பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குமரியின் மூக்குத்தி

தன் பேரனை இடுப்பிலே வைத்திருக்கும் கோலம் அவள் கண்ணிலே பட்டது. அதோடு சேர்ந்தாற்போல் அவள் பெண் பேசின பேச்சும் காதிலே பட்டது.'அட அதிசயமே!’ என்றுதான் முதலில் பாலகிருஷ்ணனுடைய தாய் நினைத்தாள்.அடுத்த கணமே, 'அதிசயந்தான்' என்ற உண்மையான எண்ணம் உண்டாயிற்று. 'இரண்டு வயசில் இவ்வளவு வளப்பத்தோடு ஊரில் உள்ள குழந்தைகள் இருக்கின்றனவா? பொட்டலங் கட்டும் காகிதத்தில் சில குழந்தைகளின் படம் வருகிறதே, அப்படி யல்லவா இந்தக் குழந்தை இருக்கிறது...'

மறுபடியும் அந்தக் குழந்தையை நன்றாகப் பார்த்தாள். கொழு கொழுவென்றிருந்த கோலத்தைக் கண்ணால் முகந்து முகந்து பருகினாள்.'அதிசயமான குழந்தைதான்.எந்தத் தாயும் பெருமைப்பட வேண்டிய குழந்தை என்ற தீர்மானத்துக்கு வந்தாள்."நமக்கு ஒருநோஞ்சல் குழந்தைகூட அதிசயந்தான். இங்கே மலட்டு மரமல்லவா வளர்கிறது!” என்று அலுத்துக் கொண்டாள். -

"அம்மா, குழந்தையை உள்ளே கொண்டு வா; பால் கொடுக்க வேண்டும்"என்று குழந்தையின் தாய் சொன்னது இவள் காதில் விழுந்தது. தாய்ப் பாலின் ஊட்டந்தான் அந்தக் குழந்தைக்கு அவ்வளவு வளப்பத்தையும் பொலிவையும் கொடுத்திருக்கிறது என்பது அவளுக்கு நினைவு வந்தது.

எதிர்வீட்டு ராமனுடைய பெண் தன்குழந்தையை எடுத்துக்கொண்டு பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தாள்.

"குழந்தைக்கு என்ன அம்மா கொடுக்கிறாய்?" என்று கேட்டாள் பாலகிருஷ்ணன் தாய்.

"என் பால்தான்" என்று அலட்சியமாகச் சொன்னாள் அந்தப் பெண்.

"பார்த்தாயா? நான் நினைத்தேன்" என்று சட்டென்று பாலகிருஷ்ணன் தாய் கூறினாள்.