திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

விக்கிமூலம் இலிருந்து
" ஆண்டவர் தம் குரலை மோசே கேட்கச் செய்தார்; கார்முகில் நடுவே அவரை நடத்திச் சென்றார்; நேரடியாக அவரிடம் கட்டளைகளைக் கொடுத்தார்; வாழ்வும் அறிவாற்றலும் தரும் திருச்சட்டத்தை அளித்தார்." - சீராக்கின் ஞானம் 45:5

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 45 முதல் 46 வரை

அதிகாரம் 45[தொகு]

மோசே[தொகு]


1 யாக்கோபின் வழிமரபிலிருந்து
இறைப்பற்றுள்ள ஒரு மனிதரைக் கடவுள் தோற்றுவித்தார்;
அம்மனிதர் எல்லா உயிரினங்களின் பார்வையிலும் தயவு பெற்றார்;
கடவுளுக்கும் மனிதருக்கும் அன்புக்குரியவரானார்.
அவரது நினைவு போற்றுதற்குரியது.
அவரே மோசே!


2 கடவுள் தூய தூதர்களுக்கு இணையான மாட்சியை அவருக்கு வழங்கினார்;
பகைவர்கள் அஞ்சும்படி அவரை மேன்மைப்படுத்தினார்;


3 அவருடைய சொற்களால்
பிறர் செய்த வியத்தகு செயல்களை முடிவுக்குக் கொணர்ந்தார்;
மன்னர்களின் முன்னிலையில் அவரை மாட்சிமைப்படுத்தினார்;
தம் மக்களுக்காக அவரிடம் கட்டளைகளைக் கொடுத்தார்;
தம் மாட்சியை அவருக்குக் காட்டினார்.


4 அவருடைய பற்றுறுதியையும் கனிவையும் முன்னிட்டு
அவரைத் திருநிலைப்படுத்தினார்;
மனிதர் அனைவரிடமிருந்தும் அவரைத் தெரிந்தெடுத்தார்.


5 ஆண்டவர் தம் குரலை மோசே கேட்கச் செய்தார்;
கார்முகில் நடுவே அவரை நடத்திச் சென்றார்;
நேரடியாக அவரிடம் கட்டளைகளைக் கொடுத்தார்;
வாழ்வும் அறிவாற்றலும் தரும் திருச்சட்டத்தை அளித்தார்;
இதனால் யாக்கோபுக்கு உடன்படிக்கை பற்றியும்
இஸ்ரயேலுக்குக் கடவுளின் தீர்ப்புகள் பற்றியும்
மோசே கற்றுக்கொடுக்கும்படி செய்தார். [1]

ஆரோன்[தொகு]


6 அடுத்து, ஆரோனைக் கடவுள் உயர்த்தினார்;
அவர் மோசேயைப் போலவே தூயவர்; அவருடைய சகோதரர்;
லேவியின் குலத்தைச் சேர்ந்தவர்.


7 அவருடன் என்றுமுள உடன்படிக்கை செய்தார்;
மக்களுக்குப் பணி செய்யக் குருத்துவத்தை அவருக்கு வழங்கினார்;
எழில்மிகு அணிகலன்களால் அவரை அழகுபடுத்தினார்;
மாட்சியின் ஆடையை அவருக்கு அணிவித்தார்.


8 மேன்மையின் நிறைவால் அவரை உடுத்தினார்;
குறுங்கால் சட்டை, நீண்ட ஆடை, 'ஏபோது' ஆகிய
அதிகாரத்தின் அடையாளங்களால் அவருக்கு வலிமையூட்டினார்.


9 அவருடைய ஆடையின் விளிம்பைச்சுற்றி
அணிகலன்களும் பொன்மணிகளும் பொருத்தப்பட்டிருந்தன.
இதனால் அவர் நடந்து செல்கையில் அவை ஒலி எழுப்பும்;
தம் மக்களின் பிள்ளைகளுக்கு நினைவூட்டும்படி
கோவிலில் அவற்றின் ஒலி கேட்கும்.


10 பூத்தையல் வேலைப்பாடு உடைய,
பொன், நீலம், கருஞ் சிவப்பு நிறங்கள் கொண்ட
திருவுடையை அவருக்குக் கொடுத்தார்.
உண்மையை அறிவிக்கக்கூடிய மார்புப்பட்டை [2] அதில் இருந்தது.
கைவினைஞரின் வேலைப்பாடாகிய
சிவப்பு ஆடையால் அவரைப் போர்த்தினார்.


