மெய்யறம் (மெய்யியல்)
Appearance
121. மெய் யுண்மை
[தொகு]- 1201. உயர்கரி சுருதி யுத்தி யநுபவம்.
- சுருதி(வேதம்-sacred book), உத்தி(ஆராய்ச்சி-deliberation), அநுபவம்(experience) ஆகியவை உயர்ந்த சாட்சிகள் ஆகும்.
- 1202. தூயர் பகருரை சுருதி யென்ப.
- புனிதமானவர்கள் கூறிய உரைகள் சுருதி எனப்படும்.
- 1203. பலமதத் தூயரும் பகர்ந்துள ருண்மை.
- பல மதத்தைச் சேர்ந்த பெரியோரும் கூறியுள்ள உண்மை.
- 1204. ஏது சிலகொண் டோதுவ துத்தி.
- காரணங்கள் சிலவற்றைக் கொண்டு விளக்குவது உத்தி ஆகும்.
- 1205. ஆத னிலவ லழித லிவணுள;
- இவ்வுலகத்தில் உருவாதல், இருத்தல், அழிதல் ஆகியன உள்ளன.
- 1206. அவைசெயக் கர்த்தா வவசிய மென்க.
- அவற்றைச் செய்தற்குக் கடவுள் அவசியம்.
- 1207. அறிந்துள் ளுணர்தலை யநுபவ மென்ப.
- அநுபவம் என்பது இதனை அறிந்து உணர்வது ஆகும்.
- 1208. இடருறும் போழ்துமெய் யெண்ணுகின் றனர்பலர்;
- துன்பப்படும் போது மட்டும் பலர் கடவுளை எண்ணுகின்றனர்.
- 1209. பாவஞ் செயவுளம் பதைப்ப தநுபவம்;
- கடவுளை உணர்ந்தால் மனம் பாவம் செய்யப் பயப்படும்.
- 1210. அரசரு மாளப் படுவ தறிகிறோம்.
- அரசரும் கட்டுப்படுத்தப்படுவதைக் காண்கிறோம்.
122. மெய்யின் அடக்கநிலை
[தொகு]- 1211. அடக்க நிலைமெய் யடங்கிய வறிவு.
- அடக்கநிலை கடவுள் புலப்படாத நிலையில் உள்ள அறிவு ஆகும்.
- 1212. அண்டப் பொருளெலா மணுக்களின் சேர்க்கை.
- அண்டப் பொருள்கள் எல்லாம் அணுக்களின் சேர்க்கை.
- 1213. வலியிலா தணுக்கண் மருவிநிற் கும்மோ?
- வலிமை இல்லாமல் அணுக்கள் சேர்ந்து இருக்குமா?
- 1214. அண்டஞ் சுற்றலு மதுகொண் டன்றோ?
- அண்டம் சுற்றுவதும் அந்த வலிமையினால் தானே?
- 1215. ஆதலா லெங்கணு மஃதமைந் துளதே.
- ஆதலால் அவ்வலிமை எல்லா இடத்திலும் பரவி உள்ளது.
- 1216. அகில நிகழுமா றாள்வ தறிவு.
- உலகம் இயங்குமாறு செய்வது அறிவு ஆகும்.
- 1217. அன்றே லொழுங்கா வவைகண நிகழுமோ?
- இல்லையெனில் அவை ஒவ்வொரு கணமும் ஒழுங்காக நிகழ முடியுமா?
- 1218. ஆதலா லெங்கணு மறிவமைந் துளதே.
- ஆதலால் அவ்வறிவு எல்லா இடத்திலும் அமைந்து உள்ளது.
- 1219. நிறைபொரு ளிரண்டு நிலவா வென்ப.
- இரண்டு பொருள் எல்லா இடத்தையும் நிறைத்தல் இயலாது.
- 1220. ஆதலால் வலியு மறிவு மொரேபொருள்.
- ஆதலால் வலிமையும் அறிவும் ஒரே பொருள் ஆகும்.
123. மெய்யின் விளக்கநிலை
[தொகு]- 1221. விளக்க நிலைமெய் விளங்கு மறிவு.
- விளக்க நிலை கடவுளைப் புரிந்து கொண்ட நிலையில் உள்ள அறிவு ஆகும்.
- 1222. அடக்கமெய் விறகு ளடங்கிய தீப்போன்ம்.
- விறகில் அடங்கிய தீ போன்றது அடக்கநிலை ஆகும்.
- 1223. விளக்கமெய் கடைய விறகெழுந் தீப்போன்ம்.
- விறகைக் கடைந்த உடன் வெளிப்படும் தீ போன்றது விளக்கநிலை ஆகும்.
- 1224. ஐயறி வுயிர்களின் மெய்யொளி யடங்கும்.
- விலங்குகளில் மெய்யொளி அடங்கி இருக்கும்.
- 1225. ஆறறி வினரு ளவ்வொளி விளங்கும்.
- மனிதர்களில் மெய்யொளி விளங்கி இருக்கும்.
- 1226. அவர்மறஞ் செயச்செய வதனொளி குன்றும்.
- அவர்கள் குற்றம் செய்யச் செய்ய மெய்யொளி குறையும்.
- 1227. அவரறஞ் செயச்செய வதனொளி பெருகும்.
- அவர்கள் அறச்செயல்கள் செய்யச் செய்ய மெய்யொளி அதிகரிக்கும்.
- 1228. அவரொழுக் கறிந்தபோழ் தஃதக விளக்காம்.
- அவர் ஒழுக்கத்தைப் பற்றி அறிந்திருப்பது (அவர் உள்ளத்தில் ஏற்றப்பட்ட விளக்காக)அவருக்கு மட்டும் வழிகாட்டும்.
- 1229. அவரொழுக் கடைந்தபோழ் ததுமலை விளக்காம்.
- அவர் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும்போது அது (மலையில் ஏற்றப்பட்ட விளக்காக)உலகத்துக்கே வழிகாட்டும்.
- 1230. ஒழுக்கில்வாய் ஞானமஃ தொழிக்குங் காற்றாம்.
- ஒழுக்கம் இல்லாத ஞானம் அந்த விளக்கை அணைக்கும் காற்றாகும்.
124. மெய் யுணர்தல்
[தொகு]- 1231. ஒழுக்க முடையா ருணர்வர் மெய்யை.
- ஒழுக்கம் உடையவர்கள் கடவுளை உணர்வார்கள்.
- 1232. அறநூ லெண்ணில வறைந்துள வொழுக்கம்.
- எண்ணற்ற அற நூல்கள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியுள்ளன.
- 1233. அவற்றைவிட் டயலுற றவற்றைப் புரிதலாம்.
- அந்த நூல்களைப் படிக்காமல் மற்றவற்றைப் படிப்பது தவறு செய்வது ஆகும்.
- 1234. அடிவிட் டேணியி னந்தமே றுவரோ?
- ஏணியின் முதல் படியில் ஏறாமல் கடைசிப் படியில் ஏற இயலுமா?
- 1235. அறநூல் கற்றுநின் றான்மநூ லாய்க.
- அறநூல்களைக் கற்ற பிறகு ஆன்மநூல்களை ஆராய வேண்டும்.
- 1236. ஓருட லளவி லுறுமறி வான்மா.
- ஓர் உடலில் தங்கியிருக்கும் அறிவு ஆன்மா ஆகும்.
- 1237. அணையுள குளநீர்க் கான்மா விணையாம்.
- எல்லா இடத்திலும் தங்கியிருக்கும் அறிவு கடவுள் ஆகும்.
- (அணையைக் கடவுளுக்கும் அணைக்குள் உள்ள குளத்தை ஆன்மாவுக்கும் ஒப்பிடலாம்.)
- 1238. ஆன்மா மெய்யொன் றாணவம் வேற்றுமை.
- ஆன்மாவும் கடவுளும் ஒன்றுதான். ஆணவம் ஆன்மாவை இறைவனை அடையவிடாமல் தடுக்கும் மும்மலங்களில் ஒன்று.
- 1239. அறஞ்சே ரொழுக்கா லாணவங் களைக.
- அறத்தின் பாற்பட்ட ஒழுக்கத்தினால் ஆணவத்தை நீக்க வேண்டும்.
- 1240. உண்மை மெய்யான்மா வுலகுமெய்த் தோற்றம்.
- உண்மை கடவுளின் ஆன்மா. உலகம் கடவுளின் தோற்றம்.
125. மெய்ந்நிலை யடைதல்
[தொகு]- 1241. உயிரியல் விடமெய் யியலுறு முடனே.
- உயிரின் மீதுள்ள பற்றை விட்டால் கடவுள் தன்மை உடனே ஏற்படும்.
- 1242. விடலே வீடது மெய்யறஞ் செயினாம்.
- மெய்யறம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும்.
- 1243. மெய்யற மாந்தர் மிகைவிட வுதவல்;
- மெய்யறம் என்பது மனிதர்கள் குற்றத்தைவிட உதவுவது;
- 1244. ஒழுக்க வுயிர்மெய் யுணர்ந்திட வுதவல்;
- ஒழுக்கம் என்பது உயிர்கள் கடவுளை உணர்ந்திட உதவுதல்;
- 1245. உலகி லுயிர்க ணிலவுற வுதவல்.
- உலகில் உயிர்கள் வாழ்வதற்கு உதவுதல் வேண்டும்.
- 1246. இவ்வற மரசர்க் கியற்றுத லெளிது.
- இந்த அறம் செய்வது அரசருக்கு எளிதான செயல் ஆகும்.
- 1247. அறிவ ரரச ராகுத லரிதோ?
- அறிவுடைய அரசர் ஆகுதல் சிரமமான செயலா?
- 1248. அரசரை யாள்வ தமைச்சறி வன்றோ?
- அரசரை வழிநடத்துவது அமைச்சரின் அறிவு அல்லவா?
- 1249. அறிந்தில் வாழ்ந்துல காண்டறஞ் செய்க.
- இறைவனை அறிந்து இல்வாழ்க்கை நடத்தி எல்லா இன்பங்களும் அநுபவித்து அறம் செய்தல் வேண்டும்.
- 1250. அருள்கொடு மெய்யற மாற்றிமெய் யடைக.
- அன்புடன் அறச் செயல்கள் செய்து இறைவனை அடைதல் வேண்டும்.