பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமை

9

திருப்ப முயலவேண்டும் என்று அரசியல்வாதி சூழ்ச்சி பேசுகிறான். தன் சுயநலத்திற்கும் அதிகார வெறிக்கும் இளமையைப் பலி கொடுக்க அவன் தந்திரம் செய்கிறான். வேகம் நிறைந்த இளமை அதிலே சில சமயங்களில் வீழ்ந்துவிடுகிறது. ஆனால், இளமைக்குத் தோல்வி என்பது கிடையாது. ஒரு கணம் அது தலைகுனிந்தாலும் மறுகணத்திலே தலை நிமிர்ந்து, தந்திரத்தையும் சூழ்ச்சியையும் சாடித் தகர்த்தெறிந்து விட்டு முன் செல்லுகிறது.

வயது அதிகப்படுவதால் மட்டும் ஒருவன் இளமையை இழப்பதில்லை. இளமையின் உள்ளக் கனலை அழியாது போற்றி வளர்ப்பவன் என்றும் இளமை யோடிருக்கிறான். “காலனைக் காலால் உதைப்பேன்” என்று வீறுபேசும் இளமை வீரத்தைக் கைவிடாதவன் என்றும் உயிரோடிருக்கிறான்.

இளமை ஓடுகிற பாம்பைக் காலால் மிதித் தழிக்கத் துள்ளி எழுகிறது. அச்சத்தைக் கண்டு சிரிக்கிறது. தோல்வியை எள்ளி நகையாடுகிறது.

இளைஞர்களே, உங்கள் பெருமையை உணர்ந்து கொள்ளுங்கள். மிகப்பெரிய எதிர்காலம் உங்களுடையது. எழுந்து நில்லுங்கள்; தோளைப் புடைத்து, மார் தட்டி, வீர முழக்கம் செய்யுங்கள். தவறுகளால் கட்டுண்டு இருளில் மூழ்கி உழலாதீர்கள். கண்ணைத் துடைத்துக்கொண்டு உங்கள் உண்மை வடிவத்தைக் காணுங்கள். உங்கள் வலிமையின் பேராற்றலை உணர்ந்து முன் செல்லுங்கள்.