பக்கம்:முந்நீர் விழா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

முந்நீர் விழா

 "விச்சுளிப் பாய்ச்சலை நான் சரியாகப் பார்க்க வில்லை. இன்னும் ஒரு முறை பார்க்கவேண்டும். இரண்டாந் தடவையும் நீ செய்து காட்டினல் இரண்டாவது மோதிரம் கிடைக்கும்” என்றான் அரசன்.

கழைக்கூத்தி விடை கூறவில்லை. அவளுக்கு அருகில் நின்றவன்-அவளுக்குத் தந்தை அவன்-மறுமொழி சொன்னான். “மன்னர் மன்னா, அப்படிக் கட்டளை பிறப்பிக்கக் கூடாது. விச்சுளிப் பாய்ச்சல் அவ்வளவு எளிதான வேலை அன்று. மூச்சை அடக்கிச் செய்யவேண்டும். அதை ஒருமுறை செய்தால் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இதைக் கடைசியில் செய்கிறோம்' என்றான்.

'இவளைப் பார்த்தால் களைப்படைந்தவளாகத் தெரியவில்லையே! இன்னும் பல விளையாட்டுக்களைச் செய்யக்கூடியவள் என்று தோன்றுகிறதே!" என்றான் பாண்டியன்.

"அப்படித் தோன்றிலுைம் இவள் இயல்பு எனக்குத் தெரியும். கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்கள். ஏதோ இந்த மட்டில் இவள் சாமர்த்தியமாகச் செய்தாளே என்று மகிழ்ச்சி அடைகிறேன். மன்னர் பிரான் சோதனை செய்யக்கூடாது.”

"நான் பார்க்கவில்லையே! அதற்கு என்ன செய்வது? எப்படியாவது விச்சுளிப் பாய்ச்சலைப் பார்க்க வழி செய்யவேண்டும்.” .

"அரசர் பிரானுடைய ஆணையை மீறுவது முறையன்று என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் எனக்கு மகளை உயிரோடு கொடுங்கள். இரண்டாம் முறையும் கம்பத்தில் ஏறினால் என் மகள் உயிரோடு மீளுவாள் என்ற உறுதி எனக்கு இல்லை. வேண்டுமானல் பின் ஒரு நாள் செய்துகாட்டச் சொல்கிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/53&oldid=1207491" இலிருந்து மீள்விக்கப்பட்டது