பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாண்டியன் நெடுஞ்செழியன்

அன்னியென்பவனோடு போர் செய்து அவனை வென்றவன் அவன். கோசர் என்னும் கூட்டத்தினரோடு பொருது அழித்தவன். அவனிடம் சோழன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, அவன் தன்னிடமுள்ள படைகளோடு துணை வருவதாக ஒப்புக் கொண்டான். சேரனும் திதியனும் இணங்கி வந்தபோது சோழனுக்குப் போரில் வெற்றியே கிட்டியது போன்ற மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. பொருநன் என்ற வேள் ஒருவனும் இந்த முயற்சியில் சேர்ந்துகொண்டான்.

வேற்று நாட்டில் உள்ள வேளிர்களையும் சேர்த்துக்கொண்டால் நலம் என்று அவர்கள் எண்ணினார்கள். எருமையூரனைக் கேட்டால் ஒருகால் அவனும் சேரலாம் என்று சேரன் சொன்னன். இன்று மைசூர் என்று வழங்கும் ஊருக்கு வடமொழியில் மஹிஷபுரம் என்று பெயர். அதுவே எருமையூர் என்று தமிழில் வழங்கியது. அக்காலத்தில் அது பெரிய அரசாக இருக்கவில்லை. அதை ஒரு வேளே ஆண்டு வந்தான்; குறுநில மன்னனென்றே சொல்ல வேண்டும். அவனிடம் சிறந்த படை ஒன்று இருந்தது. சோழன், திதியன், பொருநன் மூவரும் அவனிடம் சென்றனர்; சேரன் துணை வருவதாக இருப்பதையும் சொல்லித் தம் கருத்தைத் தெளிவாகச் சொன்னார்கள்.

வலிய வரும் செல்வத்தை வேண்டாம் என்று சொல்வார் யார்? பாண்டி நாட்டின் வளத்தைப்பற்றி எருமையூரன் முன்பே கேட்டிருக்கிறான். மதுரை மாநகர் இந்நாட்டில் வேறு எங்கும் காணாத சிறப்புடைய தென்பதைப் புலவர்கள் சொல்லக் கேட்