உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

உலகத் தமிழ்

ஜெர்மனியிடமோ காதல் கொள்வதில்லை. பிற நாட்டிடம் பற்றுப் பதியமாகவில்லை. போர் நெருக்கடியின் போதும் கட்சி சேராதிருக்கிறார்கள். எனவே, அவரவர் வாழும் பகுதிகளில் அவரவர் மொழிக்கு உரிமையும் வாழ்வும் கிடைக்கின்றன. அதே நேரம் தங்களையும் தங்கள் நாட்டையும் தேவையில்லாத சண்டைகளில் சிக்க வைக்காமல், சீரழியச் செய்யாமல் காக்க முடிகிறது என்பதை உணர்ந்தேன். இது நமக்கும் பாடமானால் வாழக் கற்றுக்கொளவோம். குறிப்பாகத் தமிழர்கள் உணர்ச்சி வயப்படாமல் இப்பாடத்தைக் கசடறக் கற்றல் நல்லது; அதற்குத் தக நிற்றல் பின்னும் நல்லது அந்நிலை உருவானால் நம் அருமைத் தமிழ்மொழி, ஒரு நாட்டின் ஒரு மொழியாக நின்றுவிடாது. பல நாட்டின் உயிர் மொழியாக-ஆட்சி மொழியாக ஒளிரும்.

இப்படிச் சிந்தனைச் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கையில், ‘வருந்துகிறோம்’ என்ற இரு குரல் கேட்டு நானும் நண்பரும் திடுக்கிட்டு நின்றோம். நொடியில் நிமிர்ந்து நோக்கினோம்; கண்டோம். என்ன கண்டோம்?

காளையும் பாவையும் கைகோத்து நிற்பதைக் கண்டோம். ஜினிவா ஏரிக்கரை ஓரமாகக் கைகோத்து, கதைகள் பல சொல்லி, மகிழ்ந்து, மெல்ல உலாவி வந்த காதலர்களைக் கண்டோம். காதல் உலகிலே மிதந்து வந்த அவர்கள், நாங்கள் எதிர்ப்படுவதை ஏறிட்டுப் பார்க்கவில்லை. எங்களை நெருங்கிய போதே-எங்களோடு மோதுவதற்கு நொடி முன்னரே-மற்றவர் இருப்பதை உணர்ந்தனர். நடைபாதை யாருக்கு உரிமை என்று வழக்காடாமல், அதிலே நேரத்தையும் உணர்ச்சியையும் பாழாக்காமல், தங்கள் பண்பாட்டு வழியில் விரைந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/35&oldid=480794" இலிருந்து மீள்விக்கப்பட்டது