திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யூதா எழுதிய திருமுகம்/அதிகாரம் 1
இத்திருமுகம் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது. இது காலத்தால் மிகவும் பிந்தியது; பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்தோடு மிகவும் தொடர்புடையது. இத்திருமுகத்தின் சில வசனங்கள் (13,14,15) ஏனோக்கு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்
[தொகு]இத்திருமுகத்தின் ஆசிரியர் தம்மை, "இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமான யூதா" எனக் குறிப்பிடுகிறார். எனினும், இவர் திருத்தூதருள் ஒருவரான யூதாவாக இருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் இத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர் (17-18); நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; இத்திருமுகம் நல்ல கிரேக்க மொழி நடையில் அமைந்துள்ளது.
"இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" (மத் 13:15) என நற்செய்தி நூல்களில் படிக்கிறோம். இதன் அடிப்படையில் இத்திருமுக ஆசிரியர் நற்செய்தி நூல்களில் கூறப்படும் இயேசுவின் சகோதரருள் ஒருவராக இருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். எனினும் மேலே கூறிய காரணங்களை முன்னிட்டு இக்கருத்தையும் ஏற்றுக்கொள்வது கடினம்.
நோக்கம்
[தொகு]சில சபைகளில் போலிப் போதகர்களின் தவறான போதனைகளால் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். அவர்களிடமிருந்து வாசகர்களைக் காத்துக் கொள்ள ஆசிரியர் இத்திருமுகத்தை எழுதியிருக்கவேண்டும்.
உள்ளடக்கம்
[தொகு]போலிப் போதகர்கள் பற்றிப் பேசும் திருமுக ஆசிரியர், அவர்களுக்குக் கடவுளின் தண்டனை வரப்போகிறது என்கிறார்; யூத மரபின் அடிப்படையில் இதை விளக்குகிறார் (1-16). தம் வாசகர்கள் திருத்தூதர்களின் போதனைகளை உண்மையாய்க் கடைப்பிடிக்குமாறு ஆசிரியர் அறிவுரை கூறுகிறார்; அத்துடன் கிறிஸ்தவ அன்பின் கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றவும் பணிக்கிறார் (17-23).
யூதா
[தொகு]நூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | நூல் அதிகாரத்தில் உள்ள வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை (வாழ்த்து) | வச 1-2 | 466 |
2. போலிப் போதகர்கள் | வச 3-16 | 466 - 467 |
3. விசுவாசத்தைக் காக்குமாறு எச்சரிக்கையும் அறிவுரையும் | வச 17-23 | 467 |
4. முடிவுரை | வச 24-25 | 467 |
யூதா (Jude)
[தொகு]1. முன்னுரை
[தொகு]வாழ்த்து
[தொகு]
1 தந்தையாம் கடவுளால் அழைக்கப்பெற்று
அவரது அன்பிலும் இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்வோருக்கு,
இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது: [1]
2 இரக்கமும் அமைதியும் அன்பும் உங்களில் பெருகுக!
2. போலிப் போதகர்கள்
[தொகு]
3 அன்பார்ந்தவர்களே,
நம்மெல்லாருக்கும் கிடைத்துள்ள பொதுவான மீட்பைக் குறித்து
உங்களுக்கு நான் எழுத மிகவும் ஆர்வமாய் இருந்தேன்.
ஆனால் எல்லாக் காலத்துக்குமென இறைமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட
விசுவாசத்துக்காகப் போராடும்படி உங்களை ஊக்குவிக்க
இதை எழுதும் தேவை ஏற்பட்டுள்ளது.
4 ஏனெனில், திருட்டுத்தனமாகச் சிலர் உங்களிடையே புகுந்துள்ளனர்.
இவர்கள் தண்டனைக்குள்ளாகவேண்டுமென்று முன்னரே எழுதப்பட்டுள்ளது.
இறைப்பற்றில்லாத இவர்கள் நம்முடைய கடவுளின் அருளைத்
தங்கள் காமவெறிக்கு ஏற்பத் திரித்துக் கூறுகிறார்கள்.
நம் ஒரே தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கின்றார்கள்.
5 நீங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.
ஆயினும் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.
ஆண்டவர் எகிப்து நாட்டிலிருந்து மக்களை ஒரேமுறையாக விடுவித்தாரெனினும்,
தம்மை நம்பாதவர்களைப் பின்னர் அழித்து விட்டார். [2]
6 சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல்,
தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள்.
என்றும் கட்டப்பட்டவர்களாய் அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக்
காரிருளில் வைத்திருக்கிறார்.
