உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஊர் நாயிற் கடையானேன்!

சுதந்திரம் என்பது அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல; தற்சார்பு நிலையில் வாழ்வது மாகும்! இந்தச் சுத்ந்திரம் ஆன்மாக்களுக்கு, திருவருளைச் சார்ந்த வழிதான் கிடைக்கும். ஆன்மாக்கள் இறைவனுக்கு அடிமையாய் வாழ்வதில் சுதந்திரத்தை இழப்பதில்லை. ஏன்? இறைவன். குறியொன்றும் இல்லாதவன். ஆதலால், ஆன்மாக்களை அடிமைப்படுத்தமாட்டான். சீவன் மூத்த நிலையில் ஆன்மாக்களின் அடிமைப் பண்பு தன் விருப்பமேயாம்.

சுதந்திரம் இல்லாதன எல்லாம் சுதந்திரமான ஒன்றிற்கு உடைமையாக இருத்தல் இயல்பு. ஆன்மாக் களுக்குச் சுதந்திரம் இல்லை. ஆன்மாக்கள் ஆணவத்துடன் கூடி, ஆணவத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கும் பொழுது, ஆணவத்தின் வழியிலேயே வாழும். அருட்சத்தியின் அருளால் தெய்வம் என்னும் சித்தம் உண்டாகி மடைமாற்றம் ஏற்பட்டு விருப்பு-வெறுப்புக்களிலிருந்து ஆன்மா விடுதலை பெறும். திருவருளைக் கண்ணாகக் கொண்டு வாழும் இந்த நிலையில் ஆன்மா திருவருள் ஆட்டுவிக்கும் வழியிலேயே வாழும்; ஆடும்! இந்த உலகம் முழுதும், உயிர்கள் அனைத்தும் கடவுளுக்கே உரிமை உடையன. ஆதலால் இறைவனுக்கு ஆன்மாக்கள் உடைமைப் பொருள்கள்!