11 அந்த ஆடையில் பொற்கொல்லரின் வேலைப்பாடாகிய
பொன் தகட்டுப் பின்னணியில்
விலையுயர்ந்த கற்கள் முத்திரை போலப் பதிக்கப்பட்டிருந்தன.
இஸ்ரயேலின் குலங்களினுடைய எண்ணிக்கையின் நினைவாக
எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.


12 தலைப்பாகை மீது பொன்முடி இருந்தது;
தூய்மையின் முத்திரை அதில் பொறிக்கப்பட்டிருந்தது;
அது பெருமைக்குரிய மதிப்புடையது; சிறந்த வேலைப்பாடு கொண்டது;
கண்களுக்கு இனிமையானது, பெரிதும் அணி செய்யப்பட்டது.


13 இவற்றைப்போன்று அழகானவை அவருக்குமுன் இருந்ததில்லை;
இவற்றை அன்னியர் எவரும் என்றும் அணிந்ததில்லை;
அவருடைய மைந்தரும் வழிமரபினரும் மட்டுமே என்றும் அணிந்திருந்தார்கள். [3]


14 அவர் செலுத்திய பலிப்பொருள்கள்
ஒவ்வொரு நாளும் இருமுறை தொடர்ந்து முழுமையாய் எரிக்கப்பட்டன. [4]


15 மோசே ஆரோனைத் திருநிலைப்படுத்தினார்;
தூய எண்ணெயால் அவரைத் திருப்பொழிவு செய்தார்;
அவரோடும் அவருடைய வழிமரபினரோடும்
வானம் நீடித்திருக்கும்வரை நிலைத்திருக்கும் உடன்படிக்கையாக
அதை ஏற்படுத்தினார்;
ஆண்டவருக்குப் பணி செய்யவும் குருவாய் ஊழியம் புரியவும்,
அவரது பெயரால் அவருடைய மக்களுக்கு ஆசி வழங்கவும் இவ்வாறு செய்தார். [5]


16 ஆண்டவருக்குப் பலி செலுத்தவும்
தூபத்தையும் நறுமணப்பலியையும் நினைவுப் பலியாய் ஒப்புக்கொடுக்கவும்
அவருடைய மக்களுக்காகப் பாவக்கழுவாய் செய்யவும்
வாழ்வோர் அனைவரிடமிருந்தும் அவரைத் தெரிந்தெடுத்தார்.


17 யாக்கோபுக்குச் சட்டங்களைக் கற்றுக் கொடுக்கவும்
இஸ்ரயேலுக்குத் திருச்சட்டம் பற்றித் தெளிவுபடுத்தவும்
ஆண்டவருடைய கட்டளைகள் மீதும்
உடன்படிக்கையின் தீர்ப்புகள் மீதும்
அவருக்கு அதிகாரம் அளித்தார்.


18 அன்னியர்கள் அவருக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்;
பாலைநிலத்தில் அவர்மேல் பொறாமைப்பட்டார்கள்;
தாத்தானும் அபிரோனும் அவர்களோடு இருந்தவர்களும்
கோராகுவின் கூட்டாளிகளும்
தங்கள் சினத்திலும் சீற்றத்திலும் இவ்வாறு செய்தார்கள்.


19 ஆண்டவர் அதைப் பார்த்தார்;
அதை அவர் விரும்பவில்லை.
அவருடைய கடுஞ்சீற்றத்தால் அவர்கள் அழிந்தார்கள்.
எரியும் நெருப்பில் சட்டெரிப்பதற்காக
அவர்களுக்கு எதிராய் அரியன செய்தார். [6]


20 அவர் ஆரோனின் மாட்சியை மிகுதிப்படுத்தினார்;
அவருக்கு உரிமைச்சொத்தை அளித்தார்;
முதற்கனிகளில் முதலானவற்றை அவருக்கென ஒதுக்கிவைத்தார்;
காணிக்கை அப்பங்களைக்கொண்டு அவர்களுக்கு நிறைவாய் உணவு அளித்தார்.


21 தமக்குக் கொடுக்கப்பட்ட பலிப் பொருள்களையே
ஆரோனும் அவருடைய வழிமரபினரும் உண்ணக் கொடுத்தார்.