7 அவர்களைப்போலவே, சோதோம், கொமோரா
அவற்றின் சுற்றுப்புற நகரங்கள் ஆகியவற்றின் மக்கள்
பரத்தைமையிலும் இயற்கைக்கு மாறான சிற்றின்பத்திலும் மூழ்கியிருந்தார்கள்.
ஆகவே அவர்கள் என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள்.
அவர்கள் நமக்கொரு பாடமாய் உள்ளார்கள். [3]
8 இருப்பினும் இப்பொய்க் காட்சியாளர்களும் அவ்வாறே உடலை மாசுபடுத்துகிறார்கள்;
அதிகாரத்தைப் புறக்கணிக்கிறார்கள்; மாட்சிமிகு வானவரைப் பழித்துரைக்கிறார்கள்.
9 தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து
அலகையோடு வழக்காடியபோது
அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை.
மாறாக, "ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக" என்று மட்டும் சொன்னார். [4]
10 ஆனால் இவர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றையும் பழிக்கிறார்கள்.
பகுத்தறிவில்லாத விலங்குகளைப்போல்
இயல்புணர்ச்சியினால் இவர்கள் அறிந்திருப்பதும் இவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.
11 இவர்களுக்குக் கேடு விளைக!
ஏனெனில் இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்;
கூலிக்காகப் பிலயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்;
கோராகைப் போல எதிர்த்து நின்று அழிந்தார்கள். [5]
12 இவர்கள் அச்சமின்றி உங்கள் அன்பின் விருந்துகளில் கூடி உண்டு
அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள்.
இவர்கள் தங்கள் நலனில் மட்டுமே கருத்தாய் இருப்பவர்கள்;
காற்றால் அடித்துச் செல்லப்படும் நீரற்ற மேகங்கள்;
கனிதரும் காலத்தில் கனி தராமல்,
பின்னர் வேரோடு பிடுங்கப்படும் மரங்களைப் போல இருமுறை செத்தவர்கள்.
13 தங்களுடைய வெட்கக்கேடுகளை நுரையாகத் தள்ளுகின்ற
கொந்தளிக்கும் கடல் அலைகள்;
வழிதவறித் திரியும் விண்மீன்கள்.
என்றென்றும் உள்ள காரிருளே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
14-15 ஆதாமுக்குப்பின் ஏழாந்தலைமுறையான ஏனோக்கு இவர்களைக் குறித்து,
"இதோ ஆண்டவர் எல்லாருக்கும் தீர்ப்பளிக்கத்
தம் பல்லாயிரக்கணக்கான தூயவர்களோடு வந்து விட்டார்.
இறைப்பற்றில்லாதவர்கள் செய்த அனைத்துத் தீயசெயல்களுக்காகவும்,
இறைப்பற்றில்லாத பாவிகள் பேசிய அனைத்துக் கடுஞ்சொற்களுக்காகவும்
தண்டனை வழங்குவார்" என்று முன்னுரைத்துள்ளார். [6]
16 இவர்கள் எப்போதும் முணுமுணுப்பவர்கள்; குறை கூறுபவர்கள்;
தங்கள் தீய நாட்டங்களின்படி வாழ்பவர்கள்;
வரம்பு மீறிப் பெருமை பேசுபவர்கள்;
தங்கள் நலனுக்காகப் பிறரைப் போலியாகப் புகழ்பவர்கள்.
3. விசுவாசத்தைக் காக்குமாறு எச்சரிக்கையும் அறிவுரையும்
[தொகு]
17 அன்பார்ந்தவர்களே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை
நினைவில் கொள்ளுங்கள்.
18 ஏனெனில், "இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து
ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர்"
என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள். [7]
19 இவர்கள் பிரிவினை உண்டுபண்ணுபவர்கள்;
மனித இயல்பின்படி நடப்பவர்கள்;
கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.
20 அன்பானவர்களே,
தூய்மை மிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு
உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்;
தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.
21 கடவுளது அன்பில் நிலைத்திருங்கள்.
என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்.
22 நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்.
23 வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள்.
மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்;
ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
4. முடிவுரை
[தொகு]இறையாசி
[தொகு]
24-25 வழுவாதபடி உங்களைக் காக்கவும்
தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை
மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு,
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய்,
மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும்
ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!
- குறிப்புகள்
[1] 1 = மத் 13:55; மாற் 6:3.
[2] 5 = விப 12:51; எண் 14:29,30.
[3] 7 = தொநூ 19:1-24.
[4] 9 = தானி 10:13,21; 12:1; திவெ 12:7; இச 34:6; செக் 3:2.
[5] 11 = தொநூ 4:3-8; எண் 22:1-35; 16:1-35.
[6] 14 = தொநூ 3:18,21-24.
[7] 18 = 2 பேது 3:3.
(யூதா எழுதிய திருமுகம் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை