பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 179



கொள்ளாது இகழ்ந்து அவனைச் சினமூட்டினர் அதனால் அவனுக்கும் பொருந்திலர்க்கும் அருமண வாயில், உறத்தூர் என்ற இடங்களில் கடும் போர் நடந்தது. பொருந்திலர் வலியிழந்து அடங்கினர். அருமணம் இப்போது அரிமளம் என வழங்குகிறது.

பொருந்திலரை வென்று எவ்வியின் துணை பெற்றுச் சிறந்த நெடுமிடலஞ்சிக்கு இந் நிகழ்ச்சியால் நாட்டில் பெருமிதப்புண்டாயிற்று. அவனுக்கும் தற்பெருமை யுணர்வு மிகுந்தது; செருக்கும் சிறிது மீதூர்ந்தது. இதனால், நார்முடிச் சேரல் நன்னன்பால் பெற்ற வெற்றி கேட்கவும், நெடுமிடலஞ்சிக்கு அவன்பால் அழுக்காறு தோன்றிற்று. நெடுங்கள் நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் வையை யாறு பாயும் வளவிய நாடுளது. அதனை இடைக்காலக் கல்வெட்டுகள் அளநாடு எனக் குறிக்கின்றன. அந் நாட்டின் எல்லையில் சேர நாட்டுத் தலைவர் காவல் புரிந்தனர். இப் பகுதியில், தேனி, சின்னமனூர், கம்பம் முதலிய ஊர்கள் இருந்து இன்றும் செல்வம் சிறந்து திகழ்கின்றன. பண்டை நாளில் பாண்டி நாட்டினின்றும் சேர நாடு செல்வோர்க்கு இந் நாடு பெரு வழியாக விளங்கிற்று. நார்முடிச்சேரலைப் போர்க்கிழுத்தல் வேண்டி நெடுமிடல் அளநாட்டின் மேற்படை யெடுத்தான். அவனது படைப் பெருமை கண்டு அஞ்சி ஆற்றாது சேரர் தலைவர் தோல்வியுற்றனர்.

இச் செய்தி நார்முடிச் சேரலுக்குத் தெரிந்தது. அதன் தன் பெரும்படை யொன்றை வையை யாற்றின் கரை வழியாகச் செலுத்தினன். சேரமான் படையில்