பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 சேர மன்னர் வரலாறு



சோழக்கரையில் கோட்டை யொன்றைக் கட்டினான். பாண்டிப் பெருமாள் பரம்பா என்னுமிடத்தே முடி சூட்டிக்கொண்டு ஒன்பதாண்டு அரசு புரிந்துவிட்டுப் பாண்டு நாடு சென்றான். அவற்குப்பின் சோழப் பெருமாள் ஒருவன் வந்து பன்னிரண்டாண்டும் பாண்டிப் பெருமாள் ஒருவன் பன்னிரண்டாண்டும் ஆட்சி செய்து விட்டு நீங்கினர். இதற்கிடையே கலியுகம் பிறந்து பல ஆண்டுகள் கழிந்தன. கலியின் கொடுமை எழுவது கண்ட கேரள நாட்டு வேதியர்கள் “பூருவ தேசத்துப் பாணப் பெருமாள் என்ற ஒருவனைக் கொணர்ந்து கேரள நாட்டுக்கு வேந்தனாக்கினர். அவ் வேந்தன் புத்த சமயத்தை மேற்கொண்டான். புத்தர் கட்கும் வைதிக வேதியர்கட்கும் சமயச் சொற் போர் நடந்தது; முடிவில் புத்தர்கள் தோற்றனர்; வேந்தன் வைதிக சமயத்தை மேற்கொண்டு புத்தர்களை நாட்டினின்று வெருட்டிவிட்டான்; எனினும், நான்கு ஆண்டுகட்குப் பின் அவன் மெக்காவுக்குச் சென்றொழிந்தான்.

பின்பு துளுவன் பெருமாள் என்றொருவன் வட நாட்டினின்றும் போந்து கேரள நாட்டு அரசை மேற் கொண்டான்; தனது ஆட்சிக்குட்பட்ட நாட்டுக்கு துளு நாடு என்று பெயரிட்டான்; அத் துளுவன் ஆறாண்டு ஆட்சி செய்துவிட்டு இறந்தான். அவனை யடுத்து இந்திரப் பெருமாள் என்பவன் வேந்தனாகிக் கொடுங்கோளூரிலிருந்து பன்னீராண்டு ஆட்சி புரிந்துவிட்டுப் “பூருவ தேசம்” போய்ச் சேர்ந்தான். அவற்குப்பின் ஆரிய புரத்து ஆரியப் பெருமாள் என்பவன்