தாள் ஜானகி.
இன்னும் ஓர் இரக்கமில்லாத இரவை உறக்கமில்லாத மனிதராக அவர் கடத்தினார்.
காலையில் தொலைபேசி அழைப்பு வந்தது. தலைமை ஆசிரியர் தாலிப் பேசினார். "சுந்தரம் உடனே புறப்பட்டு இங்கு வாருங்கள். கல்வித் துறை துணை இயக்குநர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறார்." என்றார்.
"எதற்காகக் கூப்பிடுகிறீர்கள் சே தாலிப்?" என்று கேட்டார்.
"அதெல்லாம் நேரில் சொல்கிறேன். நல்ல சேதிதான் வாருங்கள்!" என்றார்.
தொலைபேசியைக் கீழே வைத்தார். மனசுக்குத் தெம்பு வந்தது. "சுற்றி நில்லாதே போ, பகையே! துள்ளி வருகுது வேல்!" என்று மனசுக்குள் பாரதி வந்து பாடினான்.
அவர் தலைமை ஆசிரியர் அறையில் நுழைந்த போது டத்தோ யூசுப் அங்கிருந்தார். அவர் மகன் ராம்லியும் இருந்தான். மொக்தாரும் மொக்தாரின் மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள். அன்றைக்கு அவளோடு பிடிபட்ட இன்னொரு பெண்ணும் தலைகுனிந்து நின்றிருந்தாள். துணைக் கல்வி இயக்குநரும் இருந்தார்.
தலைமை ஆசிரியர் சுந்தரத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார். தொடர்ந்து துணைக் கல்வி இயக்குநரும் வந்து கை குலுக்கினார். "செகு சுந்தரம். மொக்தாரின் மகள் ராம்லிதான் தன்னைக் கெடுக்க முயன்றவன் என்று அடையாளம் காட்டி விட்டாள். ராம்லியும் ஒத்துக் கொண்டான். ஆகவே நீங்கள் இனி மனம் வருந்தத் தேவையில்லை. உங்கள் பிரச்சினை தீர்ந்து விட்டது!" என்றார்.
மொக்தார் வந்து கையைப் பிடித்துக் கொண்டார். "செகு. நீங்கள் என் மகளின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். அதற்கு அவள் துரோகம் செய்து விட்டாள். நேற்றிரவு அவளிடம் பேசி உண்மையை வரவழைத்தேன். அவளுடைய சிநேகிதியையும் கண்டு பிடித்து உண்மையை உறுதிப் படுத்திக் கொண்டேன். நேற்றே டத்தோவையும் கல்வி அதிகாரியையும் அழைத்து உண்மையைச் சொல்லிவிட்டேன். எங்களை மன்னித்து விடுங்கள்!" என்றார்.
டத்தோ யூசுப் வந்து மனமில்லாமல் கைகுலுக்கினார்.
இத்தனை பேருக்கு முன்னால் அழக் கூடாது என்று முயன்றும் முடியவில்லை. திரும்பிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டார். உடனே ஜானகிக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் மனதில் தோன்றியது.
துன்பங்கள், தோல்விகள், வெற்றிகள், களிப்புக்கள், தற்காலிக இன்பங்கள், விபத்துகள், துன்பங்கள், நோய்கள்... நினைவுகள், ஆயிரம் நினைவுகள். என்றைக்கு இந்த சக்கரம் நிற்கும்? இந்த சக்கரத்தில் கையும் காலும் கட்டப்பட்டு, உயரே போய் தலைகீழாகி கீழே வந்து நேராகி மீண்டும் தலை கீழாகி, எப்போது நிற்கும்? எப்போது நிற்கும்? விரைவில் நிற்கப் போகிறது.
கையில் இருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. அதைக் குனிந்த எடுக்கப் போனபோது அறைக் கதவில் நிழல் தெரிந்தது. "தாத்தா! வேர் இஸ் மை மம்மி?" என்று கண்ணைக் கசக்கியவாறு கேட்டுக் கொண்டு அங்கு நின்றான் பரமா.