22 தம் மக்களது நாட்டில் அவருக்கு உரிமைச்சொத்து கொடுக்கப்படவில்லை;
அம்மக்கள் நடுவே அவருக்குப் பங்கு அளிக்கப்படவில்லை;
ஆண்டவரே அவருடைய பங்கும் உரிமைச் சொத்தும் ஆவார். [7]

பினகாசு[தொகு]


23 எலயாசர் மகன் பினகாசு மாட்சியின் மூன்றாம் நிலையில் இருக்கிறார்;
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் பேரார்வமிக்கவராய் இருந்தார்;
ஆண்டவரைவிட்டு மக்கள் விலகிச் சென்றபோது
இவர் நன்மனத்தோடு அவரை உறுதியாய்ப் பற்றி நின்றார்;
இஸ்ரயேலுக்காகப் பாவக் கழுவாய் செய்தார்.


24 ஆதலால் ஆண்டவர் அவருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்;
திருவிடத்துக்கும் தம் மக்களுக்கும் [8] தலைவராக்கினார்;
அவருக்கும் அவருடைய வழிமரபினருக்கும்
குருத்துவத்தின் மேன்மை என்றும் நிலைக்கும்படி செய்தார்.


25 மகனிலிருந்து மகனுக்கு மட்டுமே அரசுரிமை செல்ல,
யூதாவின் குலத்தில் தோன்றிய ஈசாயின் மகன் தாவீதோடு
ஆண்டவர் உடன்படிக்கை செய்துகொண்டார்.
அதுபோல் ஆரோனின் குருத்துவ உரிமை
அவருடைய வழிமரபினரையே சேரும்.


26 ஆண்டவர் தம் மக்களை நீதியோடு தீர்ப்பிடுவதற்காக
ஞானத்தை உங்கள் உள்ளங்களில் பொழிவாராக!
இவ்வாறு அவர்களுடைய நலன்கள் அழியாதிருப்பனவாக;
அவர்களுடைய மாட்சி எல்லாத் தலைமுறைகளுக்கும் நீடிப்பதாக. [9]


குறிப்புகள்

[1] 45:1-5 = விப 6:28-11:10; 20:1-21; 24:1-18; எண் 12:13.
[2] 45:10 - இதில் "ஊரிம் தும்மிம்" இருந்தன. காண் விப 28:30.
[3] 45:6-13 = விப 28:1-43.
[4] 45:14 = எண் 28:3-4.
[5] 45:15 = லேவி 8:1-36.
[6] 45:18-19 = எண் 16:1-35.
[7] 45:22 = எண் 18:20.
[8] 45:24 - இது எபிரேய பாடம்.
கிரேக்க பாடத்தில் "தூயவர்களுக்கும் தம் மக்களுக்கும்"
என உள்ளது.
[9] 45:23-26 = எண் 25:7-13.

அதிகாரம் 46[தொகு]

யோசுவா[தொகு]


1 நூனின் மகன் யோசுவா போரில் வல்லவராய் இருந்தார்;
இறைவாக்கு உரைப்பதில் மோசேயின் வழித்தோன்றல் ஆனார்;
தமது பெயருக்கு ஏற்பப் பெரியவர் ஆனார்;
ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை எதிர்த்துவந்த பகைவர்களைப்
பழிக்குப் பழி வாங்கி மீட்பு வழங்கினார்;
இவ்வாறு இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தை அளித்தார்.


2 தம் கைகளை உயர்த்திப் பகைவரின் நகரங்களுக்கு எதிராய் வாளை வீசிய போது
எத்துணை மாட்சி அடைந்தார்!


3 அவருக்கு முன்னர் எவர் இவ்வாறு உறுதியாய் நின்றார்?
ஆண்டவருடைய போர்களை அவரே முன்னின்று நடத்தினார்.


4 அவருடைய கையால் கதிரவன் நின்றுவிடவில்லையா?
ஒரு நாள் இரு நாள் போல் ஆகவில்லையா?


5 பகைவர்கள் அவரைச் சூழ்ந்து நெருக்கியபோது
வலியவரான உன்னத இறைவனை அவர் துணைக்கு அழைத்தார்.
கொடிய வலிமை கொண்ட ஆலங்கட்டிகளை
மாபெரும் ஆண்டவர் அனுப்பி அவருக்குச் செவிசாய்த்தார்.


6 அவர் எதிரி நாட்டின்மீது போர்தொடுத்து அடக்கினார்;
மலைச் சரிவில் தம்மை எதிர்த்தவர்களை அழித்தார்.
இவ்வாறு அந்த நாடு அவருடைய படைவலிமையை அறிந்து கொண்டது;
அவர் ஆண்டவர் சார்பாகப் போரிட்டார் என்பதையும் தெரிந்துகொண்டது. [1]

காலேபு[தொகு]


7 யோசுவா வலிமை பொருந்திய கடவுளைப் பின்தொடர்ந்தார்;
மோசே காலத்தில் அவரைச் சார்ந்து நின்றார்.
அவரும் எபுன்னேயின் மகன் காலேபும்
இஸ்ரயேல் சபையை எதிர்த்து நின்றனர்;
பாவத்திலிருந்து மக்களைத் தடுத்தனர்;
நன்றி கொன்ற மக்களின் முறுமுறுப்பை அடக்கினர்.


