58
தோறும் மின்சாரம்; ஒவ்வொருவருக்கும் கல்வி என்று வற்புறுத்தி வந்தவர். ஆகவே இன்று வட துருவப் பகுதியில் எஸ்கிமோக்கள் வாழும் சிறு குடியிருப்புகளுக்குக்கூட மின்னொளியும் கல்வியொளியும் கிடைக்கின்றன.
1928ஆம் ஆண்டிலேயே நாட்டைத் தொழில்மயமாக்கும் வேலை தொடங்கிற்றாம். அன்று அவர்கள் நிலை மிகப் பின்தங்கிய நிலையாம். அன்றைய பிரிட்டனின் தொழில்நிலைக்கு இருநூறு ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் சோவியத் ஒன்றியம் இருந்ததாகக் கூறக் கேட்டோம். பிற்போக்காயிருந்த அவர்கள் எவ்வளவோ முன்னேற வேண்டிய நெருக்கடியில் இருந்தார்களாம்.
அதிகாரி பூரிப்போடு மேலும் சொன்னது: 'இடுக்கண் வருங்கால் நகுகிறவர்கள் நாங்கள். முன்னேற முனைந்துவிட்டால் எங்களைத் தடுப்பது எதுவும் இல்லை. ஆகவே, ஒன்றுபட்டோம். வளர்ந்துவிட்டோம் மிக விரைவில். அன்றைய இரஷியருக்குக் கல்வியில்லை; காசு இல்லை. இன்றைய இரஷியருக்கு இரண்டும் இருக்கின்றன.'
'மாஸ்கோ எவ்வளவு பெரிய நகரம்?' என்று அவரைக் கேட்டோம்.
'மாஸ்கோவின் பரப்பு இன்று இருநூற்று முப்பது சதுரமைல். மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் இதன் பரப்பு நூற்று முப்பத்தைந்து சதுர மைல்களே' என்றார்.
'அடேயப்பா ! எவ்வளவு வேகத்தில் வளருகிறது' என்று வியந்தோம்.