65
தைரியங் கூற முயன்றார்கள். ஆனால், அவர்களால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. “என் உயிரைக் காப்பாற்றிய இந்தப் பையனின் தங்கைக்கே ஆபத்து. வந்துவிட்டதே” என்று மருதாசலம் மனம் பதைத்தான்.
“இந்தப் பக்கத்திலே புலியெல்லாம் இருக்குமா?” என்று சுந்தரம் தயங்கித் தயங்கிக் கேட்டான். அவனுக்குத் தங்கமணியிடத்திலும், கண்ணகியிடத்திலும் எத்தனை அன்பு இருந்தது என்பது அப்போது வெளிப்பட்டது. அவன் கேலியாகப் பேசிக் கொண்டிருந்த காலத்திலெல்லாம் அந்த அன்பு அவ்வளவு நன்றாக வெளியில் தெரியவில்லை. சுந்தரத்தின் கண்கள் கலங்கின. அவன் ஏக்கத்தோடு தில்லைநாயகத்தின் பதிலை எதிர்பார்த்து நின்றான்.
“இங்கே சிறுத்தைப் புலிதான் உண்டு; அதுவும் பகல் நேரத்திலே வராது” என்று மருதாசலம் யோசனை செய்து கொண்டே பதிலளித்தான்.
“மணி, அத்தைக்கு என்னடா பதில் சொல்வது? இப்படி ஏமாந்து இருந்துவிட்டோமே!” என்று தொண்டை விக்க விக்கச் சுந்தரம் கூறினான்.
“சுந்தரம், நாம் சோர்வடையாமல் தேடிப் பார்ப்போம். மனம் கலங்கினால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. அம்மாளும் அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறார்கள்” என்று தங்கமணி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் வகை யில் சுந்தரத்தைப் பார்த்துச் சொன்னான். இந்தச் சமயத்தில் மருதாசலம் நாவல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த பக்கமாக ஓடினான். அந்தப் பக்கத்தில் அதிக தூரம் போய் அவர்கள் தேடவில்லை. மருதாசலம் அங்கே இருந்த ஏதோ ஒரு இடத்தை நினைத்துக்கொண்டு ஓட்டமாகச் சென்றான்.
கொஞ்ச நேரத்தில் குதூகலமாக அவன் உரத்துக் கூவுகின்ற சத்தம் கேட்டது. “எல்லாரும் இங்கே வாருங்கள்” என்று அவன் கூவிக்கொண்டே திரும்பி ஓடி வந்தான். அவனை நோக்கி மற்ற மூவரும் பாய்ந்து சென்றனர். மருதாசலம் முன்னால் வழி காட்டிக்கொண்டே ஓட, மற்றவர்கள் பின் தொடர்ந்
கொ. ம. கு-7