பக்கம்:கோவூர் கிழார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அவரை அனுப்பினான். புலவர்களுக்குச் சமாதானம் செய்விப்பதில் விருப்பம் அதிகம். உலகனைத்தும் பகைமையின்றிப் போரின்றி வாழ வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். அதற்குத் தங்களால் இயன்றவற்றைச் சந்தர்ப்பம் நேரும் பொழுதெல்லாம் செய்வார்கள்.

புலவர் இளந்தத்தனார் தமக்குச் சந்து செய்விக்கும் வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைந்தார். “கோவூர்கிழார் இப்போது இருந்தால் அவர் மிக்க திறமையுடன் இதனைச் செய்து வெற்றி பெறுவார். அவருக்கு உள்ள சொல்லாற்றலும் புலமையும் ஒளியும் என்னிடம் இல்லை. ஆயினும் நல்ல செயலை ஒல்லும் வகையில் செய்வது என் கடமை” என்று சொல்லி நலங்கிள்ளியிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். உறையூரை அணுகித் தாம் புலவர் என் பதை அறிவித்துக் கோட்டைக்குள் சென்றார். யாரோ ஒற்றன் அப் புலவர் நலங்கிள்ளியிடம் சென்று வருவதைக் கவனித்தான். அவரைப் புலவர் என்று தெளியாமல், நலங்கிள்ளியினுடைய ஒற்றன் புலவர் கோலம் புனைந்து வருகிறான் என்று எண்ணிவிட்டான். தன் கருத்தை நெடுங் கிள்ளியிடமும் தெரிவித்தான்.

இளந்தத்தனார் அரண்மனைக்குட் புகுந்து நெடுங்கிள்ளியை அணுகினார். அவனே வாழ்த்தினார். அவரை ஒற்றனென்று எண்ணிய நெடுங்கிள்ளி உடனே அவரைப் பற்றிச் சிறையில் வைக்கப் பணித்தான். பாவம்! புலவர் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/59&oldid=1111081" இலிருந்து மீள்விக்கப்பட்டது