47
கைப்பற்றியது அறநெறி அன்று; ஆண்மையும் அன்று. ஆதலின், ‘இந்தக் கோட்டை உனக்குரியது’ என்று சொல்லித் திறந்து அவனுக்கு உரியதாக்கி விடுவது நல்லது. அவ்வாறு செய்ய மனமின்றி உன் ஆண்மையைக் காட்டவேண்டுமானால் கோட்டையைத் திறந்து போர் செய்வது இரண்டும் செய்யாமல் கதவை அடைத்துக்கொண்டு ஒரு மூலையிலே பதுங்கியிருத்தல் அறமும் அன்று; ஆண்மையும் அன்று. இது கோழையின் செயல்.”
நெடுங்கிள்ளி இப்போது பேசலானான்: “ஆண்மை நெறியென்றும் அறநெறியென்றும் சொன்னீர்களே. அறநெறிப்படியே செய்வதாக நான் விரும்பிக் கோட்டையின் கதவைத் திறந்து விட்டால் நலங்கிள்ளியின் படை உள்ளே புகுந்து என் படையை அழித்துவிடாதா?” என்று கேட்டான்.
“அறம் என்பது எல்லாருக்கும் பொது. நீ அறங்கருதித் திறந்தாயானால் பிறகு போர் ஏன்? பகை ஏது? உன் வீட்டில் நீயே வந்து இரு என்று வீட்டை விடும்போது, பழைய பகையை நினைத்துச் சண்டை போடுவது புல்லியோர் இயல்பு. நலங்கிள்ளி அத்தகையவன் அல்லன். நீ சமாதானத்தை விரும்புகிறாய் என்று தெரிந்தால் அவன் உன்னையும் உன் படைவீரர்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் ஒன்றும் செய்ய மாட்டான். ஒரு குலத்திற் பிறந்த உன்னைத் துன்புறுத்துவதனால் அவனுக்கு ஊதியம் ஏதும் இல்லை” என்று அறிவுறுத்தினார் கோவூர் கிழார்.