பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“கொடுமைகள் இனிமேல் உனக்கில்லை.
கூண்டில் வாழ்வதும் இனியில்லை.
விடுதலை பெற்றுப் பறந்திடுவாய்.
வேண்டும் இடங்கள் சென்றிடுவாய்.”

உரைத்தனன் இப்படி. அக்கிளியை
உயரப் பறக்க விட்டனனே.
பறந்திடும் கிளியை வெகுநேரம்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனனே.

அரைமணி நேரம் ஆனதன்பின்
அடைந்தனன் கண்ணன் தன்வீட்டை.
விரைவாய்ப் பல்லைத் துலக்கினனே;
முகம்கால் கைகள் கழுவினனே.

துண்டால் முகத்தைத் துடைக்கையிலே,
தொப்பென ஏதோ வீழ்ந்ததுவே.
கண்ணனின் கண்கள் எதிரினிலே
கண்டன ஆப்பிள் பழம் ஒன்றை!

உடனே நிமிர்ந்து பார்த்தனனே.
“ஓகோ, நமது கிளியேதான் !
அடடே, நமக்குப் பரிசாக
ஆப்பிள் தந்தது” எனமகிழ்ந்தான்.

83