பக்கம்:கோயில் மணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

அப்போது அங்கே இருந்தவன் ஒருவன் குழந்தையைப் பார்த்தான். அவன் பஜனைக்கு வந்து பார்த்தவன். இந்தக் குழந்தையை அங்கே பார்த்ததாக நினைவு இருந்தமையால், அழும் குழந்தையை எடுத்துக்கொண்டு பஜனை மடம் உள்ள வீதியை நோக்கி வந்தான். குழந்தை ராமு, “அம்மா! அம்மா!” என்று அழுது கொண்டிருந்தான். அவனைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் அவனை ஒருவன் எடுத்து வருவதை அறிந்து, வாங்கிச் சென்று தாயினிடம் விட்டார்கள்.

“என் கண்ணே! எங்கேயடா போனாய்?” என்று தாவிப் பற்றிக்கொண்டாள் தாய்.

அவனை எடுத்து வந்தவன், “என்ன அம்மா, இப்படிக் குழந்தையைத் தனியே விடலாமா? கையில் காப்பு வேறு போட்டிருக்கிறீர்கள். காலம் கெட்டுக் கிடக்கிறதே” என்று எச்சரித்தான்.

அம்புஜம் உள்ளே குழந்தையை அழைத்துச் சென்று முதல் காரியமாகக் கை வளைகளைக் கழற்றினாள். குழந்தைக்குத் தின்பண்டம் தந்தாள். “எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டாள்.

குழந்தை அழுகை ஓய்ந்து, “கண்ணனுக்கு வடை கொடுக்கப் போனேன்” என்றான்.

“அது யாருடா கண்ணன்? உனக்குச் சொக்குப் பொடி போட்டு மயக்கி விட்டானா அவன்? சேரியிலே எந்தப் பயல் உன்னை ஏமாற்றுகிறானோ தெரியவில்லையே!” என்று கூவினாள்.

“அதுதான் அம்மா, குண்டு மூஞ்சியா, கறுப்பா, அழகா, மாடு மேய்க்கிறானே; அந்தக் கண்ணன்.”

“ஐயோ! எந்தப் படுபாவியோ என் குழந்தையை மயக்கி ஆபத்திலே சிக்கும்படி வைத்து விட்டானே! அவன் தலையில் இடி விழ!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/22&oldid=1382764" இலிருந்து மீள்விக்கப்பட்டது