8 ஆறு இலட்சம் காலாட்படையினருள்
இவர்கள் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்;
பாலும் தேனும் பொழியும் நாட்டை உரிமையாக்கிக் கொள்ள
மக்களை அழைத்துவந்தனர்.


9 ஆண்டவர் வலிமையைக் காலேபுக்கு அளித்தார்.
முதுமைவரை அது அவரோடு இருந்தது.
இதனால் அவர் மலைப்பாங்கான நிலத்திற்கு ஏறிச் சென்றார்;
அதையே அவருடைய வழிமரபினர் உரிமையாக்கிக்கொண்டனர்.


10 ஆண்டவரைப் பின்தொடர்வது நல்லது என்பதை
இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் இதனால் அறிவர். [2]

நீதித் தலைவர்கள்[தொகு]


11 நீதித் தலைவர்கள் ஒவ்வொருவரும்
அவரவர் தம் வழியில் பெயர் பெற்றிருந்தார்கள்.
அவர்களது உள்ளம் பிற தெய்வங்களை நாடவில்லை;
அவர்கள் ஆண்டவரிடமிருந்து அகன்று போகவில்லை.
அவர்களது புகழ் ஓங்குக!


12 அவர்களுடைய எலும்புகள்
அவை கிடக்கும் இடத்திலிருந்து புத்துயிர் பெற்றெழுக!
மாட்சி பெற்ற இம்மனிதரின் பெயர்கள்
அவர்களுடைய மக்களிடையே நிலைத்தோங்குக! [3]

சாமுவேல்[தொகு]


13 சாமுவேல் தம் ஆண்டவரின் அன்புக்கு உரியவரானார்;
ஆண்டவரின் இறைவாக்கினரான அவர் அரசை நிறுவினார்;
தம் மக்களுக்கு ஆளுநர்களைத் திருப்பொழிவு செய்தார்;


14 ஆண்டவருடைய திருச்சட்டப்படி மக்களுக்குத் தீர்ப்பு வழங்கினார்;
இவ்வாறு ஆண்டவர் யாக்கோபைக் கண்காணித்தார்.


15 தம் பற்றுறுதியால் அவர் இறைவாக்கினராக மெய்ப்பிக்கப்பெற்றார்;
தம் சொற்களால் நம்பிக்கைக்குரிய காட்சியாளர் என்று பெயர் பெற்றார்.


16 பகைவர்கள் அவரைச் சூழ்ந்து நெருக்கியபோது
வலியவரான ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்;
பால்குடி மறவா ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்தினார்;


17 ஆண்டவர் வானத்திலிருந்து இடி முழங்கச் செய்தார்;
பேரொலியிடையே தம் குரல் கேட்கச் செய்தார்.


18 தீர் நாட்டாருடைய தலைவர்களையும்
பெலிஸ்தியருடைய எல்லா ஆளுநர்களையும் அழித்தார்.


19 அவர் மீளாத் துயில் கொள்ளுமுன்,
'நான் சொத்துகளை, ஏன், காலணியைக்கூட
எவரிடமிருந்தும் கைப்பற்றியதில்லை' என்று
ஆண்டவர் முன்னிலையிலும்
அவரால் திருப்பொழிவு பெற்றவர் முன்னிலையிலும் சான்று பகர்ந்தார்.
எவரும் அவரைக் குறை கூறவில்லை.


20 அவர் துயில் கொண்டபின்னும் இறைவாக்கு உரைத்தார்;
மன்னருக்கு அவருடைய முடிவை வெளிப்படுத்தினார்;
மக்களுடைய தீநெறியைத் துடைத்துவிட
இறைவாக்காக மண்ணிலிருந்து தம் குரலை எழுப்பினார். [4]


குறிப்புகள்

[1] 46:1-6 = யோசு 1:11-23; எண் 27:18; இச 34:9.
[2] 46:7-10 = எண் 14:6-10.
[3] 46:11-12 = நீத 1:1-16:31.
[4] 46:13-20 = 1 சாமு 3:1-21; 7:1-10-27;
12:1-25; 16:1-13; 28:3.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 47 முதல் 48 வரை