60
வாழலாம். பகையோடு ஒரு நாட்டில் வாழ முடியாது. நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? நம்மிடம் படைப்பலம் இல்லையா?” என்றான் அரசன் நலங்கிள்ளி.
இளந்தத்தனாரை நெடுங்கிள்ளி சிறையில் வைத்து வருத்தினதையும் அவரைக் கொன்றுவிட முயன்றதையும் கேட்டபோது நலங்கிள்ளியின் குருதி துடித்தது. சோழ நாட்டிற்கே இதைக் காட்டிலும் வேறு அவமானம் இல்லையென்று எண்ணினான். தன் ஊரைப் பிடித்துக்கொண்டு அடைத்திருப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம்; புலவரைக் கொல்லத் துணிந்த இந்த அடாத செயலைப் பொறுக்கக்கூடாது என்று தோன்றியது. “நெடுங்கிள்ளியைப் பற்றிக்கொண்டு வந்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்து கொல்லவேண்டும். மன்னர் குலத்துக்கே யல்லவா மாசு தேடிக்கொண்டான், அந்தப் பாவி? தமிழ் நிலத்துக்கு, தமிழ் மரபுக்கு, தமிழன் சான்றாண்மைக்குத் தகாத செயலையல்லவா அவன் செய்து விட்டான்?” என்று அவன் கனன்றான். அவன் அரசன் அல்லவா? அவனுடைய கோபம் பொங்கியது. கண்கள் சிவந்தன. அந்த நிலையில் யார் எதிரே நின்றாலும் கண்பார்வையாலே சுட்டு விடுவான். “இனி ஒரு கணமும் தாமதம் செய்யக் கூடாது. படைத் தலைவரை அழைத்து வா” என்றான். படைத்தலைவர் வந்து முன் நின்றர். “உடனே படையைக் கொண்டு சென்று உறையூரை முற்றுகையிடுங்கள்” என்று கட்டளையிட்டு விட்டான்.